(Reading time: 17 - 33 minutes)

" கிரி, கொஞ்சம் நான் சொல்றதை பொறுமையா கேளுடா .. ஒருவேளை அவளுக்கு இதற்கு பின்னாடி நீதான் இருக்கன்னு தெரியாமல் இருக்கலாம்  .. இப்போதான் ஒரு விஷயத்தை வேண்டாம்னு வாய்விட்டு சொல்ற அளவுக்கு  அவ வந்திருக்கா, இப்போ நீ வந்துட்டா, அவ மறுபடி அவ கூட்டுக்குள்ள போக வாய்ப்புகள் இருக்கு .. நம்ம பிளான்  படி கவியை பழைய கவியாய் மாற்றனும் .. அதற்கு இந்த கோபம் கூட ரொம்ப நல்ல விஷயம் டா .. அவ இங்கிருந்து போக மாட்டா ..அதுக்கு நான் பொறுப்பு " என்றான் வருண் ..

"..."

" நீயே கொஞ்சம் பொறுமையா யோசிச்சா நான் சொல்ல வர்றது உனக்கு புரியும் கிரி .. அவசரபடாதே " என்றான் ..

" ..."

" என்னடா ஒன்னும் பேச மாட்டுற நீ "

" இப்போ நான் என்னதான் பண்ணுறது  வருண் ?"

" என்னை நம்பு போதும் .. மிச்சத்தை நான் பார்த்துக்குறேன் "

" ஓகே டா "

" வச்சிடுறேன் .. பாய் " என்று போனை வைத்தவன் உடனே வானதியை அழைத்தான் .. அப்போதுதான் சாஹித்யாவை  அழைத்து வர அருள் அன்பினொளி இல்லத்திற்கு சென்றிருந்தான் .. இங்கு வருண்  நடந்த அனைத்தையும்  கூறினான் .. " இப்போ என்ன பண்ணுறது வருண் அண்ணா ?"

" பதற வேணாம் சிஸ்டர் .. இந்த மாதிரி சூழ்நிலை வரும்னு நான் ஏற்கனவே எதிர்பார்த்தது தான் .. இதை நானே சமாளிச்சிடுவேன் .. ஜஸ்ட் உனக்கிது தெரியனும்னு தான் போன் பண்ணினேன் .. நான் அப்பறமா பேசுறேன் " என்று போனை வைத்தான் அவன் ..

இத்தனை நாட்கள்  கவிமதுராவிற்கு  உதவியாய் இருந்ததின் பலனாய் ஓரளவு அவளது கேள்விகளை கணித்து வைத்திருந்த  வருண் , பதில் சொல்ல தயாராகி கொண்டிருந்தான் ..

அங்கு ஆபிசில் வெறுமையாய் அமர்ந்திருந்தாள்  கவிமதுரா .. எப்படி யோசித்து பார்த்தாலும் அவளுடைய கோபம் எல்லாம் தன் மீதுதான் திரும்பியது .. விதி , சதி, குரோதம் , இப்படி எதுவுமே அவளது வாழ்க்கையை திருப்பி போடவில்லை .. அவள் வாழ்வில் நடந்த ஒவ்வொரு மாற்றத்திற்கும் அவள் மட்டுமே காரணம்.

 கிரிதரனை  வேண்டாமென்று  ஒற்றை காலில் நின்றவள் அவள்தான் !

பெற்றோரின் கண்ணீருக்காக அரவிந்த்தை மணந்தவளும்  அவள்தான் !

மனதில் கிரிதரனை மறக்க முடியாமல் அரவிந்துடனும் மனநிறைவுடன் வாழ முடியாமல் தவித்ததும் அவள்தான் !

இறுதியாய் கணவனின் வீட்டிற்கு செல்கிறேன் என்று பெற்றவர்களின் பார்வையில் இருந்து மறைந்தவள் அவள்தான் !

எதையும் எதிர்த்து பேசி பழகி, அரவிந்த் வீட்டில் பேசாமடந்தையாய் மாறியவளும்  அவள்தான் !

கிரிதரனின் மகிழ்வை பறித்ததற்காக தனக்குத் தானே தண்டனை தருவதாய் எண்ணிக் கொண்டு தன் தலையெழுத்தை மாற்றிக் கொண்டவள் அவள்தான் ..!

இப்படி ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவள் தன்னை விட்டுக் கொடுத்ததினால் தானே இன்று ஒவ்வொருவரும் அவள் வாழ்கையில் உரிமை எடுத்து  கொண்டிருக்கின்றனர் ..

யார் வருண்  ? இவன் எனக்காக ஏன் தனது அடையாளத்தை மறைக்க வேண்டும் ? ஒருவேளை, இன்று அவனது லெப் டாப்பை பயன் படுத்தாமல் இருந்திருந்தால் , இந்த நிறுவனத்தின் முதலாளி இவன்தான் என்று தெரியாமலே இருந்திருக்குமே ? இதற்கெல்லாம் ஒரே காரணம் , யார் என்ன சொன்னாலும்  சரியென தலையாட்டும் தனது குணம்தானே ? ஏன் இப்படி மாறி விட்டேன் நான் ? " என்று தன்னைத்தானே நொந்து கொண்டாள் .. அவளை அதிக நேரம் புலம்ப விடாமல் வந்து சேர்ந்தான் வருண் ..

தனதறையில்  சோபாவில் அமர்ந்திருந்தவளை கவனிக்காதவன் போல தனது சூட்கேசை திறந்து கொண்டே பேச தொடங்கினான் வருண் ..

" சாப்பிட்டியா கவி ? "

".."

" நான் காபி போட போறேன் உனக்கு வேணுமா ? "

" ...."

" நான் ஜோதிகா ரசிகன் தான் .. மொழி படம் 38 தடவை பார்த்திருப்பேன் ..பட் அதுக்காக மௌனமொழி எல்லாம் கத்துகிட்டவன் இல்லையம்மா " என்றான் வருண் .. அவனது கேள்வியும் இயல்பான முகபாவமும் அவளை சீண்டியது ..

" நீங்க என்னதான் நினைச்சுகிட்டு இருக்கீங்க உங்க மனசுல  ?"

" அது நிறைய இருக்கும்மா .. லைப்ல உருப்படியா ஏதாச்சும் சாதிக்கணும்.. தீபிகா படுகோன் மாதிரி சூப்பர்  பெண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கணும் .. அப்பறம் "

" மிஸ்டர் வருண் !!!"

" என் கிட்ட குரல் உயர்த்தி பேசாதே கவிமதுரா .. நான் உனக்கு பாஸ் !" என்றவனின் முகத்திலும் அத்தனை தீவிரம் !

" யார் யாருக்கு பாஸ் ?? முதல்ல என்னை ஏன் இப்படி ஏமாத்துனிங்க  சொல்லுங்க .. எனக்கு உங்க பதவியை விட்டு கொடுப்பதின் நோக்கம் என்ன ? உங்களுக்கு என்னை எப்படி தெரியும் ? எனக்கு எல்லாம் தெரிஞ்சாகனும் .. "

" கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் போன்ல எனக்கு எதுவும் தெரிஞ்சுக்க அவசியம் இல்லைன்னு நீ சொன்னியேம்மா " என்றான் வருண் கிண்டலாய் ..

" ஓஹோ சோ, சொல்ல முடியாதுன்னு சொல்ல வர்ரிங்க .. அப்படிதானே ??"

"" அப்படி இல்லை ..எதையும் பொறுமையா கேட்குற மனநிலை உனக்கில்லை .. அதனால் எனக்கு இப்போ ஒன்னும் சொல்றதுக்கு இல்லைன்னு சொல்ல வந்தேன் "

" இவ்வளவு விஷயங்கள் எனக்கு தெரியாமல் நடந்திருக்கு , நான் பொறுமையா இருப்பேன்னு எப்படி எதிர்பார்கறிங்க  அண்ணா ?"

சட்டென முகம் மலர்ந்தான் வருண் .. அவளருகில் நாற்காலியை நகர்த்தி அமர்ந்தான் ..

" பரவாயில்லையே! மிஸ்டர் வருண், மறுபடியும்  அண்ணா ஆகிட்டேனே .. அதுவரை சந்தோசம் தான் தங்கச்சி " என்றான் .. அவனை கோபமாய் முறைக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள் கவிமதுரா .. அதை உணர்ந்தவனோ

" அதான் , என் பால் வடியும் முகத்தை பார்த்தா உனக்கு கோபம் வரலைல ? அப்பறம் எதுக்கு இப்படி எல்லாம் முயற்சி பண்ணுற நீ ? " என்றான் ...

" ப்ச்ச்ச்ச் .. நீங்க நல்லவங்களா இருக்கலாம் .. என்னை உங்க தங்கச்சி மாதிரி பார்த்துக்கலாம் .. ஆனா அதுக்காக நீங்க என்கிட்ட இவ்வளவு பெரிய தப்பை மறைச்சது சரின்னு ஆகிடுமா சொல்லுங்க ? " என்றவள் கேட்கும்போதே அவளது குரல் தணிந்திருந்தது ..

" எனக்கும் உண்மையை சொல்லனும்னு ஆசை இருந்ததுதான் .. ஆனா என்னன்னு சொல்லுவேன் ? உன்னை பார்த்தா, எனக்கு இறந்து போன என் தங்கை ஞாபகம் வந்தா, அவ உயிரோடு இருந்திருந்தா உன் வயசுதான் அவளுக்கும் இருந்திருக்கும் ..என் தங்கச்சி வயசில் இருக்குற பொண்ணுக்கு நான் நல்லது பண்ணனும்னு நினைக்கிறேன் .. ரேகா , அதான் என் தங்கச்சி , அவ மட்டும் உயிரோடு இருந்திருந்தா இந்த நிர்வாகத்தை அவ கையில் கொடுத்திருப்பேன் ... அவளுக்கு பதிலா நீ அவ இடத்தில் இருப்பியான்னு உன்னை பார்த்த முதல் நாளே கேட்டிருந்தா , நீயும் சரி  ஓகே அண்ணான்னு சொல்லி இருந்துருப்பியா ?"

''...."

" உன் சிம்பதி எனக்கு தேவையில்லை கவி ... ஒத்துக்குறேன், உன்னை எனக்கு தெரியறதுக்கு வானதி ஓர் காரணமா இருந்திருக்கலாம் .. ஏன், வேறு காரணங்கள் கூட இருந்திருக்கலாம் (ஹா ஹா அந்த காரணம் கிரின்னு எங்களுக்கு தெரியாதா ?) ஆனா உன்னை தங்கச்சியா நினைச்சதும், உனக்கு ஒவ்வொன்னும் பார்த்து பார்த்து செய்ததும் உன்னை ரேகா ஸ்தானத்தில் வைத்து தான் ! என்னை நான் நியாயபடுத்திக்க விரும்பல அதே நேரம்  , கடவுளா எனக்கு கொடுத்த தங்கச்சியை இழக்கவும் நான் தயாரா இல்லைடா " என்றவன் அருகில் இருந்த ஜீவாவை கொஞ்ச ஆரம்பித்தான் ...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.