(Reading time: 17 - 33 minutes)

தொடர்கதை - தித்திக்கும் புது காதலே!!! - 02 - கார்த்திகா கார்த்திகேயன்

Thithikkum puthu kathale

முழு கண்களையும் விரித்து கொண்டு சூர்யாவை பார்த்து கொண்டிருந்த கலை மதியை பார்த்தவனுக்கு சிரிப்பு இன்னும் அதிகமானது.

அவன் தன்னையே பார்ப்பதை அறிந்து முகத்தை திருப்பி கொண்டாள் மதி.

காவ்யாவின் நிலையோ கொடுமையாக இருந்தது. "இது தான் சனியனை தூக்கி பனியனில் போடுவது போல? சே இப்படியா பேசி தொலைப்பேன். இதுனால மதிக்கு எதாவது பிரச்சனை வந்துருமோ?", என்ற பயத்துடன் "அப்பா இவர் தான் கலை வீட்டுக்காரரா?", என்று சிரித்து கொண்டே விசாரித்தாள் காவ்யா.

"சமாதான பறவையை தூது விடுறாங்களாம் மேடம்", என்று நினைத்து கொண்டு அமர்ந்திருந்தான் சூர்யா.

"என்ன மா காவ்யா? உனக்கு தெரியாதா? மதி உன்கிட்ட சொல்லிருப்பானு நினைச்சேனே? என்ன மதி இது அறிமுக படுத்திருக்கலாமே", என்றார் சண்முகம்.

"அவளுக்கு தெரிஞ்சிருந்தா சொல்லிருக்க மாட்டாளா?  இதுல அவ கிட்டயே இவன் அழகா இருக்கேன்னு வேற சொல்லிருக்கேன்", என்று நினைத்து கொண்டு "அவ சொன்னா அப்பா. நான் தான் கவனிக்கலை போல? சரி அப்பறம் கேட்டுக்கலாம்னு விட்டுட்டேன்", என்று அவளை சமாளித்தாள்.

"அதான மதி நல்ல பொண்ணாச்சே. சொல்லாம இருக்க மாட்டாளேன்னு நினைச்சேன்", என்றார் சண்முகம்.

"சரிப்பா. நாங்க போய் காபி வாங்கிட்டு வரோம். வா மதி", என்று சொன்னாள் காவ்யா.

"தப்பித்தால் போதும்", என்று நினைத்து கொண்டு அவசரமாக எழுந்து டேபிளில் இடித்து கொண்டாள் கலை மதி.

"பாத்து மா. மெதுவா", என்றார் சண்முகம்.

லைட்டா தான் இடிச்சிருச்சு பா. நாங்க வாங்கிட்டு வரோம். வேற எதாவது வேணுமா?"

"வடை எதாவது இருந்தா நாலு பேருக்கும் வாங்கிட்டு வா மா", என்று சொல்லி பணம் எடுக்க போகையில் "என்கிட்டே இருக்கு பா", என்று சொன்னாள் மதி.

"ஆமா ப்பா. நாங்க வாங்கிட்டு வரோம்", என்று காவ்யாவும் நகர போகையில் "கலை", என்று அழைத்த சூர்யா அவள் கையை பிடித்து  தன்னுடைய பர்ஸை வைத்து விட்டு "இதுல இருந்து பணம் எடுத்து கொடு", என்றான்.

அவன் பேசியதே அதிர்ச்சி என்றாள் அவன் அழைத்த கலை அதை விட அதிர்ச்சியை கொடுத்தது.

அதிர்ச்சியாக அவனை பார்த்து கொண்டிருந்தவளின் கையை பிடித்து இழுத்து சென்றாள் காவ்யா.

"எதுக்கு டி இப்படி இழுத்துட்டு வர?", என்று கேட்டாள் கலை மதி.

"நீ வேற அவசரம் தெரியாம அவரையே ஆசையா பாத்துட்டு இருக்க? அதான் இழுத்துட்டு வந்தேன்", என்றாள் காவ்யா.

"நான் ஒன்னும் ஆசையா பாக்கலை. கையில் இருந்த பர்ஸை என்ன செய்யன்னு தான் முழிச்சிட்டு நின்னேன். உனக்கு அவசரம்ன்னு எனக்கு எப்படி தெரியும்? சரி நீ பாத்ரூம் போய்ட்டு வா. நான் வாங்குறேன்"

"நான் எதுக்கு பாத்ரூம் போகணும்?"

"நீ தான அவசரம்ன்னு சொன்ன?"

"நானே செமையா டென்ஷனில் இருக்கேன். நீ வேற படுத்தாத மதி"

"போடி குழப்பாதே"

"இது வரைக்கும் குழப்பலை. இப்ப தான் மதி குழப்பி வச்சிருக்கேன்"

"என்ன காவ்யா சொல்ற?"

"ஆமா டி. அவர் தான் உன் வீட்டுக்குக்காரர்ன்னு தெரியாதுல்ல?"

"எனக்கே தெரியாது. பின்ன உனக்கு எப்படி தெரியும்?"

"முழுசா கேளு டி பரதேசி. அவர் தான் உன் வீட்டுக்காரர்ன்னு தெரியாம என்ன என்னவோ பேசிட்டேன் டி"

"என்னது?.... என்ன பேசுன?"

"நீயும் பயந்து என்னையும் பயமுறுத்தாத டி. நானே பயந்து போய் தான் இருக்கேன் மதி"

"ஐயோ தாயே கொஞ்சம் டென்ஷன் படுத்தாம சீக்கிரம் சொல்றியா? என்ன பேசி வச்ச?"

"இல்லை அது வந்து... மதி ரொம்ப நல்ல பொண்ணு. காலேஜ் பர்ஸ்ட் அவ தான்னு சொன்னேன்"

"அப்பாடி. நான் கூட பயந்தே போய்ட்டேன் டி காவ்யா. நல்லது தான சொல்லிருக்க.  அப்புறம் என்ன?"

"இன்னும் நான் சொல்லி முடிக்கல டி. அது மட்டும் சொல்லலை?"

"அப்புறம்?"

"அவளுக்கு ஒருத்தனை கல்யாணம் செஞ்சி வச்சிருக்காங்க. அவன் எப்படி பட்டவன்னே தெரியாது. அவ வாழ்க்கை என்ன ஆக போகுதோன்னு சொன்னேன் டி"

"ஐயையோ?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.