(Reading time: 18 - 35 minutes)

தாம் கூறும் காதல் எப்படி இருக்கும்?... அதன் தோற்றம் மற்றும் தன்மை தான் யாது?..”

“காதலுக்கு மொழி, தோற்றம் எவரும் கண்டதில்லை… எனினும் யாரெல்லாம் காதலில் வீழ்கிறார்களோ அவர்கள் அதனை எளிதில் உணர்ந்திடுவார்கள்… அதற்கு விளக்கங்கள் எதுவும் தேவைப்படாது…”

“அந்தக்காதல் என் தந்தை, அன்னை, என் அனைத்து சகோதரிகளிடத்திலும் உண்டு… தங்களின் மீதும் எனக்கு அளவுகடந்த அன்பு உண்டு… நான் தங்கள் அனைவரையுமே காதலிக்கிறேன்…”

“நான் கூறுவது அந்தக்காதல் இல்லையென உனக்கும் தெரியும் சதி… நான் கூறுவது பருவ வயதில் ஏற்படும் கலாபக்காதல்…”

“தாம் கூறும் காதலுக்கும் நான் கூறும் காதலுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் கூட அறிந்திடவில்லை நான்… அதுவே உண்மையும் கூட…”

“வேறுபாடு உள்ளது சதி… நீ குறிப்பிட்ட காதல், மனதிலிருந்து உண்டாகி, உணர்ச்சிகளினால் வெளிப்படுவது… ஆனால் நான் குறிப்பிடும் காதல் மனதிலிருந்து உண்டாகி, இதயத்தினை வசப்படுத்துவது… அதுதான் அகிலத்தில் ஜீவன்கள் தோன்றுவதற்கு காரணம்… இப்போழுதாவது நான் கூறும் காதலின் அர்த்தம் உனக்கு விளங்கியதா சதி?... நான் சொல்வதை நீ ஏற்றாலும், ஏற்காவிட்டாலும், நீயே மனமார அதன் அர்த்தத்தினை உணர்ந்து கொள்வாய்… உள்ளத்தால் நீ அதனை உணரும் காலம் தொலைவில் இல்லை… அன்று உன் மனதில் அது பற்றிய கேள்விகளோ, பயங்களோ அறவே இருக்காது… நீ உன் உணர்வுகளோடு போராடலாம்… எனினும் உனக்கு இறுதியில் கிட்டுவது தோல்வியே… அதுவும் உனக்கு துன்பம் தராது, சுகமான இன்பத்தையே வழங்கிடும்… இப்பொழுது உன் விழிகளை மூடிக்கொள்… உன் கண்களுக்கு யார் தெரிகின்றார் என கூறு…”

மாதங்கி சொல்லிக்கொண்டே அவளது விழிகளை மூடிக்கொள்ள சொல்ல, அவளும் தன் புறக்கண்ணை மூட, அகக்கண்ணில் வந்து நின்றான் மகாசிவருத்ரதேவ்….

சட்டென அதிர்ந்து விழிகளை திறந்தவள், “எனது விழிகளுக்கு யாரும் தென்படவில்லை…” என்றுரைத்தாள் பதட்டத்துடன்…

அதன் பின்பு, கியாத்தி, அதிதி என ஒவ்வொருவராய் கைகளில் வண்ணங்கள் தீட்டிக்கொள்ள முயல, அங்கே வந்தாள் மாதங்கி…

“தங்களின் கைவண்ணம் அற்புதம் வாய்ந்தது…… தாங்களே எங்களின் கைகளில் வண்ணம் தீட்டுங்கள்…”

அதிதி மகிழ்ந்து கூற, அவளது கரத்தினைப் பற்றி வண்ணம் தீட்டினாள் மாதங்கி அழகாய்…

“சரி ஒவ்வொருவராக வந்து கையை நீட்டுங்கள்… அதோடு அனைத்து பிறவிகளிலும் எவர் தங்களுக்கு மணவாளனாய் வர வேண்டுமென்று என்று எண்ணம் கொண்டுள்ளீர்களோ அவரது பெயரையே நான் தங்களின் கைகளில் தீட்டுகிறேன்… கியாத்தி முதலில் நீ உன் கரத்தினை நீட்டு… உன் கரத்தில், மகரிஷி பிருகுவின் பெயரை தீட்டி விடுகிறேன்…”

மாதங்கி கூறிக்கொண்டே, கியாத்தியின் கரத்தினை பிடித்து அதில் வண்ணம் தீட்டிக்கொண்டிருந்த பொழுது,

“எனில் என் கரத்திலும் சந்திரதேவரின் பெயரினைத் தீட்டுவீர்களா?..”

ரேவதி தயக்கத்துடன் கேட்க, “ஆஹா… என்ன இது திடீர் மாற்றம்?... கவலையுடன் காணப்பட்ட உனது முகத்தில் மகிழ்ச்சி எப்படி?...” என்றாள் மாதங்கியும்…

அவளின் கூற்றினைக்கேட்டு, ரேவதி வெட்கப்பட, “அழகான நாணம், அளவான ஒய்யாரம்… இந்நிலையில் சந்திரதேவன் உன்னைக்கண்டால், இப்பொழுதே உனது அழகிய வதனத்தில் மயங்கி விடுவார்…. உன் விருப்பப்படியே, முதலில் நான் கரத்தில் சந்திரதேவனின் பெயரை பதித்து விடுகிறேன்…”

மாதங்கி ரேவதியின் கரத்தினைப் பிடித்து பெயரை எழுத முனைந்த வேளை, வேறொருத்தியிடம் வண்ணம் தீட்டிக்கொண்டிருந்த ரோகிணி எழுந்து மாதங்கியின் அருகே வந்து அமர்ந்து, “மாதங்கி, நீ ஒருவரின் கரத்தினில் பெயரை தீட்டினால், அவர்கள் இருவருக்குமிடையே உள்ள உறவானது அன்புடனே நீடிக்கும் என்பார்கள்… அது நிஜமா?,, “ என்று வினவினாள்…

“ஆம்… அது நிஜமே….” என மாதங்கி கூறியதும், “அப்படியானால், எனது இரு கரத்திலும் என்னவர் பெயரினை எழுதுங்களேன்….” என உற்சாகமாக கூற,

“ஒரே பெயரை இருவரின் கரத்தினில் எப்படி இயற்றுவது?... அது சாத்தியமும் அன்று ரோகிணி… வேண்டுமானால் ஒன்று செய்கிறேன்… உனது கரத்தில் சந்திரனின் பெயரையும், ரேவதியின் கரத்தினில் சந்திரதேவனின் இன்னொரு பெயரான சோமன் எனவும் தீட்டுகிறேன்…” என கூற, ரோகிணியின் வார்த்தைகளால் சற்றே வாடிப்போன ரேவதியின் முகம் பூவாய் மலர்ந்தது அக்கணமே…

அந்நேரம் சதி அங்கே வர, “சதி… உனது கரத்தினையும் தா… அதிலும் ஒரு பெயரை நான் எழுதுகிறேன்… நீ எத்தனை ஆபரணம் அணிந்து கொண்டாலும், இம்மாதங்கி வரையும் பெயரின் அலங்காரமே தனி தான்…” என்றவள் அவளது கரத்தினை பிடித்து முகர்ந்து,

“ஹ்ம்ம்… இதிலிருந்து எழும் நறுமணம் மிகவும் அற்புதமானது… இந்த நறுமணம் கொண்டு எழுதும் நபரின் மனமானது காதலால் நிறைந்திருக்கும்… அது உண்மைக்காதலெனில், தீட்டும் வண்ணம் அவ்விதமே அழகு கூட்டி மெருகேற்றிடும் என்பார்கள்…” என சதியினைப்பார்த்துக்கொண்டே கூற,

“மாதங்கி, சதிக்கு மட்டும் என்ன தனி ஆலோசனை வழங்குகிறாய்?...”

கியாத்தி கேலியுடன் கேட்க,

“இல்லை… நான் சதியிடம், யார் பெயரினை அவளது கரத்தினில் எழுத வேண்டும் என கேட்டேன்… ஆனால் இவள் தான் எதுவும் கூறவில்லை…” என்றாள் மாதங்கி சமாளித்து…

பின்னர் சதியிடம், “நீ கூறாமல் போனாலும், நான் அதனை கண்டுபிடித்தே தீருவேன்…” என்றாள் மாதங்கியும்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.