(Reading time: 14 - 27 minutes)

ஜான் அமைதியாக மிரண்ட விழிகளோடு அமர்ந்திருந்தான். எப்பொழுதும் விளையாட்டுத்தனத்தோடு காணப்படுபவன் சந்தர்ப்பவசத்தால் வேறு வழியில்லாமல் அமைதி காத்துக்கொண்டிருந்தான். அவன் விழிகள் அவ்வப்போது தன்னைச் சூழ்ந்திருக்கும் இரண்டு பயில்வான்களையும் நோக்கின.

போன தடவை டைரக்டரை வெறுப்பேற்றியதற்கும் சூட்டிங்கை தடை செய்ததற்கும் இனி ஷூட்டிங்கில் யாருக்கும் ஜான் இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்பதற்காகவும் ஜானை அடக்க இரண்டு பேரை தனி சம்பளம் கொடுத்து ஏற்பாடு செய்திருந்தார் டைரக்டர். ஜானின் நிலை அவனுக்கே பரிதாபமாக இருந்தது.

"சார்"

"என்ன?" முரட்டு விழிகளோடு கர்ஜித்தான் தடியர்களில் ஒருவன்.

"எனக்கு எதுக்கு சார் பாதுகாப்பா நிக்குறீங்க?"

"உன்கிட்ட இருந்து தான் மத்தவங்களுக்கு பாதுகாப்பு தேவை"

"நீங்க நினைக்குற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை சார்" என்றபடி எழுந்து செல்ல முற்பட்டான் ஜான்.

"எங்க போற? உட்காரு" என்று ஜானை விடாப்பிடியாக அமர்த்தினான் தடியன்.

"அப்படி என்ன சார் நான் தப்பு பண்ணேன்?"

"டைரக்டரை அவர் காதலி முன்னாடியே அவமானப்படுத்திருக்க"

"அவமானப்படுற அளவுக்கு டைரக்டரை நான் ஒண்ணுமே சொல்லலையே சார்"

"சொல்லலையா? அவருக்கு முடி இல்லை சொட்டை தலையா இருக்காருன்னு கேவலப்படுத்திருக்க"

"சரி சார். உங்களையே கேக்குறேன். அவர் தலைல முடி இருக்கா?"

"இல்லை"

"முடி இல்லாதவங்கள வழுக்கை தலை சொட்டை தலைன்னு தான  சொல்லுவாங்க"

"ஆமாம்"

"அதை தான் சார் சொன்னேன். அது எப்படி குற்றமாகும்?"

"அவருக்கு முடி இருந்தா என்ன இல்லைனா உனக்கு என்ன?"

"அவருக்கு இருக்க அந்த அழகான காதலி வருத்தப்படுவாங்கன்னு சொன்னேன் சார்"

"நீ கொஞ்சம் பேசாம இருக்கியா"

"வேணும்னா அவருக்கு விக் வாங்கி கொடுத்திடுறேன் சார். அப்புறம் அவரை யாரும் கிண்டல் பண்ணமாட்டாங்க"

"உன்னை பேசாம இருக்க சொன்னேன்"

அதற்கு மேல் அவர்களுடன் மன்றாடுவது வீண் செயல் என்றெண்ணிய ஜான் அமைதியானான். ஷூட்டிங் நடக்கும் சப்தம் வெளியில் இருக்கும் ஜானிற்கு நன்றாகவே கேட்டது.

வான் கருமேகங்கள் கோர மழையை வழங்க தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தன. மழை வரப் போவதற்கு அடையாளமாக குளிர் காற்று மிதமான வேகத்தில் தவழ்ந்து வந்தது.

அந்த காற்றில் தலை முடியை அலைபாய விட்டபடி ஜெஸிகா வந்துகொண்டிருந்தாள். அவள் வரும் அழகை இமை கொட்டாமல் ரசித்த ஜான் சில நொடிகள் தன்னையே மறந்து போனான். அவன் கண்களுக்கு  ஜெஸிகா பன்மடங்கு அழகாய் மாறியிருப்பதாய் தோன்றினாள்.

ஜானின் கண்கள் ஜெஸிகாவின் மீதே நிலைத்திருந்தன. ஜெஸிகாவும் ஜானை ஓரக் கண்ணால் பார்த்தபடி வந்தாள். தோழி ஒருத்தி ஜெஸிகாவை தேடி வந்தாள்.

"ஜெஸ்ஸி ஏன் லேட்? டைரக்டர் கத்திட்டு இருக்காரு"

"டாக்சி கிடைக்க நேரமாயிடுச்சு. சரி, ஜானை ஏன் அரெஸ்ட் பண்ணி உக்கார வச்சிருக்கீங்க?"

"அது டைரக்டரோட வேலை"

"சரியா தான் செஞ்சிருக்காரு, இல்லைனா எல்லோரையும் தொல்லை பண்ணுவான்"

"உன்னை பத்தி ஒரு கிசுகிசு வந்துச்சி"

"என்ன?"

"ஜான் உன்னை ஒரு தலையா காதலிக்கிறாராமே?"

"வாட் நான்சென்ஸ்"

"நானா சொல்லல. மத்தவங்க பேசிட்டு இருந்தாங்க. உன் மேல இருக்க காதலால் தான் வீட்டுல ஷூட்டிங் நடக்க சம்மதிச்சாராம்"

"இது போல கட்டு கதையை பேசுறதை ஸ்டாப் பண்ணுங்க" என்று கோபத்தோடு கூறியபடி வீட்டினுள் சென்றாள் ஜெஸிகா.

'என்ன நம்மளை சுத்தமா கண்டுக்காம போறா' என எண்ணிய ஜான் வேதனையடைந்தான்.

"சார்"

"சொல்லு"

"பொண்ணுங்களுக்கு மட்டும் உதவி செய்யவே கூடாது சார். நம்மளை சுத்தமா கண்டுக்க மாட்டாங்க"

"ஏண்டா ரேடியோ மாதிரி எப்போவும் பேசிட்டே தான் இருப்பியா? கொஞ்சம் வாயை மூடிட்டு இருந்தா தான் என்ன?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.