(Reading time: 25 - 50 minutes)

ன்று கங்கா கல்லூரிக்கு விடுப்பு எடுத்துக் கொண்டாள். யமுனா காலையிலேயே பள்ளிக்கு கிளம்பி சென்றிருந்தாள். கனகா தான் கங்காவை விடுப்பு எடுக்கச் சொல்லி சொல்லியிருந்தார். “இந்த அத்தைக்கு வேற வேலையில்ல” என்றுதான் கங்கா மனதில் நினைத்துக் கொண்டாள். ஆனால் யமுனாவின் அறுவை சிகிச்சைக்கான பணத்துக்காக ஒரு வழி கிடைத்திருக்கிறது என்று அவர் சொன்னதும், கங்கா விஷயத்தை தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்துடன் விடுப்பு எடுத்துக் கொண்டாள். யமுனா பள்ளிக்கு செல்லட்டும் என்று தான் இருவரும் காத்திருந்தனர். அவள் சென்றதும் கனகாவே கங்காவிடம் பேச ஆரம்பித்தார்.

“நம்ம யமுனா ஆபரேஷன்க்கு ஒருத்தர் பணம் கொடுக்க ரெடியா இருக்காங்க கங்கா.. நான் வேலைப்பார்த்த எஸ்டேட்ல மேனேஜர்க்கிட்ட தான் இந்த விஷயம் பத்தி சொன்னேன். அவர் பணத்துக்காக ஒரு யோசனை சொன்னார். அதுக்காக நீ ஒரு விஷயத்துக்கு சம்மதிக்கனும்”

“என்ன செய்யனும் அத்தை..”

“நீ கல்யாணம் செஞ்சுக்கனும்..”

“கல்யாணமா? என்ன அத்தை சொல்றீங்க? இந்த நிலையில எனக்கு கல்யாணமா?”

“ஆமாம் நீ கல்யாணம் செஞ்சுக்கிட்டா தான் உன்னோட தங்கைக்கு ஆபரேஷன்க்கு பணம் கிடைக்கும்”

“எப்படி அத்தை?”

“நான் சுத்தி வளைச்சு பேசாம நேரா விஷயத்துக்கு வரேன் கங்கா.. அந்த எஸ்டேட் முதலாளியோட மருமகன், அவங்க சொத்துக்கெல்லாம் அவரும் அவங்க தம்பியும் தான் வாரிசாம், பணக்கார பசங்கன்னா தப்பு செய்யாம இருப்பாங்களா? ஏதோ கல்யாணம் பண்ணிக்க இருந்த பொண்ணு ஏமாத்திடுச்சாம், அதுல அந்த பையன் போதை பழக்கத்துக்கு ஆளாகியிருக்கான், அவனை குணப்படுத்தனும்னா அந்த பையனுக்கு ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணனும், மேனேஜர்க்கிட்ட உன்னைப்பத்தி ஏற்கனவே நல்ல விதமா தான் சொல்லி வச்சிருந்தேன், இப்போ யமுனா ஆபரேஷன்க்கு பணம் தேவைன்னு சொன்னதால, நீ அந்த பையனை கல்யாணம் செஞ்சுக்கிட்டா, கண்டிப்பா நம்ம யமுனா ஆபரேஷன்க்கு பணம் கிடைக்கும்” கனகா சொல்லி முடிக்க கங்கா அதிர்ச்சியில் உறைந்தாள்.

அம்மா, அப்பா இருவரின் மறைவிற்கு பின் தினசரி குடும்பத்தை எப்படி ஓட்டுவது, படிப்பு, படிப்புக்குப் பின் நல்ல வேலை, தங்கையின் எதிர்காலம் இதையெல்லாம் பற்றி யோசித்திருக்கிறாளே தவிர, திருமணத்தைப் பற்றி சிந்தித்து பார்த்ததில்லை.  அந்த நிகழ்வெல்லாம் தன் வாழ்வில் நடக்கக் கூடுமா? என்ற எண்ணமும் கூட உண்டு. ஆனால் இன்று அத்தை திருமணத்தைப் பற்றி பேசும்போது, இது போன்ற சூழ்நிலை, அதிலும் இப்படி ஒரு திருமணம் தனக்கு நடப்பதற்கு,  வாழ்நாள் முழுதும் கூட தனியாகவே இருந்துவிடலாம் என்று இருந்தது.

“அத்தை என்ன சொல்றீங்க? இதை தவிர வேற வழி இல்லையா?  மதர் வந்ததும் கண்டிப்பா பணம் ஏற்பாடு செஞ்சு கொடுத்துடுவாங்க.. அப்புறம் ஏன் அத்தை இந்த கல்யாணமெல்லாம், பெரிய மனசு பண்ணி அந்த பணத்தை கடனா கொடுத்தாக் கூட பரவாயில்ல, நான் எப்படியும் அடைச்சிடுவேன், ஆனா கல்யாணமெல்லாம் வேண்டாம் அத்தை..”

“நம்மள நம்பி இவ்வளவு பெரியத் தொகையை எப்படி கொடுப்பாங்க கங்கா.. அவங்களுக்கு கொடுக்கனும்னு என்ன அவசியம் இருக்கு.. அவங்களுக்கு ஒரு தேவைன்னு தான் நம்மள எதிர்பார்க்கிறாங்க, நாம வேண்டாம்னு சொன்னா வேற ஒருத்தரை தேடிக்கிட்டு போயிட்டே இருப்பாங்க.. ஆனா உனக்கு பணம் கொடுக்க யார் இருக்கா? மதர் கொடுப்பாங்கன்னு நம்பிக்கிட்டு இருக்கியே, அவங்க என்ன கையில் பணத்தை வச்சிக்கிட்டா சுத்திக்கிட்டு இருக்காங்க..

அவங்களும் ஏற்பாடு செஞ்சு தான் கொடுக்கனும், அதுக்கு எவ்வளவு நாள் ஆகுமோ? டாக்டர் சீக்கிரம் ஆபரேஷன் செஞ்சா நல்லதுன்னு சொல்லியிருக்காருல்ல.. பணம் கிடைக்கப் போகுது எனும் போது அதை விட்றது நல்லா இல்ல.. யமுனாவை மனசுல வச்சு யோசி” என்று கனகா கூறிய போதும் கங்காவால் இந்த திருமணத்திற்கு சுலபமாக ஒத்துக் கொள்ள முடியவில்லை. திரும்ப சர்ச்சுக்கு சென்று மதரின் வருகையை பற்றி விசாரிக்கச் சென்றாள்.

ஆனால் மதர் பயணம் முடிந்து திரும்பி வர இன்னும் ஒரு மாத காலம் பிடிக்கும் என்று அதிர்ச்சி செய்தியை அவர்கள் கூறினர். மதர் ஏற்கனவே சென்ற இடத்திலிருந்து இன்னும் வேறு நாடுகளுக்கும் சுற்று பயணம் செல்ல திட்டமிட்டிருக்கிறாராம், அதெல்லாம் முடித்து வர இன்னும் ஒரு மாத காலம் ஆகும் என்று விளக்கமாக கூறினார்கள்.

“மதர்க்கிட்ட என்னோட தேவை பத்தி பேசினிங்களா?” என்று கங்கா ஆர்வமாக கேட்க, “மதர் எங்கக்கிட்ட 5 நிமிஷம் தான் பேசினாங்க, உன்னைப்பத்தி அவங்கக்கிட்ட சொல்ல முடியல, அவங்க சுற்று பயணம் போற இடத்துல நவீன வசதிகளெல்லாம் இருக்காது.. திரும்ப எப்போ பேசுவாங்கன்னு தெரியாது.. அப்படி அவங்க பேசினா, உன்னைப்பத்தி சொல்ல முயற்சிக்கிறோம்” என்றனர்.

ஆனால் அதில் கங்காவிற்கு நம்பிக்கை குறைந்திருந்தது. அத்தை சொன்னது போல் மதர் எப்போது வந்து? அவர் எப்போது பணத்திற்கு ஏற்பாடு செய்து? எப்போது யமுனாவிற்கு ஆபரேஷன் செய்வது? அதற்குள் யமுனாவிற்கு ஏதாவது ஆகிவிட்டாள். அதனால் அத்தை சொன்ன இந்த திருமண விஷயத்திற்கு ஒத்து கொள்ள முடிவெடுத்தாள். எப்படியோ யாரையோ திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று அவள் விதியில் எழுதியிருந்தால், அது அத்தை சொன்ன அந்த ஒருவனாகவே இருந்துவிட்டு போகட்டுமே! என்ற தீர்மானத்திற்கு வந்திருந்தாள். ஆனால் இன்னும் இரண்டு மாதத்தில் முடிய இருக்கும் அவள் படிப்பை நினைத்துப்  பார்த்தாள். படிப்பு ஒன்று தான் தன் வாழ்வின் இப்போதைய ஆதாரம் என்று தான் எந்த கஷ்டத்திலும் அதை அவள் நிறுத்த முன் வந்ததில்லை. இப்போது அதற்கே இடையூறு வரப்போகிறதோ என்று பயந்தாள்.

“என்னோட எக்ஸாம் முடிஞ்சு கல்யாணத்தை வச்சுக்கிட்டா என்ன அத்தை” என்று அவள் கனகாவிடம் கேட்க, அவருக்கு கோபம் வந்தது..

“உன்னோட அழகைப் பார்த்து பிடிச்சு போயா உன்னை கல்யாணம் செஞ்சுக்க கேக்கறாங்க, ஏற்கனவே சொன்னது தான, நீ வேண்டாம்னு சொன்னா, அவங்க வேறொரு பொண்ணை தேடிப் போய்டுவாங்க.. இந்த பரிட்சை இப்போ எழுதலன்னா என்ன கங்கா.. இப்போ எழுதாட்டியும் அடுத்த முறை எழுதிக்கலாமாமே, அப்புறம் என்ன? அப்படியே நீ பட்டம் வாங்காம போனா தான் என்ன? அவங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கு தெரியுமா? இந்த குன்னூர் எஸ்டேட்டே எத்தனை ஏக்கர் தெரியுமா? இதுல மெட்ராஸ்ல ஏகப்பட்ட சொத்து இருக்காம், நீ அந்த வீட்டுக்கு மூத்த மகளா போகப் போற கங்கா, ஒருவேளை அவனுக்கு குணமாகமேலேயே போனாலும், உனக்கும் உன் தங்கச்சிக்கும் ஏதாவது சொத்து கிடைக்காமலேயா போயிடும்” என்ற போது கங்காவின் கண்களில் கண்ணீர்.

“அப்பா, அம்மா இருந்தா அத்தை மாதிரி யோசித்திருப்பார்களா? என்று யோசித்துப் பார்த்தாள். ஆனால் அப்பா, அம்மா உடன் இருந்திருந்தால், இத்தனை கஷ்டம் தான் அவளை சூழ்ந்திருக்குமா? ஆனால் யமுனாவின் உயிர் என்று பார்க்கும் போது இவளது வாழ்க்கையை பணயம் வைத்து தானே ஆகவேண்டும்”

கங்காவின் கண்களில் கண்ணீரை பார்த்ததும் மனதிற்குள் நினைத்திருந்ததை உளரிவிட்டோமே என்று தன்னை நொந்துக் கொண்ட கனகா, “இங்கப்பாரு கங்கா, நெருப்புன்னா சுட்டுடுமா? அந்த பையனுக்கு சரியா போகனும்னு தானே கல்யாணம் செய்து வைக்கிறாங்க, நீ ரொம்ப பொறுப்பான பொண்ணு, நீ மனைவியா கிடைக்கிறது அந்த பையன் செய்த புண்ணியம், அவனுக்கு சீக்கிரம் சரியாகிடும் பாரு” என்று சமாதானப்படுத்தினார்.

“அதெப்படி கல்யாணம் செய்து வைத்தா எல்லாம் சரியாகிடும்” கங்காவின் மனதில் கேள்விகள் எழும்பினாலும், இப்போது அதற்கான விடை கிடைக்கப்போவதில்லை என்பதால் அந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.