(Reading time: 17 - 34 minutes)

போதும் நிறுத்துங்க. இதுக்கு மேல வேற ஏதாச்சும் பேசனீங்கன்னா அவ்வளவு தான். எங்கம்மாவை சொல்றதுக்கு நீங்க யாருங்க. நானும் எப்படியும் நம்ம அம்மாக்கு அக்கா முறையாச்சே அப்படின்னு பார்த்தா இப்படி பேசறீங்க. எங்கம்மாவுக்கு எங்கப்பாவை பிடிச்சிருந்தது. அவங்க வீட்டுல சொன்னாங்க. அவங்க ஒத்துக்கலை. எங்கம்மா எங்கப்பாவை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. யாருக்கும் எதுவுமே சொல்லாமலா திடீர்ன்னு ஓடிப் போயிட்டாங்க. சொல்லுங்க. அவங்க விருப்பத்தை நேர்மையா வீட்டுல சொன்னதுக்கு சரியான மதிப்பை அவங்க குடுக்காததால அவங்க பண்ணிக்கிட்டாங்க. அதுல உங்களுக்கு என்ன பிரச்சனை.  எனக்கு யாரும் பொண்ணு குடுக்கலைன்னு நாங்க வந்து உங்க கிட்ட சொன்னோமா. நீங்க தேவை இல்லாம ஏதும் பேசாதீங்க. சொல்லிட்டேன்”

“பார்த்தீங்களா. இவன் வயசு என்ன. என் வயசு என்ன. ஆள் தராதரம் பார்த்து பேசறானா. எல்லாரும் இதை பார்த்துட்டு இருக்கீங்களே”

“ஆமாப்பா. நம்ம செல்வி சொல்றதும் சரி தானே. என்ன தம்பி நீங்க. பெரியவங்களை இப்படி பேசிட்டிருக்கீங்க. கொஞ்சம் பார்த்து பேசுங்க.”

“சரியா சொன்னீங்கண்ணே. உங்களுக்கு இருக்கற அக்கறை என் சொந்த அண்ணனுக்கு இருக்கா பார்த்தீங்களா”

“நீ பேசறதெல்லாம் தப்பா பேசற. அதுக்கு சரியா பதில் கொடுக்கறவங்களை நான் என்ன சொல்ல முடியும்” என்றார் ராஜகோபால்.

“கேட்டீங்களா இந்த கதையை. நான் தப்பா பேசிட்டேனாமே. இங்க நடக்கறது தப்பா நடக்குது. அதை ஏன்னு கேட்டதுக்கு என் மேலையே தப்பு சொல்றாங்களே. இதை எல்லாரும் பார்த்துட்டு இருக்கீங்களே” என்று ஒப்பாரி வைத்தார் செல்வி.

அதற்குள் தங்கைக்கு பரிந்துக் கொண்டு வந்த சுதா “என்னண்ணே. உனக்கு வரவர தங்கச்சிங்க மேல பாசமே இல்லாம போச்சா. நாங்க உன் கூட பிறந்தவங்க. எங்க மேல இல்லாத பாசம் என்னண்ணே அப்படி ராஜீ மேல இருக்கு. இதெல்லாம் சரியில்லைண்ணே. நாளைக்கு உனக்கு ஒண்ணுன்னா நாங்க தான் வருவோம். பார்த்துக்கோ.” என்றார்.

இப்படியே பேச்சு முற்றிக் கொண்டே போனதே தவிர எந்த முடிவும் காணவில்லை.

இளவரசன் எரிச்சலுற்றவனாக  எழுந்து வெளியே சென்று விட்டான்.

அவன் சென்றவுடன் இது தான் சரியான தருணம் என்று எண்ணிய செல்வி “ராஜீயைக் கிளம்பி இங்க வர சொல்லுங்க. போன் பண்ணி தாங்க. நானே பேசறேன்.” என்று அடம் பிடித்து ஒரு வழியாக ராஜலக்ஷ்மியை போனில் பிடித்து விட்டார்.

போனை எடுத்த ராஜலக்ஷ்மியிடம் “என்ன ராஜீ. இப்படி எல்லாம் இந்த அக்காங்களுக்கு பண்ணனும்ன்னு எப்ப இருந்து யோசனை” என்றார்.

பின்பு சிறிது நேரம் பேசிய பின்பு அவரை இங்கு வர சொல்லி அழைத்ததற்கு ராஜலக்ஷ்மியே “நீங்க அங்க எதுக்கு வர சொல்றீங்கன்னு புரியுது. அதுக்கு அவசியமே இல்லை. நானே என் பையனுக்கு இனியாவை பெண் எடுக்கறதா இல்லை. அதனால நீங்க பயப்பட தேவை இல்லை” என்று கூறி விட்டார்.

ளவரசன் திரும்பி வரும் போது அந்த வீடே அமைதியாக இருந்தது. அவனும் என்னடா நாம் செல்லும் போது ஒரே கூச்சலாக இருந்த வீடு இப்போது அமைதியாக இருக்கிறது என்று எண்ணிக் கொண்டான்.

அவனை நேராக பார்த்த சுதா “நீ கிளம்பலாம் தம்பி. நீ இனிமே இங்க இருக்க தேவையில்லை. நாங்க உங்க அம்மா கிட்டவே பேசிட்டோம். அவளே இந்த கல்யாணம் நடக்காதுன்னு தெளிவா சொல்லிட்டா” என்றார்.

இளவரசனால் அதை நம்பவே இயலவில்லை. நேராக அவன் பார்வை இனியாவிடம் சென்றது.

அவள் கண்ணீருடன் தேம்பிக் கொண்டிருந்தாள். அவளின் அந்த நிலையே அதை உண்மை என்று கூறியது.

ஆனால் அவனால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அம்மாவா இப்படி சொன்னாங்க. எப்படி. அவங்களே லவ் மேரேஜ் பண்ணவங்க. அதுவும் இல்லாம என் கல்யாணத்துக்காக ஏங்கிட்டு இருக்கறவங்க. அதுவும் பொண்ணு இனியான்னா அவங்க சந்தோச தான் படனும். ஆனா இது எப்படி. ஆனால் இவர்கள் அம்மாவிடம் எப்படி பேசினாங்கன்னு தெரியலையே. அது ஒரு புறம் இருக்கட்டும். அதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். இப்போது எதற்காகவும் இனியாவை இழக்க முடியாது என்று முடிவு செய்து கொண்டான்.

“எங்க அம்மா என்ன சொன்னாங்கன்னு எனக்கு தெரியாது. அது எனக்கு இப்ப முக்கியம் இல்லை. இவ்வளவு நேரம் எல்லாரும் பெரியவங்களாச்சேன்னு தான் மரியாதை குடுத்து ஏதும் பேசாம இருந்தேன். எப்ப நீங்க நான் வெளியே போனதுக்கு அப்புறம் திருட்டுத்தனமா எங்கம்மாவுக்கு போன் பண்ணி பேசினீங்களோ, இப்ப நான் முடிவு பண்ணிட்டேன். உங்களுக்கு என்னால இனி மரியாதை குடுக்க முடியாது. எதுவா இருந்தாலும் மாமா இதுக்கு ஒரு முடிவு சொல்லட்டும். இனியாவோட அப்பா அவர் தானே. அவரே சொல்லட்டும்” என்றான்.

எங்கே தன் அண்ணன் அவனுக்கு சாதகமாக ஏதும் கூறி விடுவாரோ என்று பயந்த செல்வி அவரை பேசவே விடவில்லை.

“இதை பார்த்தியா டா மோகன். உன் அக்கா மகன் பேசறதை. அப்பவே நாம அவ வேண்டாம்ன்னு ஒதுக்கி வச்சோம். இப்ப அவ மகனை சேர்த்துக்க முடியுமா. இவனை நீயே துரத்தி விடு டா” என்றாள்.

அவ்வளவு நேரம் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்த மோகன் எழுந்து நின்றார். “ஏன் என் அக்கா பையனுக்கு அந்த உரிமை இல்லையா என்ன. உன் பையனுக்கு இருக்கற முறை தானே அவனுக்கும் இருக்கு. சித்தப்பா பொண்ணுன்றதால ராஜீ அண்ணனுக்கு தங்கச்சி இல்லைன்னு ஆகிடுமா.”

“அது இருக்கட்டும். வேற எதுவோ சொன்னீங்களே. அப்ப அசிங்கம் பண்ணிட்டு போயிட்டா. அவளை அப்ப ஒதுக்கி வச்சிட்டோம். அதே மாதிரி இந்த பையனையும் துரத்துனும்ன்னு தானே சொன்னீங்க. சரி எங்க அக்கா காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டா. அவளும் அப்படியே போயிட்டா. இதோ இன்னைக்கு இந்த பையனை பார்க்கற வரைக்கும் எங்க அக்கா எங்க இருக்குன்னு கூட எனக்கு தெரியாது.”

“ஆனா இதே உன் அக்கா சுதா பொண்ணு ஓடி போயிடுச்சே. அப்ப ஏதோ பெரிய மானஸ்தி மாதிரி ஒதுக்கி வச்சிட்டு, ஊருக்கு தெரியாம போய் அவளை சந்திச்சிட்டு வரீங்களே அக்காவும் தங்கச்சியும், இதெல்லாம் எங்களுக்கு தெரியாதா. அவளை ஒதுக்கியும் வைக்காம, ஊர் எதாச்சும் சொல்லிட்டு போகட்டும், என் புள்ளை தான் முக்கியம்ன்னு அதை எல்லார் எதிர்க்கவும் சேர்த்துக்கவும் முடியாம யாருக்கும் தெரியாம போய் பார்க்கறீங்களே உங்களை எல்லாம் என்ன சொல்றது”

“இந்த புள்ளை சொல்ற மாதிரி அவ வீட்டுல சொன்னா. நாங்க அப்ப இருந்த புத்தில அதை ஒத்துக்க முடியலை. ஆனா நீங்க சொன்ன மாதிரி நாங்க எங்க அக்காவை ஒதுக்கி வைக்கலை. அவ தான் எங்களை ஒதுக்கி வச்சிட்டா.” என்றார் கண் கலங்கி.

“ஏய் என்னடா இப்படி எல்லாம் பேசற. திடீர்ன்னு இப்படி மாறிட்டியே டா”

“நான் என்னக்கா சொன்னேன். இப்ப கூட நீங்க சொன்னீங்களே அண்ணன் கிட்ட. உனக்கு ஒண்ணுன்னா நாங்க தான் வருவோம். சித்தப்பா பொண்ணு அந்த தங்கச்சியா வருவான்னு. அதே மாதிரி தானே. நாளைக்கு எனக்கு ஒண்ணுன்னா எங்க அக்கா தானே வருவா. நீங்களா வருவீங்க”

“அட என்னப்பா நீங்களே இப்படி மாறி மாறி சண்டை போட்டுக்கிட்டு. இப்ப இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு தான் என்ன” என்றார் அவர்களின் சித்தப்பா முறை உள்ள மனிதர்.

“ஏன் சித்தப்பு உனக்கு இந்த நாட்டாமை பண்றது இன்னும் குறையலையா. இவங்க ரெண்டு பேர் கூப்பிட்டாங்கன்னு நீங்க எல்லாரும் இப்படி கிளம்பி வந்துட்டீங்களா. எங்கண்ணன் சொன்ன மாதிரி நாங்க யார்ன்னா உங்க வீட்டு பிரச்சனைக்கு இது வரைக்கும் வந்திருக்கோமா. இல்ல எங்களுக்கு ஏதும் தெரியாதுன்னு நினைக்கறீங்களா. எங்க அண்ணன் இந்த ஊருல இல்லை. அவருக்கு வேணும்னா இங்க நடக்கறதை பத்தி ஏதும் தெரியாம இருக்கும். உங்க ஒவ்வொருத்தரை பத்தியும் நான் எடுத்து விடட்டுமா.” என்றார் மோகன்.

“அட என்னப்பா. நாங்களா வரோம் வரோம்ன்னு சொன்னோம். இதோ இந்த செல்வியும், சுதாவும் தான் கூப்பிட்டாங்க. ஏதோ நம்ம புள்ளைங்களாச்சேன்னு வந்தா நீ இப்படி பேசற. அட வாங்கப்பா. நமக்கென்ன. அவங்க பிரச்சனையை அவங்களே பார்த்துக்கட்டும்” என்று ஒரு வழியாக எல்லோரும் கிளம்பினர்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.