(Reading time: 13 - 26 minutes)

எதை இன்பம் என்று எண்ணி அந்த காரியத்தை செய்தானோ அதுவே அவனது துன்பத்துக்கு காரணமாக அமைந்துவிட்டது. மூச்சினை நன்றாக இழுத்து விட்டவன் உறங்க முற்பட்டான், முடியவில்லை. அதையும் மீறி உறக்கம் வந்தால் கனவில் அவன் கொடுத்த முத்தமும் அமேலியாவின் கண்ணீரும் அவனை பாடாய்படுத்தியது.

விடியும் வரை அவனால் நிம்மதியாகவே இருக்கமுடியவில்லை. மேலும் படுக்கையில் விழுந்து கிடக்க பிரியப்படாமல் தயாரிப்பாளரை சந்திக்க குளித்து முடித்து தயாராகி சிவந்த விழிகளோடு கீழே இறங்கி வந்தான்.

மேகலா உணவை தயாரித்து டைனிங் டேபிளில் வைத்துவிட்டு பள்ளிக்கு செல்ல நிலாவை தயார்படுத்திக்கொண்டிருந்தாள்.

"என்னடா குடிகாரன் போல கண்ணு சிவந்து போயிருக்கு?"

"நைட் சரியா தூக்கமில்லை"

"தயாரிப்பாளரை பாக்க போற டென்ஷனா"

"இருக்கலாம். அப்பா இன்னும் தூங்கிட்டு தான் இருக்காரா?"

"அவர் எப்போவோ எழுந்து வாக்கிங் போய்ட்டாரு"

வசந்த் டைனிங் டேபிள் நாற்காலியில் அமர்ந்தான். காலை உணவு தட்டில் பரிமாறப்பட்டது. விருப்பமே இல்லாமல் சாப்பிட்டான். அவனது கண்கள் அமேலியாவைத் தேடின. அவளைக் காணவில்லை.

"அமேலியா எங்க?"

"அவளுக்கு சரியான காய்ச்சல். தூங்கிட்டு இருக்கா"

"காய்ச்சலா?" வசந்த் அதிர்ச்சியோடு கேட்டான்.

"எதையோ பார்த்து பயந்திருக்கான்னு நினைக்குறேன்"

வசந்த் திருதிருவென விழித்தான். "ஏதாச்சும் சொன்னாளா?"

"அவ என்ன சொல்ல போறா? சொன்னா மட்டும் புரிஞ்சிடவா போகுது"

"அதுவும் சரி தான்"

வசந்த் சாப்பிட்டு முடித்து எழுந்து கை கழுவினான்.

"அவளுக்கு மாத்திரை கொடுத்தியா?"

"இனிமேல் தாண்டா. அவ இன்னும் சாப்பிடலை. சாப்பாடு வேணாம்னு சொல்லுறா"

வசந்த் மேற்கொண்டு எதுவும் சொல்லாமல் விடைபெற்று கிளம்பினான்.

அமேலியா காய்ச்சலால் அவதிப்படுவது அவனுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. 'நம்ம முத்தம் காய்ச்சல் வர அளவுக்கு அவ்வளவு பவரா' என தன்னைத்தானே கேட்டுக்கொண்டான்.

குறித்த நேரத்தை விட சீக்கிரத்திலேயே தயாரிப்பாளரின் இடத்தை அடைந்தான் வசந்த். இருந்தும் உள்ளே செல்லாமல் ஜெஸிகாவிற்காக காரிலேயே காத்திருந்தான். காரில் பாடலை ஒலிக்க விட்டான். அவனுக்கு பிடித்த இளையராஜா காதல் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன.

"முத்தம் போதாதே சத்தம் போடாதே

ரத்தம் சூடானதே நாணமே நாணுதே

இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்

என்னையே உன்னிலே தேடினேன் அழகே...."

"இதுவேற..." என்று டக்கென்று பாட்டை நிறுத்தினான். ஜெஸிகாவுக்கு போன் செய்தான்.

"எங்க இருக்க?"

"......."

"சீக்கிரம்" என போனை அணைத்தான்.

காரில் இருந்தபடியே சாலையை வேடிக்கை பார்த்தான். நடைபாதையில் இரண்டு காதல் ஜோடிகள் சென்றுகொண்டிருந்தனர். ஒரு காதல் ஜோடி முத்தத்தின் வடிவில் தன் காதலை பரிமாறிக்கொண்டிருந்தது.

போனில் மீண்டும் ஜெஸிகாவின் எண்களை அழுத்தினான்.

"நீ வர போறியா இல்லையா?"

"....."

மீண்டும் முத்தம் கொடுத்த காதல் ஜோடியை நோக்கினான். "இவங்களுக்கெல்லாம் காய்ச்சல் வராதா" என்று தனக்குத்தானே பேசிக் கொண்டான். ஜெஸிகா கார் கதவின் ஜன்னலை தட்டினாள். கதவைத் திறந்து வெளியே வந்தான் வசந்த்.

"இவ்வளவு நேரமா?"

"நான் சொன்ன நேரத்தை விட சீக்கிரமாவே வந்துட்டேன்"

தயாரிப்பாளரின் ஆபிஸில் இருவரும் நுழைந்தார்கள். வரவேற்பறையில் நின்றுகொண்டிருந்தவனிடம், " மிஸ்டர் ஃப்ராங்க்ளினை சந்திக்கணும்" என்றான் வசந்த்.

"அப்பாய்ன்மெண்ட் இருக்கா?"

"எஸ்" என வசந்த் கார்டை நீட்டினான்.

"ஒன் மினிட்" என லேன்ட்லைன் போனில் சில எண்களை அழுத்தினான். யாரோ தொடர்பில் வந்தார்கள். 

"மிஸ்டர் வசந்த்! சார் வர அரை மணி நேரம் ஆகும். உங்களை காத்திருக்க சொன்னாரு"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.