(Reading time: 9 - 17 minutes)

04. விழிகளிரண்டு..! - அன்பு சுடர்

நிலவொளியில் நிழல்கள் இரண்டாய்த் தெரிவதைக் கண்டு சற்றே தடுமாறி பின் அப்துல்லாவை நோக்கி மெல்ல நடந்து வந்தார் பழனிவேலன்.

“அடேய் நீயா ?.கொஞ்சம் கூட பற்றோ இல்ல மக்களோட எதிர்காலம் பத்தியோ கவலை இல்லாம இப்படி பண்ணிட்டியே டா..உன்ன நான் சும்மா விடமாட்டேன்டா..நீ இந்த மண்ணுக்கும் பிரயோஜனம் இல்ல..மக்களுக்கும் பிரயோஜனம் இல்ல..உன்ன இங்கேயே இப்பவே கொன்னுட்டு நான் ஜெயிலுக்கு போறேன் டா ...”என்று கோபம் கொப்பளிக்க அப்துல்லாவின் பின் நின்ற மூர்த்தி மீது பாய துணிந்தார் வேலன்.

“கொஞ்சம் பொறு வேலா..அவசரப்படாத ..”என்று அவரைத் தடுத்தார் அப்துல்லா.

Vizhigalirandu

“ஐயா நான் செஞ்சது தப்பு தான்..ஏதோ காசுக்கு ஆசைபட்டுதான் இப்படி பண்ணேன்..அதுக்கு தண்டனையா தான் என் மகனை நேத்து இந்த பாவிங்க ரோடுல நடந்த கலவரத்துல சுட்டுக் கொன்னுட்டாங்கையா..”என்று வாய்விட்டு அழ ஆரம்பித்து விட்டான் மூர்த்தி.

அப்துல்லாவும் பழனிவேலனும் சற்று நேரம் அமைதியாய் இருந்தனர்.

பின் அப்துல்லா தொடர்ந்தார்.

“உன் கஷ்டம் புரியுது மூர்த்தி..ஒருத்தரோட நலனுக்காக ஊரோட மொத்த வருங்காலத்தையும் இப்படி கொண்டு போய் அந்த துரோகிங்க கிட்ட கொடுத்துட்டியே..”

“மன்னிக்க முடியாத தப்புதான்யா.அந்த தப்புக்கு பிரயாச்சித்தமா தான் இன்னைக்கு உங்களுக்கு உதவலாம்னு என் உயிர் போனாலும் பரவாலன்னு அவங்க காவல்ல இருந்து தப்பிச்சுட்டேன்யா .அந்த நிலவறைப் பெட்டி எந்த அறைல இருக்கு,அந்த அறையோட சாவி யார் கிட்ட இருக்கு.எல்லாமே எனக்கு தெரியும்யா.வாங்க ஐயா போவோம்”என்று சொன்னான் மூர்த்தி.

“மூணு பேரும் சேர்ந்து போறது ரொம்ப ஆபத்து.யாராவது ஒருத்தர் இங்க இருக்கணும்.காவலாளி வந்தா தெரியப்படுதணும்.”என்று சொன்னார் பழனிவேலன்.

“அப்போ நீ இங்க இரு வேலா.நானும் மூர்த்தியும் உள்ள போறோம்”

“வேணாம் அப்துல்.உள்ள காவல் அதிகமா இருக்க மாதிரி இருக்கு.நானே போறேன் “என்றார் பழனிவேலன்.

மறுப்பு சொல்ல இயலாமல் வேலன் தன் மீது கொண்ட அன்பே அப்துல்லாவிற்கு பெரிதாய்த் தெரிந்தது.வேலனைத் தழுவிக் கொண்டார் அப்துல்லா.அந்த அணைப்பில் நம்பிக்கையை அப்துல்லாவிற்கு தந்தார் வேலன்.

Related read: உன் ஆசை முகம் தேடி... - 12

சிறிது நேரத்திற்கெல்லாம் இருவரும் அந்த அரசாங்க கட்டிடத்தின் முதல் அறையை அடைந்தனர்.வெளியில் நின்று கொண்டிருந்த அப்துல்லா காவலாளிகளின் வருகை ஏதேனும் தெரிகிறதா என்று மிக கவனமாய் பார்த்துக் கொண்டிருந்தார்.

உள்ளே சென்றதும் மூர்த்தி, ”ஐயா இது காவலாளிங்க ஓய்வெடுக்குற அறை.நாம போக வேண்டியது பனிரெண்டாவது அறை .வாங்க போவோம்”

அந்த அடர் இருளில் இருவரும் எறும்பின் காதுகளுக்குக் கூட அவர்கள் நடக்கும் சத்தம் எட்டிவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாய் இருந்தனர்.

“ஐயா இந்த அறை தான்”என்றான் மூர்த்தி.

“சரி சாவி எப்படி எடுக்கறது?”

“இங்க இருந்து வலது பக்கம் 15ஆவது அறைல தான் எல்லா சாவியும் இருக்கு.நான் போய் எடுத்துட்டு வந்துடுறேன் நீங்க இங்கேயே இருங்க ஐயா !”என்று சொல்லி சாவி இருக்கும் அறையை நோக்கி நகர்ந்தான் மூர்த்தி.

ஆனால் அந்த சாவிகள் இருக்கும் அறையின் சாவி எங்கு இருக்கும் என்று தெரியவில்லை மூர்த்திக்கு.

சிந்தித்தபடியே நடந்து,அறையை கண்டதும் அவனுக்கு ஆச்சர்யம்.

மகிழ்ச்சியில் திறந்தே இருந்த அறையினுள் மெல்ல நுழைந்தான் மூர்த்தி.இரு காவலாளிகள் பேசிக்கொண்டிருக்கும் சத்தம் மட்டும் அவன் காதுகளில் லேசாக கேட்டது.

“ஹவ் டிட் திஸ் கய் காட் எஸ்கேப்டு?.திஸ் இஸ் ஹைலி இம்பாசிபிள்..” ஒரு வெள்ளைக்கார எரிச்சலுடன் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தான்.

அந்த இருட்டில் அவன் நடமாடும் நிழல் மட்டும் மூர்த்தியின் கண்களுக்கு அச்சத்தையூட்டியது.அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதும் அவனுக்கு புரியவில்லை.மேலும் என்ன செய்யலாம் என்றபடியே அறையின் வாசலருகே நின்று கொண்டு அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டிருந்தான் மூர்த்தி.

ரு வேளை இருவருக்கும் ஏதேனும் ஆபத்து நேர்ந்திருக்குமோ ?

பிடித்து சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்களோ?

இல்லை.அப்படி எல்லாம் நடந்திருக்காது..வேலன் நிச்சயம் எந்த ஆபத்துமின்றி வெளியில் வருவான்.

இவ்வாறெல்லாம் நினைத்தபடியே காத்துக்கொண்டிருந்தார் அப்துல்லா.

அவரின் பிள்ளை இக்பாலின் முகம் மீண்டும் மீண்டும் அவரின் கண்களில் தோன்றி மறைந்தன.

அங்கு நின்றிருந்த வாகனத்தில் ஆங்கிலேய கொடியைக் கண்டு கடுஞ்சினம் கொண்டார் அப்துல்லா.அந்த கொடியை அப்படியே கிழித்து எறிந்துவிட்டு தன் சட்டைப்பையில் எப்போதும் வைத்திருக்கும் இந்தியக் கொடியை அதன் மேல் தொங்க விட்டார் அப்துல்லா.இப்போது தான் அவரின் மனம் அமைதி அடைந்தது.விடுதலையே கிடைத்ததுபோல் மனம் நெகிழ்ந்தார் அப்துல்லா.

திடீரென்று துப்பாக்கி சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அப்துல்லா,நீரில் அழுந்தப்பட்ட பந்து போல் விசைக்கொண்டு விளக்கெரிந்த அறையை நோக்கி ஓட ஆரம்பித்தார் அப்துல்லா.

அப்படி ஏதும் விபரீதம் நடந்திருக்க கூடாது..கண்டிப்பாக இருக்காது..இறைவா நான் சென்றிருக்கக் கூடாதா ..அந்தக் கயவர்களை என்ன செய்கிறேன் பார் ..என்று அறையை நோக்கி ஓடினார் அப்துல்லா.

துப்பாக்கி சத்தம் கேட்டு கட்டிடத்தின் மற்ற விளக்குகளும் தன் பங்கிற்கு ஒளியேற்றி காண்பித்தன.

எங்கும் பதற்றமான நிலை.காவலாளிகள் கல்லெறிந்த குளத்தில் ஏற்படும் நீரலைப்போல் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்தனர்.இனி என்ன நடந்தாலும் பரவாயில்லை.நடப்பதை துணிவுடன் எதிர்ப்போம் என்ற உறுதி மூச்சுடன் ஒவ்வொரு அறையாக தேடினார் அப்துல்லா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.