(Reading time: 6 - 12 minutes)

44. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்

Maruva kathal konden

ந்தி….

“நந்திக்கு இப்படி ஒரு மாறுவேடத்தை அணிவித்து என் இடத்திற்கே அனுப்பும் அளவிற்கு அந்த சிவன் துணிவு பெற்றுவிட்டானா?.... என் எச்சரிக்கையை உதாசீனம் செய்யும் அளவிற்கு வந்துவிட்டானா அவன்?...”

பெரும் கோபம் கொண்டு பிரஜாபதி மகரிஷி பிருகுவிடத்தில் கூற, அப்போது அங்கே வந்த பிரசுதி, நந்தி மலர்களை வாங்கி செல்வதையும், சதி புன்னகை முகத்துடன் நின்றிருப்பதையும் கண்டு,

“இதில் சதியின் தவறு ஏதுமில்லை சுவாமி……”

என உரைத்துக்கொண்டிருக்கையிலேயே, பிரஜாபதி கை உயர்த்தி தடுக்க, அந்நேரம் மேலே பார்த்த சதியின் பார்வையில் பிரஜாபதியின் கோபப்பார்வை தென்பட்டது…

சதி பார்த்துக்கொண்டிருக்கும்போதே, பிரஜாபதி கோபமாக உள்ளே செல்ல, அவரைத் தொடர்ந்து மகரிஷி பிருகுவும் உள்ளே செல்ல, பிரசுதியோ செய்வதறியாது தவித்து நின்றார்…

நடப்பதை இன்னதென்று அறியாத சதி, அவளுக்கு சற்று தொலைவில் நின்று கொண்டிருந்த மகரிஷி காசியப்பரிடம் சென்றாள்…

“மகரிஷி காசியப்பரே, வந்திருந்தவர் யார்?.. அவரைத் தங்களுக்கு தெரியும் என்று தான் தோன்றுகிறது… ஆனால், அவரைப் பார்த்து தந்தையின் முகம் இன்னலுக்கு ஆளானது ஏன்?....”

அவள் விடை தெரிந்து கொள்ளும் பொருட்டு கேட்க,

“நந்தி…” என்றார் காசியப்ப மகரிஷி…

“அவர் யார்?.....”

அவள் கேள்வி எழுப்ப,

“நந்தி என்பவன், அந்த சிவனின் வாகனம்…. ஆனால் இந்த நந்தியோ, மகாசிவருத்ரதேவின் முதன்மையான சீடன்… என்றுமே இணை பிரியாமல் உடன் இருப்பவன்….” என்றார் அவரும்…

“என்ன!!!!!!!!!!!!!!!”

அவள் அதிர்ச்சியுடன் வினவ, அவளது சகோதரிகளுக்கும் அதே நிலை ஏற்பட்டது…

“ஆம்… வந்தவன் நந்திதேவன் தான்… மாறுவேடம் புனைந்து அவன் இங்கே வந்ததற்கும் சில காரணங்கள் உள்ளது…”

அவர் கூறியதைக் கேட்டு அவள் திகைப்புடன் நிற்க,

தே நேரம்,

கயிலாய பர்வதத்தில்,

“அனைவரும் எங்கிருக்கிறீர்கள்?.. இங்கே வாருங்கள்… நான் என்ன கொண்டு வந்திருக்கிறேன் என பாருங்கள்…”

குதூகலத்துடன், நந்தி தன் தோள் மீது சுமந்து வந்திருந்த பையில் இருப்பதை காண்பிக்க அங்கும் இங்கும் ஓட, அவனின் அருகில் வந்தனர் இருவர்…

நாரதருடன் விவாதம் செய்த அந்த இருவரும், இன்று ந்ந்தியின் அருகே வந்து நிற்க, ந்ந்தி புன்னகை முகத்துடன், தான் கொண்டு வந்திருந்த மலர்களில் ஒன்றினை எடுத்து அவர்களிடம் கொடுக்க,

அதை விநோதமாக பார்த்தவன், அதை வேகமாக உண்ண முயல, அவனின் கரங்களிலிருந்து அதனை வேகமாக பறித்த ந்ந்தி, அவர்களை முறைத்துப்பார்த்தான்…

“என்ன காரியம் செய்கின்றீர்கள்?....”

அவன் கோபத்துடன் கேட்க, அவர்கள் இருவரும் பின் வாங்கினர்…

பின், அந்த மலரினை தன் பையினுள் வைத்தவன்,

“தெரியுமா?.. இன்று எனக்கு தேவியின் தரிசனம் கிட்டியது… அன்னையைக் கண்டேன் நான்… உடனேயே இதை மகாதேவரிட்த்தில் நான் தெரிவிக்க வேண்டும்…. தேவியின் தரிசனத்தை நான் இன்று கண்டேன்….”

கூக்குரலிட்டுக்கொண்டே மகாதேவரை தேடிச்சென்றான் நந்தி…

ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருந்த மகாதேவனின் அருகில் சென்றவன்,

“நான் வந்துவிட்டேன் பிரபு…. இன்று எனக்கு அன்னையின் தரிசனம் கிட்டியது… ஆம் தேவி எனக்கு தரிசனம் அளித்தார்கள்… காணுங்கள் அவர்களிடத்திலிருந்து நான் பெற்று வந்ததை….”

அவன் மன நிறைவோடு மகாதேவனிடத்தில் ஒரு மலரை எடுத்து நீட்டி காண்பிக்க, மெல்ல விழி திறந்தான் நந்தியைப் பார்த்தான் மகாதேவன்…

நந்தியிடத்தில் குடிகொண்டிருந்த பரவசத்தைக் கண்டவன்,

“அங்கு தற்போது செல்ல வேண்டிய அவசியம் என்ன?...” என வினவ,

சற்றே முகம் வாடினாலும், அடுத்த நொடியே, “நாரத மகரிஷி அன்று தேவியைப் பற்றி கூறிய பின்னர் அவர்களைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் எழுந்தது… அதனாலேயே அங்கு சென்றேன்… அதுமட்டுமல்ல, சதி தேவி, ஒரு இலட்சம் தாமரை மலர்களில் தங்களது நாமத்தினை இயற்றியுள்ளார்… அதைக் கேள்வியுற்ற பின்னும் என்னால் இங்கே இருக்க இயலவில்லை… அங்கே சென்று அவர்களிட்த்திலிருந்து அம்மலர்களை நான் பெற்று வந்துவிட்டேன்… இம்மலர்களில் இருக்கும் தங்களது நாமம், சதி தேவியின் பாசத்தின் வெளிப்பாடு…. காணுங்கள்…”

நந்தி பெரும் மகிழ்வோடு அதனை மகாதேவனின் முன் நீட்ட,

“இம்மலர்கள் அனைத்தையும் இங்கே இருந்து எடுத்துச் செல் நந்தி…. கால நேரமின்றி இங்கே என்னுடன் உடன் இருந்தும் நீ இந்த மாயைகளிலிருந்து விடுபடவில்லை…” என்றான் மகாதேவன்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.