(Reading time: 14 - 27 minutes)

"சாரி சார்"

கார் ஒன்று வீட்டின் முன்பு வந்து நின்றது. அதிலிருந்து வசந்த் இறங்கி வந்தான். குளிரில் உடல் சில்லிட்டதால் தன் கைகளை பரபரவென தேய்த்துக்கொண்ட வசந்த் ஜானை நோக்கினான்.

"என்ன ஜான், பிக்பாக்கெட் திருடன் போலீஸ் கிட்ட மாட்டிக்கிட்ட குற்றவாளி போல உட்கார்ந்திருக்க"

"ஜெஸிகா இதயத்தை திருட போனேன் அதான் கைது பண்ணி உட்கார வச்சிருக்காங்க"

"என்னடா லூசு மாதிரி பேசுற"

"ஜெஸிகாவுக்கும் உனக்கும் உதவி செஞ்சேன்ல அதுக்கு பரிகாரம் அனுபவிச்சிட்டு இருக்கேன்"

"விவரமா சொல்லுடா"

"அந்த சொட்ட தலை டைரக்டர்.." என ஜான் துவங்க தடியர்களில் ஒருவன் முறைப்பதைக் கண்டு சொல்ல வந்ததை நிறுத்தினான் ஜான்.

"என்னடா?"

"அதாண்டா, தலை நிறைய அடர்த்தியான முடியை வச்சிக்கிட்டு ரோலர் சீப்பால வாரிட்டு வருவாரே டைரக்டர்.."

"அப்படி யாரும் இங்க இல்லையே. சொட்ட தலையோடு ஒரே ஒரு டைரக்டர் மட்டுமே இருக்காரு"

தடியர்கள் இருவரும் ஜானை முறைத்தனர்.

"நான் சொல்லலப்பா. அவன் தான் சொன்னான்" என்றபடி வசந்தை பார்த்த ஜான். "அவர் தான் என்னை அரெஸ்ட் பண்ணி வைக்க சொல்லிருக்காரு. இந்த தடியனுங்க கிட்ட இருந்து என்னை காப்பாத்துடா. ரொம்ப நேரமா ரெஸ்ட் ரூம் போக முடியாம தவிச்சிட்டு இருக்கேன்"

"எழுந்து போக வேண்டியது தான"

"எங்கே போனாலும் இவனுங்களும் கூட வரேன்னு சொல்லுறானுங்க. குரூப்பா போக வேண்டிய இடமா அது. நாலு பேரு பார்த்தா என்ன நினைப்பாங்க"

"சரி சரி, வா ஷூட்டிங் பாக்க போலாம்"

"இவனுங்க விட்டா தான வரதுக்கு"

"டைரக்டர் கிட்ட நான் சொல்லிக்கறேன் அவனை விடுங்க" என்று தடியர்களிடமிருந்து ஜானை மீட்டான் வசந்த்.

"இப்போ தாண்ட சுதந்திர காத்து சுவாசிக்குறேன்"

"உன் வாயை கொஞ்சம் மூடிட்டு இருந்தா இந்த நிலைமை வந்திருக்குமா"

"முயற்சி பண்றேன் ஆனா முடிய மாட்டுதே"

மழை பூமிக்கு வர துவங்கியது. பெரும் காற்றுடனும் மின்னல் இடியுடனும் பயங்கரமாக வந்தது மழை. வெளியில் நின்றிருந்தவர்கள் வீட்டினுள் ஓடினார்கள். வீட்டில் இடம் கிடைக்காதவர்கள் கார் ஷெட்டில் தஞ்சம் புகுந்தனர். சரியான சூரிய ஒளி இல்லாததால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.

டைரக்டரும் அவரது காதலியான மாடல் பெண்ணும் நாற்காலியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அவர்களின் அருகில் சென்ற ஜான் மாடல் பெண்ணிடம் அசடு வழிந்தபடி பேசத் தொடங்கினான்.

"ஹாய் மேடம்! என்னை ஞாபகம் இருக்கா?"

மாடல் பெண் முறைத்தாள். "சாரி, எனக்கு தெரியாது"

"என்ன மேடம் இப்படி சொல்லிட்டீங்க. நான் உங்க ஃபேன்"

"இப்போ அதுக்கு என்ன பண்ணனும்னு சொல்லுறீங்க?" டைரக்டர் இடைமறித்தார்.

"டென்ஷன் ஆகாதீங்க சார். உங்க காதலுக்கு வாழ்த்து சொல்ல வந்தேன்"

"உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி. கிளம்புறீங்களா"

"ஓகே சார்". ஜெஸிகாவை பார்த்தபடி, "என் காதல் அங்க இருக்கு" என்றபடி எழுந்து சென்றான் ஜான்.

'தொலைஞ்சி போ' மனதிற்குள் கருவினார் டைரக்டர். மாடல் பெண் வசந்தை நோக்கினாள்.

"ஹலோ சார்"

வசந்த் சுற்றும் முற்றும் பார்த்தான்.

"உங்களை தான். உங்க பேரு மறந்து போயிடுச்சு. உங்க பேரு என்ன சொன்னிங்க?"

"வசந்த்"

"யா யா சாரி. மிஸ்டர் வசந்த் என்கிட்டே ஓவியரை சந்திக்க வைக்குறேன்னு சொன்னிங்களே"

"ஆமா மேடம் மறந்தே போயிட்டேன்" அதிர்ச்சியை வெளிக்காட்டாமல் வசந்த் பேசினான்.

"எப்போ மீட்டிங் ஏற்பாடு பண்ண போறிங்க?"

"இரண்டு நாள் டைம் கொடுங்க மேடம்"

"ஓகே இதான் பைனல். இதுக்கு மேல நீங்க டைம் எடுத்துக்க கூடாது"

"ஓகே மேடம்"

மாடல் பெண் அங்கிருந்து சென்றாள். பொங்கி வந்த டென்ஷனால் நெற்றியை தேய்த்தபடி நாற்காலியில் அமர்ந்தான் வசந்த். நிலைமையை எப்படி சமாளிப்பது என்ற சிந்தனையில் இறங்கினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.