(Reading time: 20 - 39 minutes)

09. உள்ளம் வருடும் தென்றல் - வத்ஸலா

வன் அருகில் சென்று அவன் கண்களை ஆழமாக ஊடுருவினான் சுதாகரன். சுதாகரனின் கண்களை நேராக சந்தித்தான் விஷ்வா.

சுதாகரனின் அருகில் மெல்ல வந்து நின்றாள் இந்துஜா.

விஷ்வாவிடம் பேசி விட வேண்டுமென்று சுதாகரனின் உள்ளம் தவித்தாலும், அவனால் பேச முடியவில்லை. அவனுக்கும், விஷ்வாவுக்குமான உறவு ரொம்பவும்  தர்மசங்கடமான உறவு. அவன் சாதராணமாக உச்சரிக்கும் வார்த்தைக்கூட விஷ்வாவின் இதயத்தை கூறுப்போட்டுவிடும் அபாயம் நிறையவே இருக்கிறது. 

Ullam varudum thendral

வார்த்தைகளை தேடி தவித்த சுதாகரனின் பார்வை தனிச்சையாய் சுவற்றின் மீது விழுந்தது. அங்கே எழுதப்பட்டிருந்தது கீதா சாரத்தின் முதல் மூன்று வரிகள்.

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்

ஒரு முறை சுதாகரனின் புருவங்கள் உயர்ந்து இறங்க, விஷ்வாவின் கண்களை ஒரு முறை சந்தித்து விட்டு பார்வையை மறுபடியும் சுவற்றின் மீது பதித்தான் சுதாகரன்.

மூவரது பார்வையும் சுவற்றின் மீது பதிந்தது.

சுவற்றிலிருந்து திரும்பிய விஷ்வாவின் பார்வை சுதாகரனின் கண்களை தஞ்சம் அடைந்தது

மெல்ல எழுந்த சுதாகரனின் வலது கை விஷ்வாவின் வலது தோளை பற்றி அழுத்தியது.

ஒரு தந்தையின் அரவணைப்பும், ஒரு நண்பனின் அக்கறையும், ஒரு மருத்துவனின் ஆதரவும் ஒரு ஆசிரியரின் கண்டிப்பும் கலந்திருந்தது அந்த அழுத்தத்தில்.

விஷ்வாவின் கண்களில் மெல்ல மெல்ல நீர் சேர துவங்கியது. அவனையே பார்த்துக்கொண்டிருந்த இந்துவின் கண்களும் சட்டென குளம் கட்டிக்கொண்டன.

கீதையின் மீதோ அதை சொன்ன கண்ணனின் மீதோ கொஞ்சமும் நம்பிக்கையோ, பற்றோ  இல்லாதவன் தான் விஷ்வா.

ஆனாலும் அந்த சூழ்நிலையில் சுதாகரனின் பார்வை விஷ்வாவை என்னவோ செய்தது. தனது தந்தை சுதாகரனின் உருவில் வந்து அந்த வார்த்தைகளை சொல்வதைப்போலே தோன்றியது விஷ்வாவிற்கு.

'இதோ உன் காயங்களுக்கான மருந்தை உன் கண்ணில் காட்டிவிட்டேன், இனி உன் காயங்களை ஆற்றிக்கொள்ள வேண்டியது உன் கடமை.' ஒரு முறை இந்துவின் மீது விழுந்து திரும்பிய சுதாகரனின் பார்வை அழுத்தமாய் சொன்னது விஷ்வாவிடம்.

கண் பார்வையிலேயே ஒரு கீதோபதேசத்தை நடத்தி முடித்திருந்தான் சுதாகரன்.

சிலையாய் நின்றுருந்தான் விஷ்வா. அவன் தோள் மீதிருந்த தன் கையை எடுத்து விஷ்வாவை நோக்கி நீட்டினான் சுதாகரன். விஷ்வா கை நீட்ட அதை அழுத்தமாய் பற்றி குலுக்கினான்.

'ஆல் தி பெஸ்ட் மிஸ்டர் விஷ்வா.' அழகாய் புன்னகைதான் சுதாகர். மானசீகமாக இந்துவை அவன் கையில் பிடித்துக்கொடுத்துவிட்ட திருப்தியில் எழுந்த புன்னகை.

'டேக் கேர்.' இருவரையும் பார்த்து சொல்லிவிட்டு அதே புன்னகையுடன் நகர்ந்தான் அவன்

ந்திரத்தில் கட்டுபட்டதை போல் நின்றிருந்தனர் இருவரும். நீரிலாடிய கண்கள் நான்கும் சந்தித்துக்கொண்டன. அவள் வார்த்தைகள் மறுபடியும் காதில் ஒலிப்பது போல், இதயத்தை வருடுவதை போல் இருந்தது விஷ்வாவுக்கு சில நொடிகள் அப்படியே நின்றிருந்தனர் இருவரும்.

கண்களை தாண்டி வழிந்த கண்ணீர் அவனை தன்னிலை படுத்த, சட்டென வேறு பக்கம் திரும்பி சுதாரித்தான் விஷ்வா.

தன்னிலை பெற்றவளாய் கண்களை துடைத்துக்கொண்டாள் இந்து 'உள்ளே வா விஷ்வா அம்மாவை பார்க்கலாம்' அறைக்குள்ளே நுழைந்தாள் இந்து.

உறங்கிக்கொண்டிருந்தார் மைதிலி.. அவர் இதயம் சுவாசத்துக்காக தவிக்க, நெஞ்சுக்கூடு வேகமாய் ஏறி ஏறி இறங்கியது. அதை பார்க்கும் போதே மனம் வலித்தது அவனுக்கு.

அவர் அருகே கட்டிலில் அமர்ந்து அவர் தலையை மெல்ல வருடிக்கொடுத்தான் விஷ்வா. அம்மாவின் அருகில் அமர்ந்து பல ஆண்டுகள் ஆகிறது.

அவன் அருகில் ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டுக்கொண்டு அமர்ந்தாள் இந்து. அவனை விட்டு அகலவில்லை அவள் பார்வை. அவள் பக்கம் திரும்புவதை அவன் தவிர்த்த  போதிலும் அவள் பார்வை அவனை என்னவோ செய்தது.

'ப்ளீஸ் வேண்டாம்டா நிலாப்பொண்ணு. ஏன்டா இப்படி பண்றே.?' கொஞ்சம் தளர்ந்துப்போனவனாய் சொன்னான் விஷ்வா.

நான் என்ன பண்ணேன்.?

என் மேலே ஆசைப்படாதே. நீ ரொம்ப அழ வேண்டியிருக்கும்டா......

'நீ ஜனனியை விரும்பறேன்னு தெரிஞ்சதும் நான் அழுததை விடவா?

திடுக்கிட்டு போய் நிமிர்ந்தான் விஷ்வா

அப்போ எவ்வளவு அழுதேன் தெரியுமா? அதையே தாண்டி வந்திட்டேன். நீ திரும்ப என்கிட்டே வந்திட்டே. இனிமே நீயே நினைச்சாலும் என்னை விட்டு போக முடியாது.

பதில் சொல்லாமல் தனது பார்வையை திருப்பிக்கொண்டான் விஷ்வா. சில நிமிடங்கள் கழித்துக்கேட்டான். உங்க அண்ணனை பத்தி நினைச்சு பார்த்தியா? என்றான் விஷ்வா. நாம என்னதான் மாத்தி மாத்தி பேசினாலும்........ . சில நொடிகள் அவனிடம் மௌனம் நிலவியது 

அவன் பார்வை தனது தாயின் மீதே இருக்க மனம் எங்கெங்கோ சென்று திரும்பியது.

பின் மெல்ல சொன்னான் 'நிலாப்பொண்ணு நாம ஆசைப்படறது தப்புதாண்டா.....'

அவன் முகத்தை பற்றி தனது பக்கம் திருப்பினாள் இந்து. 'எங்க அண்ணனுக்கும் உனக்கும் நேரடியான பிரச்சனை கடந்த ரெண்டு வருஷமா. நான் உன் மேலே ஆசைப்பட ஆரம்பிச்சது எப்போ தெரியுமா? நீ நம்ம வீட்டை விட்டு போனியே அந்த நிமிஷத்திலிருந்து.........

'நீ என் கூடவே இருக்க மாட்டியா மனசு கடந்து தவிக்கும். உன் பேரை யாரவது சும்மா சொன்னா கூட என் மனசுக்குள்ளே அவ்வளவு சந்தோஷமா இருக்கும். உன்னை  என் மனசு முழுக்க நிரப்பி வெச்சிருக்கேன் விஷ்வா. நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுடீங்கன்னு நான் என் மனசை மாத்திக்க முடியாது'. அழுத்தம் திருத்தமாய் சொல்லி விட்டு ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு அமர்ந்து விட்டிருந்தாள் இந்துஜா.

என்ன சொல்லி அவள் மனதை மாற்ற, தன்னையும் அறியாமல் அவளை நோக்கி செல்ல துவங்கி இருக்கிறதே என் மனம், அவள் அன்பு என்னை ஈர்க்கிறதே இதை எப்படி தடுக்க... புரியவில்லை அவனுக்கு யோசித்தபடியே அமர்ந்திருந்தான் விஷ்வா.

ப்போது ஒலித்தது அவன் கைப்பேசி. திரை அப்பூ என ஒளிர்ந்தது.

'ஹலோ' என்றான்

'விஷ்வா.....' என்றாள் அபர்ணா.

சந்தோஷத்தின் எல்லையில் இருந்தாள் அபர்ணா. பரத்தை பற்றி, அவன் வீட்டில் நடந்தது எல்லாவற்றையும் அவனிடம் கொட்டிவிட தவித்தது அவள் மனம்.

அபர்ணாவின் குரலில் மனம் ஏனோ சட்டென்று லேசானது போல் உணர்ந்தான் விஷ்வா. தன் மனதில் இருப்பதை எல்லாம் அவளிடம் கொட்டிவிட தவித்தது அவன் மனம்.

'எங்கே இருக்கே விஷ்வா?

இங்கே ஹாஸ்பிட்டல்லே. அம்மாவுக்கு  உடம்பு சரியில்லைடா.

ஹேய்! அம்மாகிட்டே போயிட்டியா நீ? என்னாச்சு அவங்களுக்கு? நான் அங்கே வரவா? எந்த ஹாஸ்பிடல் விஷ்வா? நீ என் என்கிட்டே எதுவுமே சொல்லவே இல்லை.? என்னாச்சு விஷ்வா?

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.