(Reading time: 15 - 29 minutes)

 05. தவமின்றி கிடைத்த வரமே - லேகா

Thavamindri kidaitha varame 

ங்கு நுழைந்தாலே பாரதிராஜா படத்தில் வருவதுபோல, இரு புறமும் வயல்கள் நிறைந்துகிடக்கும்.  அதனைத் தாண்டி சிறிது தூரம் சென்றால் தான் வீடுகளைக் காண முடியும்.  அந்த அழகிய கிராமமானது, ஒரு பகுதி வயல்களாலும், மறு பகுதி தென்னை, பாக்கு, மா, வாழை போன்ற பல வகையான மரங்களாலும் சூழப்பட்டது. 

மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளதால், இதமான காலநிலையையும், வளங்களையும் அழகையும் குறையாது வாரி வழங்கியுள்ளது இயற்கை.  இந்த கிராமவாசிகளும் அந்த சீதனத்தை போற்றி மேம்படுத்தி வருகின்றனர்.  இயற்கை வேளாண்மை செய்து தீங்கு இல்லாத காய்கறிகளைப் பயிரிடுவதால் இங்கே விளைபவற்றைக் கொள்முதல் செய்ய மாநிலம் முழுவதிலிருந்தும் வியாபாரிகள் வருவர்.  விவசாயம் மட்டுமல்லாது, கால்நடைகளாலும் நல்ல வருமானம் வந்தது மக்களுக்கு. 

பலதரப்பட்ட மக்கள் வாழ்ந்து வந்தாலும் அனைவரும் ஒற்றுமையுடனும் தோழமையுடனும் வசித்து வந்தனர்.  அதற்குக் காரணம், அவர்கள் போற்றும் தண்டாயுதபாணி ஐயா.  அவர் இந்த ஊருக்கு செய்த உதவிகள் எண்ணிலடங்காதவை.  சொல்வதற்கு ஆரம்பித்தால் சொல்லிக்கொண்டே போகலாம்.  பல நற்செயல்கள் புரிந்த அவர் இப்போது இல்லாவிடினும் அவரது பிள்ளைகள் அதனை இன்றும் பின்பற்றுகிறார்கள்.  அதனால் அச்சிற்றூர் மட்டுமல்லாது அக்கம் பக்கத்து ஊர்களிலும் அவர்கள் குடும்பத்திற்கு நன்மதிப்பு உண்டு.  ஊரின் நடுவே கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் அவர்கள் மாளிகையைப் பார்க்கையில் அதனுள் வசிப்பவர்களிடம் இருந்து இதற்கும் வந்துவிட்டதோ என்று தோன்றும்.

அத்தகைய பெருமைமிகு குடும்பத்தின் மூத்த மகன் தான் விஷ்வநாதன்.  தன் தந்தையைப் போலவே இந்த ஊரையே உயிராகப் போற்றுபவர்.  யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் இவர் வீட்டுக் கதவை உதவி கேட்க தட்டலாம்.  இவரது துணைவியார் மீனாட்சியம்மாள்; கணவரது காலடியோசையை வைத்தே அனைத்தையும் அறிந்து கொள்வார்.  இவர்களது அருமைப் புதல்வன், அருள்மொழி; தவமிருந்து பெற்ற பிள்ளை; இருபத்தி ஏழு வயது கட்டிளம் காளை.  தந்தைக்கு உதவிபுரியவே கல்லூரியில் வேளாண்மை பாடப் பிரிவை எடுத்து படித்து பட்டம் பெற்று, அந்தத் துறையில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்று வேட்கை கொண்டிருப்பவன்.  வாருங்கள் வீட்டினுள் செல்வோம்.

வெளியிருந்து பார்க்கும் அழகும் கம்பீரத்திற்கும் அனுவளவும் குறையாது மனதை கொள்ளை கொண்டன உள்ளிருக்கும் அனைத்தும்.  அதன் வரவேற்பறையில் ஒரு பெண் தாவணி அணிந்து துள்ளித் துள்ளி நடந்துவந்து கொண்டிருந்தாள், “அத்தை” என குரல் கொடுத்துக்கொண்டே.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "மூங்கில் குழலானதே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

“எங்கே போய்ட்டாங்க?  மாமாவும் இல்லை.  பெரிய மனுஷி வந்துருக்கேன்.  ஒரு ஆளைக்கூட வரவேற்க காணோமே” என்று கூறிகொண்டே கீழிருந்த அனைத்து அறைகளிலும் தேடினாள்.  (முன்னே வந்தபோது என்ன அலப்பறை செய்தியோ!  அதான் ஓடிட்டாங்க)

“சரி, மேலே சென்று பார்ப்போம்” என மாடிக்கு செல்லும் படிகளில் ஏறினாள்.  கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் பார்த்தபின் அந்த கதவின் முன் வந்து நின்றாள் அந்தப் பெண்.

“அட! அத்தான் கதவை பூட்டலை போல.  எப்பவும் என்னை உள்ளே வரவே விடுவதில்லை.  இன்னைக்கு பார்த்துவிட வேண்டியதுதான்” என்று தனக்குள் பேசிக்கொண்டே அந்தக் கதவில் கை வைத்தாள்.  ஆனாலும் சிறு வயதிலிருந்தே அவனைப் பற்றித் தெரியுமாதலால் முகத்தில் திறக்கலாமா, வேண்டாமா என்ற கேள்வி தொக்கி நின்றது அவளுக்கு.  அதன் காரணம், இன்று வரை அவனது அறைக்கு அவள் சென்றதில்லை.  ஏனோ, அவனுக்கு அவள் தன் அறையில் நுழைவதில் விருப்பமில்லை.  அவன் சொன்னதாலேயே ஆர்வமிருந்தாலும் அணைபோட்டுக் கொள்வாள் மனதுக்கு.  திருட்டுத்தனமாக ஒரு வாய்ப்பு கிட்டாதா என்ற நினைப்புதான் (அதானே!).  ஆனால் அது இதுவரை நடக்கவே இல்லை.

இன்று தான் அதற்கு நேரம் கிடைத்திருக்கிறது போலும்.  என்ன ஆனாலும் சரி என்ற முடிவோடு, “என் அத்தான், என் உரிமை” (பிரபு ரசிகையோ?) என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டு மெல்ல பூனை நடை பயின்று லேசாக திறந்து உள்ளே நோட்டம் விட்டாள்.  யாரும் இருப்பதற்கான அறிகுறியே தென்படவில்லையாதலால், தைரியமாக கதவை மேலும் திறந்து நுழைந்தாள்.

இரண்டு அடிகள் உள்ளே எடுத்து வைத்திருப்பாள் அவள்.  திடீரென்று அவளது இடையில் ஒரு கரம் அணைத்து தூக்கி சுற்ற ஆரம்பித்தது.

“ஆஆஆ!!!” என அவள் கத்தப்போக, மறுகரம் உடனடியாக அவளது வாய் பொத்தியது. 

“ஏய்… பயப்படாதே!  நான் தான்” என்று ஒரு குரல் காதில் ஒலிக்க, அதற்கு உயிர் கொடுத்த உதடுகள் தன் காதில் உரச சிலிர்த்து நின்றாள் அவள். 

அவன் மெதுவாக அவளைத் தன்புறம் திருப்பினான்.  அவளவன்; அவளது அருள்மொழி; அவளுக்கென பிறப்பில் இருந்தே நிச்சயிக்கப்பட்டவன்; அவளது சுவாசமானவன்.  அவனைக் கண்டாலே செங்கொழுந்தாகும் அவள், அந்த நெருக்கத்தில் அவன் முகம் காண முடியாமல் தரை நோக்கினாள். 

“ஹே என்னைப் பாரு” என்று அவன் காதோரம் கிசுகிசுக்க, அவ்விடத்தில் ஆரம்பித்த ஒரு மின்சாரம் நொடியில் உடல் முழுவதும் முழுவதும் பரவியது அவளுக்கு.  “ம்ம்ஹூம்” என்று மெல்ல தலையசைத்தாள் அவள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.