(Reading time: 25 - 49 minutes)

வர் முழுதாக முடிக்கவில்லை.. ஆனால் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது அவனுக்கு புரிந்தது...

"யுக்தா இதுக்கு நானும் காரணம்னு அவங்க அம்மா கிட்ட சொன்னாலும்... அதுல உனக்கு தான் அதிக பங்கு இருக்கு... இப்படி ஒரு கேவலமான வேலையை செய்வேன்னு நான் நினைக்கவில்லை.." சொல்லிவிட்டு கோபமாக அங்கிருந்து போய்விட்டார்... மதி எதுவுமே பேசாமல் சென்றுவிட்டாள்... இதுவே பிருத்விக்கு மரண தண்டனையை விட கொடுமையாக இருந்தது.

ஆட்டோவுக்கு பணத்தை கொடுத்துவிட்டு வீட்டிற்குள் சென்றாள் சங்கவி... ஒருவாரம் சந்தோஷமாக இருக்கனும்னு நினைச்சு ஊருக்கு போய் அங்க லஷ்மி அத்தையால பிரச்சனை வந்து... யுக்தா காதல் பத்தி தெரிஞ்சு அதுல இவ கொஞ்சம் கோபப்பட்டு கடவுள்கிட்ட வேண்டி... அந்த வேண்டுதலையும் நிறைவேற்றிவிட்டு வந்துவிட்டாள்... இனி யுக்தாவோடு ஆறுதலாக இருக்க வேண்டும்.. இப்படி மனதில் நினைத்துக் கொண்டே வீட்டிற்கு நுழைந்தாள்..

நுழைந்த அந்த நொடி ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்தாள் கவி... ஆளுக்கொரு மூலையில் உட்கார்ந்திருந்தனர்... அதுவும் சுஜாதா அழுதுக் கொண்டிருந்தாள்... அதைப் பார்த்து அவளிடம் சென்றாள் கவி...

அதுவரை அழுகை கொஞ்சம் கொஞ்சமாக ஓய்ந்து கண்களில் கண்ணீர் மட்டும் வந்துக் கொண்டிருந்தது... கவியை பார்த்ததும் திரும்பவும் ஓ என்று அழுதாள் சுஜாதா...

குழந்தைகளை பார்த்து பார்த்து வளர்க்கும் பெரியவர்கள் சில நேரங்களில் தன் கஷ்டங்களை வெளிப்படுத்தும் வடிகாலாகவே பிள்ளைகளை நினைப்பர்... அதை கூறுவதால் சிறியவர்கள் அந்த பிரச்சனையை தீர்த்து வைக்கவோ இல்லை ஆறுதல் கூறவோ போவது இல்லை தான்... ஆனாலும் அதை வெளியில் இருப்பவர்களிடம் சொல்வதை விட பிள்ளைகளிடம் கூறுவர்.. அதுவே அவர்களுக்கு ஆறுதலாக இருக்கும்..

அப்படித்தான் சுஜாதாவும் யுக்தாவை பற்றி கவியிடம் கூறி அழுதாள்... அவளுக்கு திருமணம் ஆகவில்லையே இதை அவளிடம் கூறலாமா..?? என்றெல்லாம் அவள் யோசிக்கவில்லை.. இதைக் கேட்ட கவிக்கு அதிர்ச்சி... சம்யு இப்படி நடந்துக் கொண்டாளா..?? ஆனால் ஏன்..??

"சித்தி என்ன சொல்றீங்க... சம்யு அந்த பிருத்வியை லவ் பண்ணா தான்... ஆனா பிருத்வி யாரையோ லவ் பண்றது தெரிஞ்சு.. இவ ஒதுங்கிட்டாளே.. சித்தி நீங்க தெரியாம சொல்றீங்க... நம்ம சம்யு இப்படில்லாம் செஞ்சிருக்க மாட்டா.." கவி கூறியதை கேட்டு சுஜாதாவுக்கு அதிர்ச்சி..

பிருத்வியை மணக்கும் ஆசை தன் மகளுக்கு இருக்கிறதோ என்று இவள் சந்தேகப்பட்டாள்... ஆனால் யுக்தா பிருத்வியை காதலிக்கிறாளா..?? இரண்டுக்குமே வித்தியாசம் இருக்கிறதே... வெறும் ஆசை மட்டும் இருந்தால் பிருத்வி தனக்கு இல்லை என்று தெரிந்ததும் அந்த ஆசை மறைந்துவிடும்... ஆனால் காதல் என்றால் பிருத்வியை அவள் எப்படி மறப்பாள்...

"அய்யோ என்னோட மகளோட வாழ்க்கையை நானே அழிச்சிட்டேனா... அவ முன்னாடி பிருத்விக்கும் அவளுக்கும் கல்யாணம் பண்ணனும்னு பேசி அவ மனசுல ஆசையை வளர்த்துட்டேனே... இப்போ அவ நிலைமைக்கு நான் தான் காரணமா...??"

அவள் அப்படி சொல்லி அழ அழ அதை பார்த்த மாதவன் நிலைமை தான் மிகவும் மோசமானது... மனதளவில் அவர் உடைந்து போய்விட்டார்.... சுஜாதா மனசில் இந்த ஆசை இவ்வளவு தீவிரமாக இருக்கும் என்றோ... தன் மகளுக்கு இப்படி ஒரு காதல் இருக்கிறது என்றோ இவ்வளவு நாள் தெரியாமல் இருந்திருக்கிறாரே.... அதுவும் அந்த பிருத்விக்கு வேறொரு பெண்ணோடு காதல்... தன் மகளின் நிலைமை என்ன..?? அவருக்கு ஒன்றுமே விளங்கவில்லை... தன் மனைவி மகளை நன்றாக வைத்திருக்க வேண்டும் என்ற நினைப்பில் வெளிநாட்டில் வேலை.. வசதி வாய்ப்பு என்று பார்த்து பார்த்து செய்த அவர் அவர்களின் மனதில் உள்ளதை அறியாமல் விட்டுவிட்டாரே... அவர் மனம் வேதனையில் துடித்தது.

சுஜாதாவை ஓரளவுக்கு சமாதானப்படுத்திவிட்டு தன் தோழியை பார்க்கச் சென்றாள் கவி.... கட்டிலில் உட்கார்ந்து கொண்டு எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் யுக்தா... அவள் அழுது கொண்டிருப்பது நன்றாக தெரிந்தது கவிக்கு... அவள் அருகில் சென்று "சம்யு " என்று அழைத்தாள்...

அவளை பார்த்ததும் "கவி" என்று கட்டிக் கொண்டு அழுதாள் யுக்தா..

"என்ன சம்யு... சித்தி என்னென்னவோ சொல்றாங்க... அப்படி எதுவும் இல்லல்ல... சொல்லு சம்யு அப்படி எதுவும் இல்லல்ல.."

"அப்படி எதுவும் இல்லன்னு சொல்ற தகுதிய நான் இழந்துட்டேன் கவி... நான் தப்பு பண்ணிட்டேன் கவி... " அழுதுக் கொண்டே பேசினாள்...

"சம்யு.. அப்படி என்ன நடந்துச்சு சம்யு... நீ அப்படி நடந்துக்க கூடிய ஆள் இல்லையே... அந்த பிருத்வி எதாவது உன்கிட்ட தப்பா நடந்துக்கிட்டானா..?? சொல்லு சம்யு..??"

"இல்லை கவி... பிருத்வி அப்படிப்பட்ட ஆள் இல்லை... என்னோட சம்மத்தத்தோடு தான்.." முழுதாக சொல்ல முடியவில்லை அவளால்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.