(Reading time: 12 - 23 minutes)

"மாமி நான் அப்புறம் வரேன்..", என்று விடைபெற்ற பைரவியை, தடுத்த சாரதா..

"ஒன்னும் பெரிய விஷயம் இல்லை.. நீ இரும்மா.. மஹதி.. நீ முடிஞ்சா பைரவியோட ஷாப்பிங் போய் உனக்கு நல்லதா ஒரு சன்ன ஜரிகை போட்ட பட்டு புடவை ஒன்னு வாங்கிண்டு வந்துடு.. எல்லாம் பாழாயிடுத்து", என்றாள்

"என்ன அப்படி சொல்லற சாரு??.. இந்த தீபாவளிக்கு கூட வாங்கினோமே ஒரு பட்டு புடவை.. அதென்னாச்சு?", என்று கேட்டவரை பார்த்த சாரதா..

"ஏன்னா மறந்து போயிடுத்தா.. கல்யாணி அதுக்குத் தானே அந்த கலாட்டா பண்ணினா.. திரும்பி போறச்சே தன்னுடையதுடன் சேர்த்து மஹதிதையும் இல்லே எடுத்துண்டு போனா மகராஜி.. சொல்லவே கூச்சம்மாயிருக்கு.. நீ போம்மா மஹதி.. நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்கோ.. பைரவி நீ கொஞ்சம் அவளுக்கு துணையா போக முடியுமாம்மா??..", என்று கேட்டுக் கொண்டவளை பார்த்து நம்பிக்கையாய் முறுவலித்த பைரவி

"மாமி போன்னா போகப் போறேன்.. எனக்கு ஒரு சிஸ்டர் இருந்தா பண்ண மாட்டேனா என்ன", என்றவள்

வா மஹதி.. எனக்கு ஒரு பத்து நிமிஷம் டைம் குடு.. நான் டிரெஸ் சேன்ஞ் பண்ணிட்டு கம்ஃபர்டபிளா வரேன்.", என்று மாடிக்கு விரைந்தாள்.

You might also like - Puthir podum nenjam... A romantic story...

மாடிக்கு சென்றவள் ஜீன்ஸ், ஷார்ட் குர்த்தி அணிந்து முகம் கழுவி வேகமாய் தயாராகி வெளியே வந்தாள்.

"தனக்காக வெளியே நின்றிருந்த மஹதியை பார்த்தவள்.. "நான் ரெடி.. இரு மாடியிலே போய் அஜய்க்கு சொல்லிட்டு வரேன் என்று திரும்பியவள் அஜய்யே இறங்கி வரக் கண்டாள்..

"அஜய் நாங்க கொஞ்சம் ஷாப்பிங் போறோம்.. ஈவினிங் ஆயிடும் வரதுக்கு.. சரி வரட்டா பை.”, என்றவாறு கீழே இறங்கத் தொடங்கியவளின் கையை பற்றி நிறுத்திய அஜய்..

"இரும்மா.. நான் இங்கே போர் அடிச்சுண்டு இருக்கேன்.. உன்னை ஏதாவது மூவி பார்க்கப் போலாமான்னு கூப்பிட வந்தேன்.. நீ என்னடான்னா தனியா ஷாப்பிங் கிளம்பிட்டே.. மஹதி.. உன்னோட தானே இவ வரப் போறா?.. நானும் ஜாயின் பண்ணிக்கட்டுமா? இன்னிக்கு எனக்கு வேறே எந்த வேலையும் இல்லை.. வீக் எண்டு அதனாலே யாரும் இல்லை இன்னிக்கு எனக்கு கம்பனி தர.. ப்ளீஸ்.. நானும் வரேனே..", என்று கெஞ்சியவனை சங்கடத்துடன் பார்த்த மஹதி,

"சரி அஜய் வாங்கோ..", என்று கூறி கீழே சென்றாள்.. அங்கே வசந்த்தும் தயாராய் நின்று கொண்டிருந்தான் அவர்களுடன் கிளம்ப..

தன் அம்மாவின் உபயம் என்பதை புரிந்து கொண்ட மஹதி, "என்னடா நீயும் வரயா?..சரி சரி.. வா அஜய்கும் கம்பனியாச்சு.. கிளம்பு முதலில் தி.நகருக்கு போகனும்.. ரெண்டு ஆட்டோலே போயிடலாம்.. போ நீ போய் ஆட்டோ கூப்பிட்டுண்டு வா", என்றாள்

ராமமூர்த்தி, "வசந்த் அங்கே போன உடனே நீ பாட்டுக்கு கனா கண்டுண்டு நிக்காதே..அப்படியே பாண்டி பஜார்லே நல்ல பூ பழமெல்லாம் ஒரு நா தங்கறாபோலே வாங்கிண்டு வந்துடு.. அப்புறம் முந்திரி திராட்ச்சை, வாழைக்காய் உருளை எல்லாம் வாங்கிக்கோ, மறந்துட்டேன்னு வந்து நின்னே தோலை உரிச்சு புடுவேன்", என்று மிரட்டியவரை பார்த்த அஜய்,

"அங்கிள் நாங்க பார்த்து வாங்கிண்டு வரோம் கவலை படாதீங்க, வா வசந்த் ஆட்டோ கூப்பிடலாம்", என்று அழைத்துப் போனான்.

சாரதா அதற்குள், "மஹதி.. அல்பத்தனம் பார்க்காம நல்லதா வாங்கிண்டு வாம்மா.. கொஞ்சம் கூட குறைய ஆனா கூட பரவாயில்லை.. சமாளிச்சுகலாம்", என்றாள்.

"அம்மா.. அதெல்லாம் நான் பாத்துக்கறேன்.. நீ வேற ஏதானும்  வேணும்னா இப்பயே சொல்லிடு.. அப்புறம் நை நைன்னு வசந்த்தை படுத்தி வெளியே துரத்தாதே.. என்ன யோசிச்சு சொல்லு", என்றவளை செல்லமாய் முறைத்த சாரதா..

"ஆமாம்டியம்மா உன் தம்பி தங்கக் கம்பியை நான் அப்படி ஒன்னும் வேலை வாங்கி படுத்த மாட்டேன்.. ரொம்பத்தான் அலட்டிக்கறே.. நான் இல்லாம எங்கேந்து வந்தானாம் உன் தம்பி?"

"ம்ம்.. வானத்துலேந்து அவன் குதிச்சான் போதுமா...சரி .. அவன் ஆட்டோவோட வந்துட்டான்.. நீ போய் உன்னோட ரைட் அண்ட் லெஃப்ட் ஹாண்ட் பொண்களுக்கு ஃபோன் போடு.. இல்லாட்டி அவா நம்மை போட்டு தள்ளிடுவா.. வரேம்மா..", என்று கூறி விடை பெற்றாள் மஹதி.

நால்வர் அணி, தி.நகரிலிருந்த அந்த பெரிய ஜவுளிக்கடையை அடைந்தது.. அங்கே குவிந்திருந்த மக்கள் கூட்டத்தை பார்த்த அஜய்க்கு தலையை சுற்றி விட்டது.

"ஒஹ் மை காட்.. க்ரேஸி பீப்பிள்.. இவ்ளோ பேரா துணி வாங்க வருவா.. அதுவும் பட்டுப் புடவை..?", என்று பிரமித்தான்.

"அஜய் இது நல்ல கல்யாண சீஸன்..  மாசம் முழுக்க எந்த கல்யாண காரியமும்  நடக்கலை.. இப்போ தை பிறந்துட்டதாலே கூட்டமும் அதிகம்.. நல்ல சேல்ஸ் டைம் இது.. எல்லா நல்ல காரியங்களும் இந்த மாசத்தில் தான் துவங்கும் இங்கே.", என்று விளக்கம் சொன்னான் வசந்த்.

"அதான் மஹதியை பொண்ணு பார்க்க வராளா?..மஹதி.. கேன் ஐ ஆஸ்க் யு சம்திங்க் ?.. தப்பா நினைச்சுக்காதே.. முன்னே பின்னே தெரியாதவனை கல்யாணம் பண்ணிக்க அவன் முன்னாடி இப்படி ஷோ கேஸ் பொம்மையாட்டம் நிக்கறது உனக்கு ஓ.கேயா?.. டோன்ட் யு ஃபீல் இட் இஸ் அப்ஸர்ட் அண்டு அன் கம்ஃபர்டபிள்?"

"ம்ம்.. உங்க பழக்க வழக்கங்கள் வேற..  எங்களோடது வேற, இன்னமும் நாங்க எங்க அப்பா அம்மா கட்டுப்பாட்டுக்குள்ள தான் இருக்கோம்.. அதுக்கு எங்களுக்கு ஒரு வருத்தமும் இல்லை.. இதே உங்க அமெரிக்காவுல பதினேழு பதினெட்டு வயசு ஆச்சுன்னா நீங்கள்ளாம் தனியா செயல் படறேள்.. அது உங்க கல்ச்சர்.. எங்கள்ள சிலரும் இப்போ அப்படி தான் இருக்கா.. ஆனாலும் குடும்ப அமைப்பு இன்னமும் கூட சிதையல இங்கே.. தட் இஸ் வாட் இஸ் கிரேட் அபௌட் இந்தியா.. எங்களுக்கு எந்த தயக்கமோ வெக்கமோ இல்லை அப்பாம்மா சொல்லறத செய்யறதுக்கு.. அவாதான் நம்மை உருவாக்கினவா.. அவாளுக்கு இல்லாத உரிமையா?", என்று அவனையே திரும்பி கேட்டாள் மஹதி..

அதற்குள் சேல்ஸ்மேன் நிறைய சாய்ஸுடன் வந்துவிட.. ஒவ்வொன்றாய் பிரித்து காட்டச் சொல்லி அதில் பிஸியாகி விட்டனர் பெண்கள்.

"அக்கா இந்த பச்சை கலர் புடவை உனக்கு ரொம்ப சூட் ஆகும் இதை எடுத்துக்கோ..", என்றான் வசந்த்

பைரவி கூட அது நன்றாகவே இருக்கு என்றாள்.. லேசுபாசாக அதன் விலையை பார்த்த மஹதிக்கு மயக்கமே வந்துவிட்டது.

"இல்லைடா எனக்கு இந்த மாதிரி ஹெவி வொர்க்கெல்லாம் பிடிக்கலை.. இதெல்லாம் எத்தனை தடவை கட்டப் போறோம்.. நான் வேற பார்க்கறேன்", என்றாள்.

அவள் விலையை பார்த்ததை கவனித்துவிட்ட அஜய்.. "மஹதி உனக்கு பிடிச்சா எடுத்துக்கோ.. மணி இஸ் நோ இஷ்யு.. நான் பே பண்ணறேன்", என்றான்.

ஒரு கணம் அவனை நன்கு நிமிர்ந்து கம்பீரமாய் பார்த்த மஹதி, "அஜய் அங்கே எப்படியோ தெரியாது இங்கே ஒரு பொண்ணுக்கு துணி வாங்கித் தரணும்னா ஒன்னு அவ அண்ணா தம்பியா கூடப் பிறந்தவாளா இருக்கனும் இல்லை அப்பாவாவோ, இல்லை கணவனாகவோ இருக்கணும்.. இது பொது விதி.. எங்காத்துலே இதை நாங்க இன்னமும் ஃபால்லோ பண்ணறோம்..  அதை மாற்ற எனக்கு இஷ்டம் இல்லை.. சாரி..தப்பா நினைச்சுக்காதீங்க.", என்று கூறிவிட்டு

"பைரவி, இந்த பிங்க் ஓ. கே வா" என்று கேட்டாள்.

அஜய்க்கு வியப்பு மேலிட்டது.. இதென்ன பெண் இவள்.. ..’ஒரு சென்ட் பாட்டில் கொடுத்தாலே கம்பனி கொடுக்கும் பெண்களும் இங்கு உண்டு.. ஆனால் இவள் இன்னமும் அப்பா அம்மா என்று இந்த மாதிரி சென்டிமென்ட்ஸ் பார்த்துக் கொண்டிருக்கிறாள். பாவம் அந்த மாப்பிள்ளை அவன் பாடு திண்டாட்டம்தான் இந்த பெண்ணை வைத்துக் கொண்டு’ என்று நினைத்தவன் ஒன்றும் சொல்லாமல் வேறு பக்கம் பார்க்கத் தொடங்கினான்.

"எனக்கு ஓ.கே மஹதி..உன் தம்பியை கேளு..", என்றாள் பைரவி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.