(Reading time: 17 - 34 minutes)

18. என் இனியவளே - பாலா 

En Iniyavale

ளவரசனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

இனியாவின் நிலைமையோ அதற்கு மேல். சுற்றி நின்றிருந்த அனைவரையும் பயத்தோடு பார்த்தாள்.

இனியாவின் தாய்க்கோ தந்தைக்கோ அங்கு நடந்ததை இன்னும் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

முதலில் திகைத்தாலும் பின்பு சுதாரித்து கோபமாக கத்தியது இனியாவின் அத்தை செல்வி தான்.

“என்ன நடக்குது இங்கே. என்ன இதெல்லாம்” என்று கிட்டத்தட்ட கர்ஜித்தார் செல்வி.

“என்னம்மா” என்று கேட்ட ராஜகோபாலால் அதற்கு மேல் தன் மகளிடம் எதுவும் கேட்க இயலவில்லை.

“அப்பா என்னப்பா, அதெல்லாம் ஒண்ணுமில்லை. இப்ப என்ன நடந்துடுச்சின்னு இப்ப என்னென்னவோ பேசறீங்க” என்று திக்கி திணறி பேசிய இனியா தன் தாயின் முகத்தை பார்த்து விட்டு அதற்கு மேல் ஏதும் பேச இயலாமல் அமைதியானாள்.

அவளால் தன் தாயை பார்த்து பொய் சொல்ல இயலவில்லை. அதுவுமில்லாமல் தான் இப்படி திணறுவதை பார்த்தே தாய் தன்னைக் கண்டு கொள்வார் என்று அவளுக்கு தெரியும். எனவே அமைதியானாள்.

ஆனால் அவள் பேச்சைக் கேட்டு இன்னும் கோபமான செல்வியோ தன் அண்ணனை பார்த்து முறைத்து “என்னது இங்க என்ன நடந்துச்சின்னு இப்படி பேசறோமா. உன் பொண்ணு தான் ஏதேதோ சொல்றா. நீ என்னடான்னா அமைதியா அதைக் கேட்டுக்கிட்டு இருக்க. ஏதோ அவ கண்ணுல கொஞ்சம் தண்ணி வச்சிட்டிருக்கறதுக்கு இவன் இப்படி துடுச்சி போறான். அவ தோளை தொட்டு தொட்டு பேசறான். இவங்களுக்குள்ளே ஒன்னும் இல்லைன்னு நினைக்க நான் என்ன பொசக்கெட்டவளா. எனக்கு உண்மை தெரிஞ்சாகணும். இங்க என்ன நடக்குது”

அவர் தங்கை கூறிய எதற்கும் மறுமொழி கூற இயலாமல் நின்ற மாமாவை பார்த்த இளவரசனுக்கு தான் தான் இதற்கெல்லாம் காரணம் என்ற எண்ணம்  உறுத்தியது.

“மாமா ஒரு நிமிஷம்” என்ற இளவரசன் இனியாவை பார்த்தான். அவளோ கண்கள் கலங்கிய நிலையில் இருந்தாள்.

“ஐ’ம் சாரி மாமா. நான் இனியாவை விரும்பறேன். அது நிஜம் தான். நான் அவளை நல்லா பார்த்துக்குவேன் மாமா. இதை உங்க கிட்ட நானே தான் சொல்லி இருக்கணும். அது தான் நான் உங்களுக்கு தர மரியாதைன்னு எனக்கு தெரியும் மாமா. ஆனா நாங்களே சரியா பேசிக்காம உங்க கிட்ட நான் என்ன சொல்றதுன்னு தான் ஏதும் சொல்லலை. என்னை மன்னிச்சிடுங்க மாமா. ஐ’ம் ரியல்லி சாரி”

“இவன் என்னண்ணே சொல்றான். இவன் என்ன சொன்னாலும் நீங்க கேட்டுக்கிட்டே இருப்பீங்களா. இவனுக்கு எங்கிருந்து இந்த தைரியம் வந்தது. இவன் என்ன உரிமைல உங்களை மாமான்னு கூப்பிடறான். இவங்க பேசிட்டு அப்புறம் உன் கிட்ட சொல்லுவானாமே. அவன் எப்படி அப்படி சொல்றான். நீங்களும் அதை எப்படி கேட்டுட்டு இப்படி அமைதியா இருக்கீங்க. அது இருக்கட்டும். இவங்க ரெண்டு பேரும் இன்னும் ஏதும் பேசிக்கலையாமா. இவன் அவளை தொட்டு தொட்டு பேசறதுல இருந்தே தெரியலையா. இவங்களுக்குள்ளே என்ன ஓடிக்கிட்டு இருக்குன்னு.” என்று கத்தியவரை இடைமறித்த ராஜகோபால்,

“நீ கொஞ்ச நேரம் சும்மா இரு. இந்த வீட்டுல இருக்கறவங்களுக்கு மட்டும் கேட்கற மாதிரி பேசு. ஏன் இப்படி ஊருக்கே கேட்கற மாதிரி பேசற”

“நீ என்னண்ணே பேசிட்டிருக்கே. தப்பு செஞ்ச உன் பொண்ணை இது வரைக்கும் ஒரு வார்த்தை கேட்காம என் கிட்ட இப்படி கத்தினா என்ன அர்த்தம்”

“அதுக்காக ஊருக்கே கேட்கற மாதிரி கத்தனுமா.”

“சரி நான் கத்தலை. ஏய் ஜோதி இங்க வா. நீ தானே உன் புருசனுக்கு தம்பி முறைன்னு சொன்னே. நிஜமாவே உன் புருசனுக்கு தம்பியா. இல்ல உன் தங்கச்சிக்கு புருஷனா வரர்து தான் இந்த தம்பி முறையா. அதை தான் நீ சொன்னியா. இதெல்லாம் உனக்கும் தெரிஞ்சி தான் நடக்குதா. நான் வந்து உன் தங்கச்சியை பொண்ணு கேட்டது எல்லாம் உனக்கு தெரியும் தானே. எல்லாம் தெரிஞ்சும் நீயும் இதுக்கு கூட்டா. சொல்லு. கண்டவனுக்கு உன் தங்கச்சியை கட்டி குடுக்கணும்ன்னு நினைக்கறியே நீ எல்லாம் ஒரு நல்ல அக்காவா. சொல்லு”

“அத்தை நீங்க என்ன பேசறீங்க. கண்டவன்னு எல்லாம் சொல்லாதீங்க.”

“சரி சொல்லு. இவன் உன் புருசனுக்கு தம்பியா”

ஜோதி ஏதும் பேசாமல் அமைதியாக இருக்க,

“அப்ப இவன் உன் புருசனுக்கு தம்பி இல்லை தானே, உன் தங்கச்சியை மனசுல வச்சி தானே நீ இப்படி சொன்ன. அப்ப இவன் கண்டவன் தானே”

“அவர் ஒன்னும் கண்டவன் இல்லை. அவர் வேற யாரும் இல்லை. ராஜீயோட பையன். போதுமா. இதோட ஏதும் பேசாத” என்றார் ராஜகோபால்.

“என்னது” என்ற செல்வி அப்படியே அமர்ந்து விட்டார்.

நான்கு நாட்களாக மகிழ்ச்சியும் சந்தோசமும் குடிகொண்டிருந்த அந்த வீட்டில் இப்போது குழப்பமும் கவலையும் குடி கொண்டிருந்தது.

வீட்டில் அவ்வளவு கூட்டம் நிரம்பியிருந்தது.

நான்கு நாட்களாக ஒவ்வொருவராக வந்து பார்த்து சென்ற கூட்டம் மொத்தமும் ஒன்றாக வந்தமர்ந்திருந்தது.

செல்வி அத்தனை பேரையும் கூட்டி விட்டிருந்தார்.

“இப்ப என்னம்மா பிரச்சனை” என்றார் அங்கிருந்த வயதானவர்களில் ஒருவர்.

“என்ன சித்தப்பா. ஏதும் தெரியாத மாதிரி கேட்கறீங்க. நான் எல்லாம் சொல்லி தானே உங்களை கூட்டிட்டு வந்தேன்”

“அதுக்கில்லைம்மா. பஞ்சாயத்துன்னு வந்ததுக்கு அப்புறம் சபைல கேட்கறது தானே முறை”

“என்னது பஞ்சாயத்தா. என் வீட்டுக்கு உங்களை யாரு பஞ்சாயத்துக்கு கூப்பிட்டது. உன்னை தங்கச்சின்னு கூட பார்க்க மாட்டேன் செல்வி சொல்லிட்டேன்” என்றார் ராஜகோபால்.

“இது பஞ்சாயத்து எல்லாம் ஒன்னும் இல்லைண்ணே. நீ ஏன் சித்தப்பா அப்படி சொல்ற. நம்ம குடும்பத்துல ஒரு பிரச்சனை. அதை பெரியவங்களை வச்சி பேசறோம்ன்னு நினைச்சிக்கோ”

“நீ சுத்தி வளைச்சி என்ன சொன்னாலும் அதுக்கு அர்த்தம் அது தான்னு எனக்கு தெரியும். என் வீட்டுக்கு யாரும் பஞ்சயாத்து பேச வேண்டிய அவசியம் இல்லை. இல்லை. இங்க இருக்கற எல்லார் கிட்டவும் தான் கேட்கறேன். உங்க யார் வீட்லயாச்சும் எதாவது பிரச்சனைன்னா என்னைக்காவது நான் வந்து நின்னு பஞ்சாயத்து பேசி இருக்கேனா. சொல்லுங்க. அதே மாதிரி தான் என் வீட்டு பிரச்சனையை என்னால பாத்துக்க முடியும்”

“அட நீ என்னப்பா. செல்வி சொல்ற மாதிரி நாங்க இங்க பஞ்சாயத்து பண்றதுக்கு எல்லாம் வரலை. ஏதோ உன் தங்கச்சி கூப்பிட்டுது. நாங்க வந்தோம். நீ ஏன் இப்படி பேசற”

“அத விடுங்க சித்தப்பா. இந்த மோகன் வந்தானா பாத்தீங்களா. அவன் அக்காவால தானே இங்க பிரச்சனையே. ஆனா அவன் வரல” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே மோகன் அங்கே வந்தார்.

“வாடா. நீ தான் வரலையேன்னு சொல்லிக்கிட்டு இருந்தேன். உன் அக்கா என்ன பண்ணி வச்சிருக்குன்னு பார்த்தியா. அப்ப தான் நம்ம குடும்பத்துக்கு அப்படி ஒரு அசிங்கம் பண்ணிட்டு போனான்னா இப்ப என் அண்ணன் வீட்டுல நான் பொண்ணு எடுக்கலாம்ன்னு பார்க்கும் போது இப்ப இப்படி புகுந்து பிரச்சனை பண்றா. அவ எப்படியும் ஓடி போனவ தானே. அதான் அவ பையனுக்கு யாரும் பொண்ணு குடுக்கலை போல. அதுக்காக இந்த அண்ணன் தான் ஏற்கனவே ஏமாந்தவராச்சே. அவரையே இன்னும் ஏமாத்தலாம்ன்னு வந்திருக்கா”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.