(Reading time: 23 - 45 minutes)

 

ன்று ஜெனி பேசிய அத்தனை வார்த்தைகளும் பொக்கிஷம் போல அவர் டைரியில் பொறித்து வைத்துள்ளார் அவர்.

அன்று பிறகு கடைக்கு சென்று பத்து மணிக்கு மூடிய கடையை திறக்க வைத்து ஜெனிக்கு ட்ரெஸ் எடுத்து வந்து கேக் வெட்டினார்கள்.

புன்னகையோடு உறங்கிய மகளை அன்று நெடுநேரம் பார்த்துக் கொண்டே இருந்தார் அவர்.

அந்த சிறிய வயதில் உரிமையோடு சண்டையிட்டவள், பின்பு எப்படி இருவருக்குள்ளும் இடைவெளி வந்தது என்று அவருக்கு தெரியவில்லை.

திடீரென்று ஒரு நாள் கவனித்து பார்க்கும் போது மகள் தன்னிடம் பேசுவதற்கே தயங்கி தயங்கி நிற்பதைக் கண்டு திகைத்து தான் போனார் அவர்.

சில வருடங்கள் இப்படியே சென்று விட்டதை அவர் அப்போது தான் உணர்ந்தார்.

அவராலும் அந்த திரையை உடைத்துக் கொண்டு வெளியே வர முடியவில்லை. அவருடைய மகளும் அதை உடைக்க முயலவில்லை. ஆக அதுவே பழக்கமாகி போனது.

ஆனால் அவருக்கு தெரியும். அவருடைய மனைவி அவருக்கு ஆப்போசிட் என்று. தன்னிடம் கிடைக்காத உரிமையும், நெருக்கமும், சுதந்திரமும் மகளுக்கு மனைவியிடம் கிடைப்பதை அறிந்தவர், இதுவே சரி தான். ஒருவர் கண்டிப்பாக இருக்க, ஒருவர் சுதந்திரம் கொடுக்க என்று எண்ணி அதையே தொடரவும் செய்தார்.

அவர் அவரின் அலுவலக அறையில் இருக்கும் போது கதவை லாக் செய்யாமல் சிறிது திறந்து வைத்து விடுவார். ஹாலில் அமர்ந்து மனைவியும், மகளும் அடிக்கும் லூட்டி எல்லாம் அவர் காதுகளுக்கு கேட்டு கொண்டு தான் இருக்கும். அவரும் அதை ரசித்துக் கொண்டு இருப்பார். இதை அறியாதவர்களாக அவர்கள் சிரித்து பேசிக் கொண்டிருப்பார்கள்.

அப்படி அவர்கள் பேசியதிலிருந்தே ஜெனியின் நண்பர்கள் எல்லோரையும் அவருக்கும் தெரியும், கவின், அருண், உட்பட எல்லோரையும்.  எல்லோரையும் விட, அனுவைப் பற்றி தான் அவள் அதிகம் சொல்வது. அனு இப்படி செய்தாள், அனு அப்படி செய்தாள் என்று அவளின் லூட்டிகள் பற்றி கூறி அவள் அன்னையை சிரிக்க வைத்துக் கொண்டிருப்பாள்.

அதனால் தான் அன்று அனு போனில் பேசிய போதும் அவர் அதை நம்பியது. அனு அவ்வாறு செய்ய கூடியவள் தான் என்ற எண்ணம் அவருக்கு.

அன்று அனு செய்த கலாட்டாவிற்கு தன் மகளிடம் குரல் உயர்த்தி பேசி அவளை கஷ்டப் படுத்தி விட்டோமே என்று அவருக்குள் உறுத்தல்.

அந்த விஷயம் அவரை உறுத்திக் கொண்டிருந்ததாலேயே அவர் வீட்டில் சிறிது இலகுவாக பேசிக் கொண்டிருந்தார்.

ஆனால் ஜெனியால் தான் அவரிடம் சரியாக பேச முடியவில்லை. தந்தையின் மனது அவளுக்கு புரிய தான் செய்தது. அவர் தன் மேல் சந்தேகப் பட்டு தன்னை வருத்தியதாக எண்ணியதால் இப்போது இப்படி நடந்து கொள்கிறார் என்று அவளுக்கு புரிந்தது. அதனாலேயே அவளால் நார்மலாக இருக்க இயலவில்லை.

இப்படி அவர் ஜெனியிடம் நெருக்கம் காட்டும் வேளையில் தான் அந்த போன் வந்தது.

அதில் சொன்னது இதை மட்டும் தான் “உங்க பொண்ணு கவின்ற பையனை லவ் பண்றா”

பேசியது ஒரு பையன் தான்.

“என்ன” என்று அவர் திரும்ப கேட்க,

“உங்க பொண்ணு கவின்ற பையனை லவ் பண்றா”

இதை மட்டும் திரும்ப சொல்லி விட்டு லைன் கட் ஆகி விட்டது.

திரும்ப இவர் முயற்சித்தாலும் போன் சுவிட்ச் ஆப் என்றது.

ஏற்கனவே மகளை கடிந்து பேசி வருத்தப்பட வைத்து விட்டோமே என்ற எண்ணத்திலிருந்து முழுமையாக வெளியே வராத நேரத்தில் இப்போது இப்படி ஒரு போன்.

அவரால் அதை விட்டுவிடவும் இயலவில்லை. அதை சீரியஸாக எடுத்துக் கொண்டு மகளிடம் கேட்கவும் இயலவில்லை.

அதனாலேயே குழம்பி இருந்தார்.

தானே பேசாவிட்டாலும், தானே வந்து பேசிக் கொண்டிருந்த தந்தை, திரும்ப சரியாக பேசாமல் இருப்பது அவள் மனதை என்னவோ செய்தது.

கல்லூரியிலோ கவின் சரியாக பேசுவதில்லை. வீட்டிலோ தந்தை.

என்ன தான் தீப்தி கவினை காதல் பார்வை பார்த்தாலும், கவின் அதற்கு ஏதும் கூறாமல் இருந்தாலும், ஏனோ அவனை ஒன்றும் கூற இயலவில்லை. அவன் மேல் இருக்கும் காதல் அது உண்மையில்லை என்று கூறுவதாக ஒரு உணர்வு.

கவின் எப்போதுமே காமெடியாக தான் பேசிக் கொண்டிருப்பான் என்றாலும், வெகு சில நேரம் தன்னிடம் அவன் காதலை புரிய வைக்கும் நோக்குடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவன் கண்களில் தெரிந்த உணர்வு, தீப்தியை அவன் பார்க்கும் பார்வையில் இல்லை என்பது அவளுக்கு தெள்ளத் தெளிவாய் புரிந்தது.

ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது. அதை கவின் இப்போது சொல்லாவிட்டாலும் கூட, அவனே அதை சரி செய்து விட்டு பிறகு கூறுவான் என்று அவள் மனது சொன்னது.

தன் மன ஓட்டங்களிலேயே இருந்தவள் அப்போது தான் அவள் தந்தையை கவனித்தாள்.

அவர் ஏதோ தீவிர சிந்தனையில் இருப்பதும், அவர் முகத்தில் கவலைக் கோடுகள் இருப்பதையும் கண்டாள்.

பொதுவாக அவள் தந்தை அப்படி எல்லாம் இருக்கவே மாட்டார். எதுவாக இருந்தாலும் ஒரு கை பார்த்து விடலாம் என்ற துணிவுடன் இருப்பார். எனவே அவர் முகத்தில் இப்படி கவலை கோடுகளை எல்லாம் அவள் கண்டதே இல்லை.

இன்று என்ன ஆயிற்று என்று யோசித்துக் கொண்டிருந்தாள் ஜெனி.

அவள் தந்தையோ எதையோ யோசிப்பதும், பின்பு இவள் புறமாக வருவதும், பின்பு திரும்பி செல்வதுமாக இருந்தார்.

முதலில் ஜெனிக்கு ஒன்றும் புரியாவிட்டாலும், பின்பு தந்தை தன்னிடம் தான் ஏதோ பேச வருகிறார் என்று புரிந்து போனது.

எவ்வளவோ நேரம் கடந்தும் அவர் ஜெனியிடம் வரவே இல்லை.

ஜெனிக்கு ஆச்சர்யம் தான். அவள் தந்தை ஒன்றை செய்ய வேண்டும் என்று எண்ணி விட்டால் அதை செய்து விட்டு தான் மறுவேலை பார்ப்பார். அப்படிப் பட்டவரிடம் தயக்கம் காணவும் அதிசயித்து தான் போனாள் அவள்.

கடைசியாக ஜெனியே சென்று அவரிடம் பேசினாள்.

“அப்பா என் கிட்ட ஏதும் சொல்லனுமா” என்றாள் தயங்கிக் கொண்டே.

அவளை உற்றுப் பார்த்தவர் ஆம் என்பதாய் தலை அசைத்தார்.

நேராக அந்த போன் விஷயத்தை அவளிடம் சொல்லி விட்டார்.

ஜெனி கலங்கிய கண்களோடு தந்தையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரம் அமைதியாக இருந்தவர் “யார் இப்படி போன் பண்ணிருப்பான்னு யோசிச்சி பார்த்தா, உனக்கு கார்டு தந்தானே, நான் கூட வந்து வார்ன் பண்ணேனே அந்த பையனா கூட இருக்கலாம், இல்லைன்னா உன்ன பிடிக்காதவங்க, இல்லை உன் கூட எதாச்சும் பிரச்சனை இருக்கறவங்களா இருக்கலாம்”

“யாரோ இதை வேணும்ன்னு தான் செஞ்சிருக்காங்கன்னு எனக்கு தெரியுது ஜெனி. அன்னைக்கு கூட உன் ப்ரண்ட் அனு விளையாடனதுக்கு நான் உன் கிட்ட சத்தம் போட்டுட்டேன். அதை நினைச்சே எனக்கு இன்னும் வருத்தமா இருக்கு. இதுல இப்ப இது வேற. நார்மலாவே எனக்கு இந்த மாதிரி விஷயம் பிடிக்காது தான். அதுலயும் அன்னைக்கு நீ என் கிட்ட சொல்லாம ஹாஸ்பிடல் போனதுல இருந்து இன்னும் எல்லாம் எனக்கு பெரிய விஷயமா தெரியுது” என்று நிறுத்தி மகளின் முகத்தை பார்த்தார்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.