(Reading time: 13 - 26 minutes)

ன் அறையில் கண்ணில் கண்ணீருடன் தன் உடைமைகளை பெட்டியில் அடுக்கி வைத்துக்கொண்டிருந்த அம்மாவைப் பார்த்த ப்ரியாவிற்கு அருவியென பெருக்கெடுத்தது கண்ணீர்.  “அம்மா…” என மெல்லிய குரலில் அழைத்தாள் அவள்.  இன்று இவர்களை விட்டு வேறு இடத்திற்கு செல்ல வேண்டுமே! அந்தக் கவலை அவள் மனதில் வந்து போனது.  அதை விட அதிகமாய், தான் அவர்கள் முன் ப்ரனிஷைக் காதலிப்பதாய்க் கூறியது பெரும் தவறாய்.

அவள் குரல் கேட்டு திரும்பினர் ப்ரியாவின் அம்மாவும், அந்த அறையில் அவருக்கு உதவிக்கொண்டிருந்த வர்ஷினியும் வானதியும்.  சிறியவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு அமைதியாக அவ்விடத்தை விட்டு அகன்றனர்.

அவர்கள் சென்றதும் மெதுவாக அன்னையின் அருகில் வந்தவள், அவர் தோள்களில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள், கேவலாக ஒரு ‘சாரி’யுடன்.  ப்ரியாவின் இந்த செய்கையைக் கண்ட அவள் தாய், ப்ரனிஷைக் காதலிப்பதைக் கூறாததால் வந்த வருத்தம் இது என்று புரிந்து கொண்டார்.  அத்தோடு, தங்களைப் பிரிய வேண்டும் என்னும் எண்ணமும் அவளது நினைவை ஆக்கிரமித்துள்ளது எனக் கண்டுகொண்டார்.

அவளை தன்னிடமிருந்து மெல்ல விலக்கி, கட்டிலில் அமர வைத்தவர், தானும் அருகே அமர்ந்து, ப்ரியாவின் கையை எடுத்து தன் கைக்குள் அடக்கிக்கொண்டு, அன்னையாக தன் மகளுக்குத் தேவையான அறிவுரைகளைக் கூறிக்கொண்டிருந்தார்.  அவர் பேசுவதையே விழி அகலாமல் அழுகையோடு பார்த்துக்கொண்டிருந்தாள் ப்ரியா.

ப்ரியாவின் அருகே வந்து மீண்டும் அமர்ந்த அவர், ப்ரியாவின் தோளைத் தொட்டு, “நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ ப்ரியா…  இது நீயா தேர்ந்தெடுத்த வாழ்க்கை.  அதனால இனி நீதான் எல்லாமே பாத்துக்கணும்” என அந்த ‘எல்லாமே’வில் அழுத்தம் கொடுத்தார் அவள் அன்னை.

ப்ரியா தெளிவாகக் குழம்பியதைக் கண்டவர், “ப்ரனிஷின் வீட்டில் எப்படி ஏத்துப்பாங்களோ தெரியலை.  அவங்களுக்கு சிறு மனஸ்தாபம் இருக்கலாம்.  நீ தான் அனுசரிச்சு போகனும்.  அவங்க கோபம் மறைந்ததும் உன்னை ஏத்துப்பாங்க… கண்டிப்பா… பொண்ணை நல்லபடியா வளர்த்திருக்கோம்னு அவங்க சொல்றபடி இருக்கனும்… என்ன…” எனத் தன் கண்களைத் துடைத்து, அவள் கண்களையும் துடைத்துவிட்டுக் கேட்டார் அவர்.  “ம்ம்ம்” என்று தலை ஆட்டிக்கொண்டே அவர் தோளில் சாய்ந்து அழுதாள் பெண்.

“நீ ரெடியாகு… அம்மா இதோ வந்துடறேன்” என்று வெளியே சென்றார் அவர்.

தாய் தைரியம் கூறியவரை சிறியதாகத் தெரிந்தது, அவர் விலகிப் போனதும் குழந்தையை தனிமையில் மிரட்டும் பேய்க்கதைகள் போல மீண்டும் பெருக்கெடுத்தன அந்த ஞாபகங்கள்; அவற்றில் அவள் செய்தது மறக்க முடியாத தவறாய்.  தன் தாய் தந்தைக்கு தேடித் தந்த அவமானம் தற்போதுதான் அவளுக்கு தன் தீவிரத்தைக் காட்டத் துவங்கியது. அதனைப் பொறுக்க முடியாமல் கண்களில் நீர் வழிய, “என்னை மன்னிச்சிடுங்கப்பா.. சாரி மா… எனக்கு வேறு வலி தெரியலை…” என தலையணையில் முகத்தைப் புதைத்து கதறினாள் பெண்.  பெரும்பாலான பெண்களின் கண்ணீரை அறிவது தலையணை மட்டுமே.  சந்தோசத்தைப் பலரிடம் வெளிப்படுத்துபவள், சோகங்களை மட்டும் அதனிடம் மட்டுமே சொல்வாள்.  தன்னைப் பற்றி எந்த ஒரு விமர்சனமும் கூறாமல் தோள் கொடுப்பதனாலோ??

அது தற்போது ப்ரியாவிற்குத் தன் சேவையை ஆற்றியது.  அழுதுகொண்டிருந்தவள் எப்போது நித்திரைக்குள் சென்றாளோ…. அழுகை விசும்பல்களாக குறைந்து ஆழ்ந்த ஒரு உறக்கத்திற்கு அழைத்துச் சென்றது.

வயிற்றுக்குள் எஞ்சின் ஓட, தூக்கம் கலைந்து எழுந்தாள் ப்ரியா.  நேரத்தைக் கண்டவள், மணி தற்போதே பன்னிரெண்டாகியிருக்க, ஒரு மணிக்கு கிளம்பவேண்டும் என்று ப்ரனிஷ் கூறியது நினைவில் வந்தது.  அவனைப் பற்றி எண்ணும்போதே, தூக்கத்திலும் சிறியதாக புன்னகை பூத்தது அவள் முகத்தில்.  கூடவே அவனை முதன் முதலில் கண்ட தருணமும் அவள் கண் முன் கனவாய் விரிந்தது.

‘லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் கேள்விப்பட்டிருக்கேன்.  ஆனால், ஃப்ரெண்டுக்காக அவன் லவ்வரோட ப்ரெண்டிடம் proposal at first sight செய்தது நீமட்டுமா தான்டா இருக்க முடியும்” என அவனை செல்லமாக கொஞ்சினாள் ப்ரியா; அவள் முகத்தில் இருந்த புன்னகை மேலும் விரிந்தது.  அன்றே அவள் மனத்துள் ப்ரனிஷ் நுழைந்தானோ?? அவளே அறியா விடை அது.

இரண்டாவது முறையாக யாதவ் வர்ஷினியை கடற்கரையில் சந்தித்து பேசியபோது அதனைக் கண்டு தொல்லை செய்யாமல் தொலைவிலேயே நின்ற ப்ரியாவைப் பார்த்த ப்ரனிஷ், தான் நின்றிருந்த இடத்திலிருந்தே ஒரு புன்னகையுடன் கூடிய கையசைப்பைத் தந்தானே! அப்போதா?

அதன்பின், வர்ஷினியும் யாதவும் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள ஆரம்பிக்க, அவர்கள் பார்ப்பதற்கு ஏதுவாக ப்ரியாவும் ப்ரனிஷும் உதவ வேண்டியதாயிற்று.  அவ்வாறு பழகத் தொடங்கிய காலங்களில் காதலர்கள் இருவருக்கும் தனிமை கொடுத்து இவ்விருவரும் மணிக்கணக்கில் கதைப்பரே! அப்போதா?

அவனுடனான பேச்சுகளுக்கு காரணமே இல்லாமல் மனம் படபடக்குமே! அப்போதா?

எத்தனை முறை யோசித்தும் விடை தெரியவில்லை அவளுக்கு.  ப்ரனிஷோடான ஒவ்வொரு சந்திப்பும் அவளை சிறுகச் சிறுக அவன் வசம் இழுத்துச் சென்றன.  ஆனால், “காதலில் விழுந்தேன்” என ப்ரியா மகிழ்ச்சியாகக் கூவ நினைத்த, அவள் நேசம் உணர்ந்த தருணம் அவள் நினைவில் வந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.