(Reading time: 15 - 29 minutes)

சிறிது நேரம் யாரும் ஏதும் பேசவில்லை. இனியாவிற்கு யோசிப்பதற்கு நேரம் அளித்து அனைவரும் அமைதியாக இருந்தனர்.

பின்பு இனியா,

“இல்லை அத்தான். நான் எவ்வளவோ யோசித்து பார்த்து விட்டேன். என்னால் திருமணம் என்பதை எண்ணிப் பார்த்தால் ஏனோ இனிய நிகழ்வாக தோன்றவில்லை. மாறாக நான் அடிமைபடுத்தப்பட்டு விடுவேன் என்றே தோன்றுகிறது” என்று கூறி தன் தாயை பார்த்தாள். லட்சுமியின் முகம் அடிபட்டாற் போல மாறிவிட்டது.

பின்பு தாயே தொடர்ந்தாள்.

“இல்லை இனியா நீ என் வாழ்வை நினைத்து வாழ்க்கையை எடை போடாதே. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது இதில் சரி பட்டு வராது. அன்பாக வாழும் மனிதர்களை பார். தன் ஜோடி  இறந்த உடனே தானும் இறந்து விடும் அளவுக்கு அன்பாக வாழுபவர்களும் இந்த உலகத்தில் உள்ளனர்”  என்றார்.

“இல்லை அம்மா இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது” என்று கூறினாள் மகள்.  

“நீங்கள் சொல்வதை போல் உள்ளவர்களை நான் இன்னும் சந்தித்தது இல்லை. ஆனால் அப்படியும் உள்ளார்கள் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் அப்படி பட்டவர்கள் இலட்சத்தில் ஒருத்தரோ அல்லது கோடியில் ஒருத்தரோ தான் உள்ளார்கள். ஆனால் என் கண்களால் நான் தினமும் பார்ப்பவர்களின் நிலையோ வேறாக இருக்கையில் எப்படி அம்மா என்னால் நீங்கள் சொல்பவர்களை நினைத்து என் முடிவை மாற்றிக் கொள்ள முடியும்” எனக் கேட்டாள்.

இதை பார்த்துக் கொண்டிருந்த ஜோதிக்கு ஆச்சரியமாக தான் இருந்தது. தங்கைக்கு தன்னை விட தாயின் மேல் பிரியம் அதிகம் என அவள் அறிவாள். அப்படிப்பட்ட தன் தங்கை அன்னையை இவ்வளவு எதிர்த்து பேசுவாள் என்று அவள் எண்ணவே இல்லை. இவ்வளவு நாள் ஏதோ எல்லா பெண்களையும் போல் திருமணம் வேண்டாம் என மறுக்கிறாள். எல்லோரும் சேர்ந்து எடுத்துக் கூறினால் புரிந்து கொள்வாள் என்றே அவள் நினைத்திருந்தாள். ஆனால் இன்று நிலையே வேறாக அல்லவா உள்ளது.

தன் தாய் தந்தை பிரச்சனையால் அவள் திருமணத்தை இவ்வளவு வெறுக்கிறாளா? என ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் பிரச்சனையுமே நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பே முடிந்து விட்டது. அதிலிருந்து இவர்கள் அனைவரும் சந்தோஷமாக தான் உள்ளனர். இவள் தந்தையிடமுமே அன்பாக தான் நடந்து கொள்கிறாள், பின்பு என்ன என்று ஜோதிக்கு தோன்றியது.

தந்தை இப்போது சிங்கப்பூருக்கு ஒரு மாநாட்டிற்காக சென்றிருக்கிறார். அவருடைய நண்பரின் மகனை இனியாவிற்கு முடித்து விட எண்ணி அவர் தான் தன் தாயிடம் பேச சொல்லி சென்றார் என ஜோதி அறிவாள். ஆனால் தந்தை வந்த பின் நிலை என்ன? அவரிடம் இவள் கூறுவதை எல்லாம் எப்படி கூறுவது? முன்பு தாயை கொடுமை படுத்தினார் தான் என்றாலும் இப்போது தாயை எப்படி பார்த்துக் கொள்கிறார். அதற்கு முன்பும் பிள்ளைகளிடம் அவர் விரோதம் பாராட்டியது இல்லை. எனவே அவரை இப்போது எப்படி குறை கூறுவது. இவள் திருமணமே வேண்டாம் என கூறுகிறாள் என எப்படி அவரிடம் கூறுவது என ஜோதி மண்டையை போட்டு குழம்பிக் கொண்டிருந்தாள்.

அதற்குள் தாய் மற்றும் தங்கையின் சண்டை முற்றிக் கொண்டு போயிருந்தது. லட்சுமி இனியாவை பார்த்து

“உன்னை நினைத்து நான் மிகவும் பெறுமை அடைந்திருந்தேன். எனக்கு இவ்வுலகில் எந்த சந்தோஷமும் இல்லாமல் இருந்த போதும் நீ மட்டும் எனக்கு சந்தோஷம் அளிப்பவளாக இருந்தாய். ஆனால் இப்போது நிலைமையே வேறாக உள்ளது. இப்போது நான் துன்பம் என்பதையே அறியாதவளாக உள்ளேன். ஆனால் நீயோ எனக்கு இப்போது துன்பத்தை மட்டுமே அளிப்பவளாக இருக்கிறாய். உன் பிரச்சனையால் மற்ற சந்தோஷங்கள் எதுவும் எனக்கு தெரிவதில்லை” என கடைசியாக லட்சுமி அழுதே விட்டாள்.

தாயை பார்த்த இனியா அதிர்ச்சி அடைந்தாள். முன்பு எப்படிப்பட்ட துன்பங்கள் இருந்த போதும் தாய் உணர்ச்சி வசப்பட்டு அழுததில்லை. ஓரிரு முறை தான் தாய் அழுது இனியா பார்த்திருக்கிறாள். பின்பு மனதை திடப்படுத்திக் கொண்டு புன்னகையுடனே இருப்பாள்.

அந்த மன திடத்திற்கு கிடைத்த வரம் தான் இந்த வாழ்க்கை என்று கூட இனியா முன்பு எண்ணியிருக்கிறாள். ஆனால் தான் இந்த அளவா தாயை வருத்திவிட்டோம் என எண்ணி இனியா மிகவும் வருந்தினாள். ஆனால் திருமணத்தையும் இனியாவால் எண்ணி பார்க்க முடியவில்லை. அதே சமயம் தாய் அழுவதையும் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை.

இனியா தாயின் அருகே சென்று தாயின் கண்ணீரை துடைத்து விட்டாள்.

"அம்மா நான் இந்த அளவுக்கா உன் மனதை வருத்தி விட்டேன். என்னை மன்னித்து விடு அம்மா" என கூறினாள்.

"ஆனால் அம்மா நான் நம் வீட்டை மட்டும் வைத்து கூறவில்லை. மருத்துவமனையிலும், வெளியிலும் எத்தனை பேரை சந்தித்திருக்கிறேன். யாரும் மன திருப்தியுடன் சந்தோஷமாக இருப்பதாக தெரியவில்லை. அம்மா, வெங்கட் அங்கிள் அவர்களை நினைவிருக்கிறதா அம்மா அவரிடம் விவாகரத்திற்கு வரும் நிறைய பேரை என்னிடம் கவுன்சிலிங்கிற்கு அனுப்பி வைக்கிறார். நானும் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து பாதி பேரையாவது விவாகரத்து வேண்டாம் என முடிவெடுக்கும் படி செய்கிறேன் அம்மா. ஆனால் ஒவ்வொரு கேஸை பார்க்கும் போதும் அப்படி அவர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாமல் இத்தனை வருடங்கள் என்ன மாதிரியான வாழ்க்கை தான் வாழ்ந்தார்கள் என்று தோன்றும் அம்மா. அதனால் தான் அப்படிப்பட்ட வாழ்க்கை எனக்கு வேண்டாம் என முடிவெடுத்தேன் அம்மா" என்றாள் இறுதியாக.

இனியாவையே பார்த்துக் கொண்டிருந்த லட்சுமி பேச ஆரம்பித்தாள்.

“இனியா பத்தாம் வகுப்பு முடிந்து என்ன குரூப் எடுக்கட்டும் என்று எண்ணிடம் தான் கேட்டாய். பண்ணிரண்டாம் வகுப்பு முடிந்து சைக்காலஜி படிக்கட்டுமா என்று என்னிடம் கேட்டாய். ஒவ்வொரு முறையும் ஆடைகள் எடுப்பதற்கும் என்னிடம் தான் வருவாய். உனக்கு பிடித்திருந்தாலும் என்னிடம் கேட்டு எனக்கு பிடித்திருந்தால் தான் இறுதியாக எடுப்பாய். இப்போது மட்டும் நான் முடிவு செய்தேன் என்று எப்படியம்மா சொல்கிறாய்” என்று கேட்டாள் தாய்.

"நீ சொல்வதெல்லாம் எனக்கு புரியாமல் இல்லையம்மா. ஆனால் அதை மீறி நல்லது கெட்டது பார்க்கும் பக்குவம் உன் தாய்க்கு இருக்கும் என நீ நம்புகிறாயா இல்லை தாய்க்கு என்ன தெரியும் அவள் நம்மை விட படிப்பு குறைவாக படித்தவளாயிற்றே என்று எண்ணுகிறாயா" என்று கேட்டாள்.

இல்லை என மகள் தலையாட்டினாள்.

"இனியா நான் உன்னை விட குறைவாக படித்தவளாக இருக்கலாம். ஆனால் நாங்கள் அனுபவசாலிகள். நீங்கள் ஒவ்வொன்றையும் அனுபவபட்டு தான் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் வாழ்க்கை முழுவதும் அதிலேயே போய் விடும். நாங்கள் எங்கள் வாழ்வில் பெற்ற அனுபவங்களையும் எங்கள் பெற்றோரும் முன்னோரும் எங்களுக்கு எடுத்துரைத்தவைகளையும் உங்களுக்கு கூறி உங்கள் வாழ்க்கையை வெற்றி பெற வைக்கவே விரும்புகிறோம். எந்த ஒரு பெற்றோரும் பிள்ளைகளுக்கு கெடுதல் செய்வதில்லை என்பதை நீ அறிவாயல்லவா. நான் சொல்வதை கேள். நீ நம் வீட்டில் நடந்தவற்றையும் உன் துறையில் சந்தித்த அனுபவங்களாலும் மிகவும் குழம்பியிருக்கிறாய். நான் உன் தந்தைக்காக மிகவும் அனுசரித்து சென்றேன் தான். ஆனால் நான் அவர் என்னை அடிமை படுத்தி உள்ளார் என்று எண்ணியதே இல்லை. நான் அவர் மேல் மிகவும் அனபு வைத்திருந்தேன். என் அன்பின் சக்தியே அவரை மாற்றியது என்று நான் நம்புகிறேன். நான் அனுபவித்த துன்பங்களை இந்த சில வருடங்களில் நானே மறந்தே விட்டேன்டா நீ ஏன் அதை நியாபகம் வைத்திருக்கிறாய். நான் மறந்து விட்டேன் என்றால் உன் அப்பா அதை மறக்கும் அளவுக்கு என் மீது அன்பை பொழிந்தார். அதனால் தான் என்னால் அதை மறக்க முடிந்தது. இதை எல்லாம் பார்த்து நீ குழம்பாதே. அவரவர்க்கு ஒரு வாழ்க்கை உள்ளது. அதை மற்றவரின் வாழ்க்கையை வைத்து நீ வரையறுக்காதே என்று தான் கூறுகிறேன்."

இனியாவிற்கு நிறைய யோசிக்க வேண்டியிருந்தது. அதை உணர்ந்த பாலு,

“சரி விடுங்கள் அத்தை நீங்கள் இவ்வளவு கூறியத பிறகுமா இனியா அடம் பிடிப்பாள். அவளுக்கு யோசிப்பதற்கு அவகாசம் தாறுங்கள்” என கூறினான். இனியாவும் ஆம் என தலையசைத்தாள்.

பின்பு ஜோதி

"இப்போதே பண்ணிரண்டு மணி ஆகப் போகிறது போய் படு இனியா, நாளைக்கு வேலைக்கு போக வேண்டும் அல்லவா அதுவும் இல்லாமல் இன்றைக்கு நாம் அனைவரும் சேர்ந்து அபியை கண்டு கொள்ளாமல் இருந்ததற்கு அவள் நாளைக்கு படுத்துவாள். அதை வேறு கவனிக்க வேண்டும்" என கூறினாள். அனைவரும் உறங்க சென்று விட்டனர்.

இனியாவிற்கு மட்டும் உறக்கம் அவ்வளவு எளிதாக வருவதாக இல்லை. இன்று நாள் ஏன் இப்படி முடிந்தது என எண்ணிக் கொண்டிருந்தாள். தாயை பார்த்தாலும் வருத்தமாக தான் இருந்தது. ஆனால் தன் எண்ணங்களையும் அவ்வளவு எளிதாக மாற்றிக் கொள்ள முடியும் என அவளால் எண்ண முடியவில்லை. தந்தையை நினைத்துப் பார்த்தாலும் அவர் மேலும் அவ்வளவாக கோவம் வரவில்லை. ஆனால் வருத்தம் மட்டும் இருப்பது என்னவோ உண்மைதான் என எண்ணிக் கொண்டாள்.

மனதை கட்டுப்படுத்தி இனியும் இதை பற்றி இன்று நினைக்கக் கூடாது என முடிவு செய்தாள். சந்தரை பற்றி எண்ணிப் பார்த்தாள். நல்லவன் தான். தாயின் நிலையை எடுத்து கூறிய பிறகு உடனே சிறிது மாறி போனானே. அவனை எளிதில் இன்னும் மாற்றி விடலாம் என நினைத்தாள்.

கூடவே இளவரசனை பற்றி நினைவு வந்தது. எவ்வளவு திமிராக பேசினான். அவனுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டுமென எண்ணியவாறே உறங்கிப் போனாள். இனியாவிற்கு உறக்கத்திலாவது நிம்மதி இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.  

ஏனெனில் கனவில் இளவரசன் வந்தான். புன்னகைத்தான். இனியா அந்த புன்னகையில் என்ன இருக்கிறது என எண்ணுகிறாள். வெற்றி பெருமிதமா அவன் புன்னகையில் இருந்தது என எண்ணிக் கொண்டே மேலும் உறக்கத்தில் ஆழந்தாள். 

தொடரும்

En Iniyavale - 01

En Iniyavale - 03

{kunena_discuss:679}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.