(Reading time: 12 - 24 minutes)

ஜெசிகா அமர்ந்தாள்.

"என்ன சாப்பிடுறிங்க?"

"இந்த குளிருக்கு சூடா எது குடுத்தாலும் சாப்பிடுவேன் சார்"

ஃபிளெம்மிங் சிரித்தார். அங்கே வேலை செய்பவரை அழைத்து காபி எடுத்து வருமாறு கூறினார்.

ஜெசிகா வசந்தை நோக்கினாள். அவன் இன்னும் போன் பேசிக்கொண்டிருந்தது அவளுக்கு எரிச்சலைத் தந்தது.

"சமீராவும் நீங்களும் எத்தனை வருஷமா நண்பர்கள்?"

"ஆறு வருஷமா சார். அவ தான் உங்ககிட்ட பேசி அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி குடுத்தா"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

"ரொம்ப புத்திசாலி பொண்ணு சமீரா. எடுத்துக்கிட்ட வேலையை திறம்பட செய்வா. இது வரைக்கும் அவ என்கிட்டே எந்த உதவியும் கேட்டது இல்லை. முதல் முறையா கேட்டா. அதுவும் அவளுக்கு இல்லை உங்களுக்கு"

"சாரி சார். இந்த உதவி எனக்கு இல்லை, என்னுடைய நண்பர் வசந்துக்கு"

"ஒரு நண்பர் தன் நண்பருக்கு சிபாரிசு பண்ணி அந்த நண்பரும் அவருடைய நண்பருக்கு சிபாரிசு பண்ணுறது வேடிக்கையா இருக்கு" என்று சிரித்தார் ஃபிளெம்மிங்.

வேலைக்காரர்  காபியோடு வந்தார். ஜெசிகாவும் ஃபிளெம்மிங்கும் காபியை எடுத்து ருசி பார்த்தனர்.

"வசந்த் வா!" என்று மெதுவாய் கத்தினாள் ஜெசிகா.

"ஏன் அவரை தொந்தரவு பண்ணுறீங்க. முக்கியமான போன் காலா இருக்கும். நான் எங்கயும் ஓடிட மாட்டேன். அவர் பொறுமையாவே வரட்டும்"

வசந்த் போன் பேசிவிட்டு அவர்களிடத்தில் வந்தான். அவன் முகத்தில் சிறிது சோகம் துளிர்விட்டிருந்தது. வேண்டுமென்றே வரவழைத்த புன்னகையை இதழில் ஓட விட்டபடி ஃபிளெம்மிங்குடன் கை குலுக்கினான்.

"ஐ ஆம் வசந்த் சார்"

"உட்காருங்க"

"சாரி சார். ஒரு இம்போர்ட்டண்ட் கால். என்னால தவிர்க்கமுடியல. நீங்க என்னை மன்னிக்கணும்"

"நோ ப்ரோப்ளேம் வசந்த்" என்று கூறி காபி கப்பை வசந்த்திடம் நீட்டினார் ஃபிளெம்மிங்.

அதை வாங்கிக்கொண்ட வசந்த், சம்பிரதாயத்துக்காக சிறிது பருகினான்.

"விஷயத்துக்கு வருவோம். சொல்லுங்க வசந்த், நீங்க எத்தனை வருஷமா இந்த பீல்டுல இருக்கீங்க?"

"மூணு வருஷமா"

"எத்தனை  Adக்கு ஒர்க் பண்ணிருக்கீங்க?"

"நூறுக்கு மேல இருக்கும் சார். சரியா தெரியல"

"இந்த பீல்டை எதுக்காக தேர்ந்தெடுத்திருக்கிங்க, தெரிஞ்சிக்கலாமா?"

வசந்த் என்ன சொல்வதென்று தயங்கினான். "இந்த பீல்டுல சின்ன வயசுல இருந்தே இன்ட்ரெஸ்ட் சார். நாம உருவாக்குவதை எல்லாரும் பார்த்து பிரம்மிக்குற விஷயம் எனக்கு ரொம்ப பிடிக்கும்"

"நீங்க எதிர்பார்க்கிற அந்த பாராட்டுக்கள் உங்களுக்கு கிடைக்குதா?"

"உண்மையா சொல்லனும்னா, இன்னும் கிடைக்கல சார்"

"ஆனாலும் போராடுறீங்க"

"ஆமா சார்"

"ஒரு வேளை இந்த பீல்டுல நீங்க தோத்து போய்ட்டீங்கன்னா அடுத்து என்ன பண்ணப்போறிங்க?"

அவர் கேட்டது வசந்திற்கு எரிச்சலை உண்டுபண்ணியது. இருந்தும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், "மறுபடியும் முயற்சி பண்ணுவேன் சார்" என்றான்.

"சரி வசந்த், நான் உங்களுக்கு உதவணும்னா என்னை நீங்க இம்ப்ரெஸ் பண்ணி ஆகணும். அதுவும் அஞ்சு நிமிஷத்துக்குள்ள" 

வசந்தம் ஜெசிகாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

"நீங்க எப்படி எதிர்பாக்குறீங்கன்னு எனக்கு தெரியலையே சார்"

"அதை நீங்க தான் முடிவு செய்யணும் வசந்த்"

"நீங்க என்ன கேக்குறீங்கன்னு தெரிஞ்சா தான என்னால பதில் பேச முடியும்"

"இந்த இடத்தை சுத்தி பாருங்க. நிறைய மரங்கள், புல்வெளிகள், அழகான மாளிகை, சுத்தி மலைகள் நிறைந்த அழகான பிரதேசம். இந்த இடத்துக்கு ஒரு கதை சொல்லுங்க. அதாவது, இந்த மாளிகையை ஏன் நான் கட்டணும்? அந்த மரங்கள் என்ன சொல்ல நினைக்குது? மேல பறந்துட்டு இருக்க பறவைகள் என்ன நினைக்கும்? அது ஏன் மேற்கு நோக்கி பறக்காம கிழக்கு நோக்கி பறக்குது?".

வசந்த் திரு திருவென விழித்தான்.

"எல்லாத்துக்கும் காரணம் இருக்கு வசந்த். நான் ரொம்ப பிஸியான ஆளு. என் நிம்மதி, அமைதிக்காக இதை கட்டினேன் . எதனால என் நிம்மதி போனது? என் மனைவி உயிரோட இல்லை, இது என்னுடைய கதை. இது போல எல்லாருக்கும்,  எல்லாத்துக்கும் ஒரு கதை இருக்கு வசந்த். இருக்கிறதுலேயே பெரிய கதாசிரியர் கடவுள் தான். அவர் தான் எல்லாத்தையும் படைத்து எல்லாருக்குள்ளேயும் ஒரு கதை உருவாக்கி அதை நோக்கி வாழவச்சு வழி நடத்துறாரு"

வசந்த் அமைதியாக இருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.