(Reading time: 18 - 35 minutes)

47. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்

Maruva kathal konden

பிரஜாபதியின் அரண்மனையில் இசைக்கலைஞர்கள் நடன ஒத்திகைப் பார்த்துக்கொண்டிருக்கையில், பணியாட்கள் ஒரு பல்லக்கினை சுமந்து வந்தனர்… அதிலிருந்து தோரணையுடன் இறங்கினாள் மாதங்கி…

அவளினைக் கண்டு இன்முகத்துடன் வந்த சதி, அவளிடம் நலம் விசாரிக்க, அவளை பேச விடாது தடுத்தாள் மாதங்கி…

சதியின் கண்கள் சொல்லும் சேதியினை, அவளின் நாடித்துடிப்பு, மற்றும் இதயத்துடிப்பினை வைத்து தெரிந்து கொண்டாள் மாதங்கி…

“உன் கண்கள், உன் சுவாசம், இதயத்துடிப்பு அனைத்தும் எனக்கு ஒரு செய்தியை உணர்த்துகிறது… ஆம் சதி… உனக்கு காதல் ஜூரம் ஏற்பட்டுள்ளது…”

மாதங்கி புன்னகையுடனே கூற, அதைக் கேட்ட சதியின் மனம் சற்றே பிரள, உடனேயே சமாளித்துக்கொண்டு,

“தாங்கள் இங்கே வந்த்தில் மிகுந்த மன மகிழ்ச்சி….” என்றவள், அவளின் பாதம் தொட்டு வண்ங்க முயல, மாதங்கி தடுத்தாள்….

“என்ன காரியம் செய்கிறாய் சதி?...”

“தாம் எனது குரு… ஆம்… எனக்கு நடனத்தையும், சங்கீதத்தினையும் கற்றுக்கொடுத்தவர் தாங்கள்… எனில் குருவினை வணங்குவதில் என்ன தவறு?...”

“விவாகம் என்னும் பந்தத்தில் ஏனோ எனக்கு உடன்பாடு ஏற்படவில்லை… அதில் என்னை பிணைத்துக்கொள்ளவும் நான் இதுவரை நினைத்ததில்லை… ஆனால் ஏனோ உன்னைப் பார்க்கும் தருவாயில் எல்லாம் நானும் மற்றவர்களைப் போல் அப்பந்தத்தினை ஏற்றிருந்தால், உன்னைப் போன்ற ஒரு மகளை ஈன்றிருப்பேன் என்றே நினைக்கிறேன்… அப்படி அது நிறைவேறுமாயின், அந்த மண வாழ்வினை நான் ஏற்றுக்கொள்ளவும் நான் சித்தாமாயிருக்கிறேன்…”

“இப்பொழுது மட்டும் என்ன?... என்னை தங்கள் மகள் என்றே நினைத்துக்கொள்ளுங்கள்…”

“நினைப்பதென்ன?... நீ எனது மகள் தான்…”

மாதங்கி சதியின் முகம் பற்றிக்கூற, புன்னகை மாறா முகத்துடன் அவளை உள்ளே அழைத்துச் செல்ல விழைந்தாள் சதி…

அப்பொழுது சதியின் தோள் தொட்ட மாதங்கி, “நான் உன்னிடம் வந்தவுடன் கூறியது வேடிக்கைக்காகவே… நீ அதனால் மனம் வருந்த வேண்டாம்…” என கூற, சதியின் மனம் பதைபதைக்க துவங்கியது மெல்ல…

னிமையில் ஆழ்ந்திருந்த ரேவதியின் அருகில் சென்று அமர்ந்தார் அவளின் அன்னை பிரசுதி…

“மகளே விழா வர்ணங்களால் நிறைந்துள்ள நேரத்தில், உன் முகத்தில் மட்டும் ஏன் இத்தனை வாட்டம்?...”

“என்ன செய்வது அன்னையே…. என் வாழ்வில் வர்ணங்களே இல்லையே… திருமணம் முடிந்த நாள் முதல், சந்திரதேவரின் ஒட்டு மொத்த அன்பும் ரோகிணி ஒருத்தியினையே சேர்ந்தது…. அவருக்கு என்னைப் பிடிக்கவில்லை… ரோகிணி தான் அவருக்கு பிரியமானவள்…”

ரேவதி வருத்த்த்துடன் கூற, “ஆண்களின் சுபாவம் அது… அதை சரி செய்ய வேண்டுமானால் அதற்கு ஒரே வழி, நமது அன்பினால் அவர்களை ஈர்ப்பதே…. சற்றே ஒய்யாரம், சிறிது கோபம், கொஞ்சம் பிணக்கம், அதுவும் பலனளிக்கவில்லையெனில், நாடகம், அதுவும் முடியாவிடில், வார்த்தை பிரயோகம்… இவை அனைத்தும் ஒருசேர்கையில் அந்த வழியும் தானாக பிறந்திடும்... அதனால் கவலை கொள்ளாமல், நான் சொன்னதை செய்… சரிதானா?..”

மாதங்கி தெளிவாக எடுத்துக்கூற, ரேவதியின் முகத்தில் கவலை மறைந்தது சற்றே…

“நீ வந்தவுடன் ஆரம்பித்துவிட்டாயா?..” என்ற பிரசுதி, அவளை வரவேற்று, நறுமண திரவியத்தை கொடுத்தார்...

“இது உனக்குத்தான்… இதனைக்கொண்டு விழாவினை மேலும் சிறப்பாக்கு….”

“ஆஹா… நல்ல மணம்… விழாவின் ஒவ்வொரு முறையும் ஒரே வண்ணங்களைப் பார்த்து உங்களின் விழிகள் சலிப்படையவில்லையா?... இம்முறை அந்த வண்ணத்தினை சற்றே மாற்றினால் தான் என்ன?... என்ன சதி சரிதானே நான் சொல்வது?...”

மாதங்கி சதியிடம் வினவ, அவளும் சரி என்றாள்…

“எனில் உடனேயே வண்ணத்தினை மாற்றிடலாம்…. இம்முறை காதல் வண்ணத்தினையும் சேர்த்திடலாம்…”

“காதல் வண்ணமா?... அது எவ்வாறு இருக்கும்?...”

பிரசுதி ஆர்வமாக கேட்க, “சற்றே பொறுமை காத்திருந்தால், உங்களுக்கே அது தெரிந்திடும்…” என்றாள் மாதங்கி…

“சதி நீ எனக்கு இதில் உதவி செய்வாய் அல்லவா?... நான் உடனேயே வண்ணப்பொறுப்பாளர் இல்லம் சென்று, காதல் வண்ணத்தினை கலக்கும் முறைகளை கூறி அதனை பெற்று வரலாம்….”

“ஆகட்டும் செல்லலாம்…” என்ற சதியின் முகத்தினையே புன்னகையுடன் பார்த்திருந்தாள் மாதங்கி…

கியாத்தி, மகாதேவர் குறித்து சொன்ன வார்த்தைகளே திரும்ப திரும்ப சதியின் காதுகளில் ஒலிக்க, சதி அதனோடு போராடிக்கொண்டிருக்கையில், அவளைத் தேடி அவளது அறைக்கு வந்தாள் மாதங்கி…

“சதி நீ அவர் பற்றிய சிந்தனைகளில் தான் இருக்கின்றாயா?...”

“தாம் யாரைக்குறிப்பிடுகின்றீர்கள்?... வேடிக்கைப் பேச்சு இன்னமும் வேண்டாம்…”

“அவர் யார்?... அவரினைப் பற்றிய விவரங்களை எனக்கு தெரிவிக்க மாட்டாயா?..?...”

“யார்?............”

“யார் உருவத்தினை உன் கண்கள் காணுகின்றதோ, யார் குரல் உன் செவிகளில் கேட்கின்றதோ, யார் பற்றி பேச உனக்கு நா தடுமாறுகின்றதோ, யார் சிந்தனை உன் இதயத்தினை தடம்புரள செய்கின்றதோ, யார் உன் உள்ளத்தில் இருக்கின்றாரோ அவர் தான்… நான் வந்ததும் உன்னிடத்தில் கூறியது வேடிக்கைப் பேச்சு அல்ல… அது நிஜம்… ஆம்… நீ காதல் வயப்பட்டிருக்கிறாய் சதி…”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.