(Reading time: 17 - 33 minutes)

25. அமிழ்தினும் இனியவள் அவள் - ஜான்சி

Amizhthinum iniyaval aval

த்திரமா?, அதிர்ச்சியா? ஏமாற்றமா? தான் உணர்வது என்னவென்று தெரியாமல் திண்டாடினான் ரூபன். ஏற்கெனவே அதிகமாக யாருடனும் தன்னுடைய உணர்வுகளை பகிர்ந்து பழக்கமில்லாத காரணத்தால் உள்ளூக்குள்ளேயே தன்னுடைய எண்ணங்களை வைத்து வெந்துக் கொண்டிருந்தான்.

தான் அனிக்காவிற்கு வேறு ஒருவரோடு திருமணம் என்பதை எவ்வாறு எடுத்துக் கொள்ளுவது என்று அவனுக்கு புரியவில்லை. அனிக்கா தன்னை நேசித்தது உண்மையல்லவா? அவளது கண்களில் கண்ட காதல் உண்மையேதானே? இல்லை நானாகவே கற்பனை செய்துக் கொண்டேனோ? என தனக்குள் மூழ்கியவன் தன் எண்ணங்களை ஜீவனிடமோ, அம்மாவிடமோ கூட பகிர்ந்துக் கொள்ள இயலாதவனாக இறுகிப் போனான். வழக்கமான தன்னுடைய வேலைகளில் கூட அவனால் முன்போல கவனம் செலுத்த முடியவில்லை.

பல நேரம் எதற்காக இதெல்லாம், இந்த உயரம் அவளுக்காகவே தான் முயன்று அடைந்ததல்லவா? அவளே தன் வாழ்வில் இல்லை என்றான பின்னே எதற்கு இதெல்லாம்? அத்தனையையும் உதறி தள்ளிவிட்டு சென்று விடலாமா? என்று எண்ணினான். தன்னைச் சார்ந்து இருப்பவர்கள், தன்னுடைய ஃபேக்டரியின் பணியாளர்களின் நலன் குறித்த எண்ணமும் மட்டுமே அவனை தற்போது கட்டிப் போட்டிருந்தது.

ஜீவனுக்கு தன்னுடைய அண்ணனின் மன நிலைக் கேற்ப அவனை தொந்தரவு செய்யாமல், அதே நேரம் அவனுக்கும் சேர்த்து இன்னும் அதிகமாக வேலையில் ஈடுபட வேண்டி இருந்தது. இத்துணை குழப்பத்தில் அவர்களுக்கும் ஒருவர் ஒருவரிடம் மனம் விட்டுப் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை.

 தீபன் ரூபனிடம் ஆறுதலாக பேச எண்ணினான். ஆனால், ரூபனோ யாரிடமும் பேசுகின்ற நிலைமையில் இல்லை. வேலையில் தன்னை மூழ்கடித்துக் கொளவதும், தன்னிஷ்டம் போல வருவதும், போவதுமாக இருந்தான். அவன் என்ன யோசிக்கிறான்? என்னச் செய்கிறான்? என யாருக்குமே புரியவேயில்லை.

மாடியிலிருந்தது அந்த விஸ்தாரமான அறை, அவர்களின் வீட்டு ராஜ குமாரிக்கெனவே பிங்க், ஸ்கை ப்ளூவென அவளுக்கு பிடித்த வண்ணங்களால் அலங்கரித்து பார்த்து பார்த்துக் கட்டிய அறைதான் அது. ஏசி தேவையே இல்லாமல் இயற்கை காற்று ராஜ்ஜியம் செலுத்தும் அறையாகும். யாரும் அனுமதி இல்லாமல் ஒரு போதும் அங்கு நுழைந்தது இல்லை என்பதால் எந்நேரமும் அவ்வறையின் கதவு திறந்தே இருக்கும்.

காற்றின் வேகத்தில், அழுத்தத்தில் எப்போதும் மூடியே காணப்படும் அந்த கதவை அழுத்தமாக யாராவது திறந்தால் அதே வேகத்தில் மறுபடி நிலையில் சென்று அடித்து, பெரும் சப்தம் எழுப்பி அடைத்துக் கொள்ளுவது வழக்கமான ஒன்றுதான். அந்த வழக்கமான தடாலெனும் சப்தம், சற்றும் உற்சாகமில்லாமல் சோம்பி இலக்கற்று வெறித்துக் கொண்டிருந்த அனிக்காவிற்கு சட்டென்று தன் போன நிலையினின்று கலைத்து எழுப்பிட அவளுக்குள்ளே நடு நடுக்கத்தையும், பயத்தை உண்டாக்கிட அவள் தட தடவென தன் இதயம் அதிர எழுந்து அமர்ந்தாள்.

"என்னாச்சு பாப்பா? நான் தான் க்ளீன் பண்ண வந்தேன்" என மிரண்டவளாக இருந்த எஜமானர் மகளிடம் பரிவாய் விசாரித்தார் அறையை சுத்தம் செய்ய வந்திருந்த அமுதா.

“இல்லக்கா ஒன்னுமில்ல, சும்மாதான் எழுந்தேன்”

 வறண்ட புன்னகையை அவருக்கு பதிலாக கொடுத்து மறுபடி படுக்கையில் சரிந்தாள் அவள், தன்னுடைய அறையையே சுற்றி வெறித்த அவள் பார்வை ஓரிடத்தில் நின்றது. அங்கு கிறிஸ்மஸ் அன்று தான் விக்ரமுடன் ஷாப்பிங்க் செய்த அனைத்தும் அவளது அறையின் ஓரத்தில் குவித்து வைத்திருக்கப் பட்டிருந்தது. அதனை பார்க்கவும் பிடிக்காமல் முகத்தை திருப்பியவளுக்கு கண்முன் காட்சிகள் விரிந்தன.

அனிக்கா பாதுகாப்புக் குறித்து அவள் மேலேயே தன்னுடைய கவனத்தைக் குவித்து வைத்திருந்த ரூபன் , விக்ரம் சில நாட்களாக தாமஸ் அலுவலகத்தில் அவரைச் சந்தித்து உறவை வளர்த்ததையும், அதைத் தொடர்ந்தே கிறிஸ்மஸ் அன்று அனிக்காவை அவன் ஷாப்பிங்க் என்னும் பெயரைச் சொல்லி அழைத்துச் சென்றதையும், ரூபனிடம் தன்னுடைய பராக்கிரமத்தைக் காட்ட செல்ஃஃபி எடுத்து அனுப்பி வைத்ததையும், கூடவே சாயங்காலம் அவளை ரூபனின் வீட்டில் டிராப் செய்தவன் அதே நேரம் அவளின் வீட்டிற்குச் சென்று அனிக்காவை திருமணம் செய்ய கேட்டதை அறிந்திருக்கவில்லை.

 மற்ற நேரமாக இருந்தால் தாமஸ் அனிக்காவிற்கு எந்த வரன் வந்தாலும் ஆற அமர விசாரித்து செய்கின்ற விதமாக நிதானித்திருப்பாராக இருக்கும். ஆனால், ராஜ் தன் மகன் ரூபனுக்காக பெண் கேட்டிருந்த சமயம் என்பதாலோ என்னமோ தன்னுடைய மகனைக் கேட்காமல் , மனைவியிடம் ஆலோசிக்காமல் தன்னுடைய மகளுக்கு வரனாக விக்ரமை அவசரமாக தேர்ந்தெடுத்து விட்டார்.

 இதனை அறிந்த கிறிஸ் முதலில் தந்தையை நிதானிக்கச் சொல்லிப் பார்த்தான். பின்னர் தந்தையின் பிடிவாதத்தை பார்த்தவன் விக்ரம் அவன் தந்தையின் எதிர்பார்ப்பின் படி செல்வத்தில் சிறந்தவனாகவும், அவனுடைய எதிர்பார்ப்பின் படி அழகில், ஆண்மை நிறைத் தோற்றத்தில் தங்கைக்கு ஏற்றவனாகவும் இருப்பதை உணர்ந்தான். குறைச் சொல்ல வாய்ப்பொன்றுமில்லையே என்றெண்ணி தந்தையின் சொல்லுக்கு அவனும் இசைந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.