(Reading time: 13 - 25 minutes)

டைனிங் டேபிளில் அமர்ந்து இரவு உணவை சுவைத்துக்கொண்டிருந்த ஹரிணி திடுக்கிட்டு பார்த்தாள். அலையடித்தது அவளுக்குள்ளே.  வேண்டாமென சொல்லிவிடாலாம் என்பதே அவளது முதல் எண்ணமாக இருக்க, பேச வாயெடுத்தவளை உள்ளுக்குள் ஏதோ ஒன்று தடுத்தது.

‘எப்படியும் நான் ஒரு நாள் ஒருவனை திருமணம் செய்துக்கொள்ளத்தான் போகிறேன். அந்த ஒருவன் ஏன் விவேக்காக இருக்க கூடாது??? படிப்பிலும் அந்தஸ்திலும் எனக்கு இணையானவன்தானே அவன். அவன் குணம், அவனது பலம், பலவீனம் என எல்லாம் எனக்கு தெரியும். அவன் எனக்கு கணவன் என்று ஆகிப்போனால் நான் நினைத்தபடி அவனை மாற்றி விட முடியாதா  என்ன???

சில மணி நேர யோசனைக்கு பிறகு அப்பாவிடம் சொன்னாள் ஹரிணி ‘சரிப்பா... நீங்க விவேக் வீட்டிலே பேசுங்க...’

இரண்டு வீட்டிலும் தொலைப்பேசி வழி பேச்சு வார்த்தைகள் நடந்தன. ஹரிணியின் குணம் நன்றாகவே தெரியும் விவேக்குக்கு. இவளுடன் என்னால் நிம்மதியாக வாழ்க்கை நடத்த முடியுமா என்ற கேள்வி அவனை உறுத்திக்கொண்டேதான்  இருந்தது.

அந்த நிலையிலும் அவனுக்குள் இருந்த உறுதி மட்டும் மாறவில்லை. ‘அப்பா சொல்ற பொண்ணைதான் நான் கல்யாணம் பண்ணிப்பேன். அப்பா யாரை சொன்னாலும் சரி...’

ஹரிணியின் புகைப்படம் அவர்கள் வீட்டுக்கு வந்திருக்க அதை பார்த்தபடியே மகனை அருகில் அமர்த்திக்கொண்டார் ஸ்ரீநிவாசன்.

‘பொண்ணுக்கு ஒகேயாம். சொல்லுடா கண்ணா நீ என்ன சொல்றே..’ அவன் தோள் அணைத்தபடியே கேட்டார் அப்பா.

அவனது முகத்தில் சலனத்தின் நிழல் கூட இல்லை ‘நீங்க சொல்ற பொண்ணுதான்பா என் பொண்டாட்டி.. இதை முன்னாடியே நான் சொல்லி இருக்கேன். அதிலே எந்த மாற்றமும் இல்லை. நீங்க என்ன சொன்னாலும் சரி. யாரை சொன்னாலும் சரி எனக்கு ஒகே  ’ அழுத்தம் திருத்தமாக சொன்னான் விவேக்.

சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டே இருந்தார் மகனை. என்ன தோன்றியதோ அப்பாவுக்கு

‘உனக்கு இந்த பொண்ணு வேண்டாம்டா கண்ணா..’ சொல்லிவிட்டிருந்தார் அவர். என் மனம் படித்துவிட்டாரா என்ன? வியப்புடன் அப்பாவை பார்த்துக்கொண்டே இருந்தான் மகன்.

இவர்கள் திருமணதிற்கு மறுத்த விவரம் அவளை அடைவதற்குள் வந்தது அந்த நாள். அப்போதும் சென்னை விமான நிலையத்தில்தான் இருவரும் சந்தித்துக்கொண்டனர்.

‘ஹாய்.. விவேக்...’ என்றபடி இவன் அருகில் வந்தாள் ஹரிணி. அவளுடன் இன்னும் அவர்களுடன் பணியாற்றும் மூன்று நான்கு நண்பர்கள். எல்லோரையும் பார்த்து நட்பாய் புன்னகைத்தான் விவேக்.

அவசரம். ஹரிணிக்கு!!! எப்போதுமே அவசரம்!!!

‘எப்படியும் என்னை  மறுக்க மாட்டான், விவேக். இவன் என்ன எந்த ஒரு ஆண் மகனுக்கும் என்னை மறுத்துவிடும் எண்ணம் வருமா என்ன???’ என்ற கண்மூடித்தனமான ஒரு நம்பிக்கை அவளுக்கு.

‘கைஸ்... உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா??? எங்க ரெண்டு பேருக்கும் சீக்கிரமே கல்யாணம்...’ வெகு இயல்பாக நண்பர்களை பார்த்து ஹரிணி சொல்ல,

‘தட்’ஸ் கிரேட்... மேட் ஃபார் ஈச் அதர்... ‘என்றபடியே எல்லாரும் இருவரையும் வாழ்த்த துவங்க கொஞ்சம் திகைத்து போனான் விவேக்.

‘எப்போ கல்யாணம் விவேக்...’ இது இன்னொரு நண்பன்

‘ஐ யாம் நாட் ஷூர்... நான் இன்னும் கல்யாணத்தை பத்தியே டிசைட் பண்ணலை...’ என்றான் விவேக் மெதுவாக. திடுக்கிட்டு நிமிர்ந்தாள் ஹரிணி.

‘இதிலே டிசைட் பண்ண என்ன இருக்கு.. ஹரிணி இஸ் ஸோ ஸ்வீட் விவேக்..’ இது ஹரிணியின் தோழி.

‘அப்படியா??? எனக்கு தெரியலை.. ஐ.. ரியலி டோன்ட் நோ..’ தோள்களை குலுக்கியவன் சில நொடிகள் பேசிவிட்டு வெகு இயல்பாக அங்கிருந்து விலகி நழுவ அவனை கிட்டதட்ட துரத்திக்கொண்டு வந்தாள் ஹரிணி.

‘விவேக் நிஜமாவே உன் மனசிலே என்ன நினைச்சிட்டு இருக்கே..’

‘ஐ ஆம் ரியலி சாரி ஹரிணி .. எனக்கு எல்லாமே எங்கப்பாதான்.. அவருக்கு இந்த கல்யாணத்திலே விருப்பம் இல்லை. ஸோ எனக்கும் நோதான்...’

ரத்தம் முழுவதும் கொதிப்பேறிய ஒரு உணர்வு அவளுக்கு. ‘ஏன்? ஏன் உங்க அப்பாக்கு விருப்பம் இல்லை???

‘நான் காரணம் கேட்கலை ஹரிணி. எது எப்படி போனாலும் அவர் சொல்ற பொண்ணுதான் என் வைஃப்.. அதிலே எந்த மாற்றமும் இல்லை...உனக்கு பிடிச்சா மாதிரி வேறே நல்ல மாப்பிள்ளை கிடைப்பார் ஹரிணி.. ஆல் தி வெரி பெஸ்ட்’ நிதானமான அதே நேரத்தில் உறுதியான குரலில் சொல்லிவிட்டு நகர்ந்தான் விவேக்.

எதிர்பார்க்கவில்லை ஹரிணி. தோல்விகளை ஏற்றுக்கொண்டு பழக்கமே இல்லையே அவளுக்கு.  நிராகரிப்பு!!! அவனுடைய நிராகரிப்பு!!! அது இன்னும் அடி மனதில் பசுமையான காயமாய் தேங்கி நிற்கிறது. அவனை பார்க்கும் போதெல்லாம் பற்றி எரிகிறது அந்த காயம். அது அவன் மீதும் அவன் தந்தை மீதும் வெறுப்பாய் மாறி வளர்ந்து நிற்கிறது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.