(Reading time: 18 - 36 minutes)

13. என் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்

En sippikkul nee muthu

னதில் கொழுந்து விட்டு எரிந்த கோபத்தீயை தணிக்கும் வழி தெரியாமல் மொட்டை மாடியில் நடந்து கொண்டிருந்தான் கிரண்.

சிவந்த கண்களும், இறுகிய முகமும், துடிக்கும் இதழ்களும், நடையின் வேகமும் அவனின் கோபத்தை பார்ப்போருக்கு பறைசாற்றின.  

சஞ்சயின் காதல் பார்வையை நினைக்க நினைக்க மனம் எரிமலையாய் கொதிக்கிறது. 

‘அந்த கல்யாணத்திற்கு சரயூவை போக விடாமல் தடுத்திருக்கனும்’ 

“ஷிட் ஷிட்!” கையை மொட்டை மாடி தடுப்பு கம்பியின் மேல் குத்தினான்.

வேறு சமயமாகயிருந்தால் அந்த குத்திற்கு கை வலித்திருக்கும்.  அவனுக்கிருந்த கோபத்தில் அது உறைக்கவே இல்லை. 

போட்டியன்று ஆதர்ஷின் திருமணத்திற்கு சென்று இஸ்கான் திரும்புவது கடினமாக இருப்பினும் சரயூவின் விருப்பத்திற்காக அவளை அழைத்து சென்றதும்; அங்கு சஞ்சயின் பார்வையும், அவனுடனான சரயூவின் பேச்சும் கிரணை மிகவும் பாதித்திருந்தது.

திருமணத்திற்கு வந்திருந்த நண்பர்களை வரவேற்ற ஜெய், சரயூவிடம் மட்டும் வார்த்தைகளால் பேசாது கண்களால் பேசினான்.  அவன் கண்களின் காதல் மொழி அவளுக்கு புரிந்ததோ? இல்லையோ? கிரணுக்கு நன்றாக புரிந்தது.

மன்னிப்பை யாசித்தன சரயூவின் விழிகள்.  தன்னை மன்னித்து, இப்போதே பேசிடமாட்டானா என்ற எதிர்ப்பார்ப்பையும் தாங்கி நின்றன அவளின் வேல் விழிகள்.

இத்தனை நாட்கள் அவளைப் பார்க்காது ஏங்கியிருந்தவன், கிடைத்த இந்த சந்தர்பத்தை முழுதாக பயன்படுத்தினான்.  எல்லையில்லா காதலை கண்களில் தேக்கியிருந்தவன், அந்த நொடியே தன் ஆழமான நேசத்தை தெரிவித்துவிடும் வேகத்தோடு கூர்ந்துப் பார்த்திருந்தான். 

மன்னிப்பை யாசித்த அவளின் பார்வையினால், இத்தனை நேரம் இவன் அனுபவித்த சந்தோஷம் வடிந்து மனம் கசந்தது.  மன்னிப்பை வேண்டுகிறாளே தவிர தன் காதலை புரிந்து கொள்ளவில்லையே! மனதிலெழுந்த வலியை வரட்சி புன்னகையாய் வெளியிட்டது இதழ்கள்.

வழக்கமான அவன் புன்னகையிலிருக்கும் ஏதோ ஒன்று இப்போது இல்லை என்பதை கவனித்த போதும் தன்னோடு பேசாது, தன்னை தவிர்த்தவன், இன்று எதிரில் நின்று சிரிப்பது அவளுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது.  அவளை அழுத்தி கொண்டிருந்த வலியொன்று காணாமல் போவதை உணர முடிந்தது. 

சட்டென முகம் பளிச்சிட சிறு புன்னகையோடு, “யூ சஞ்சு!” என்று சிணுங்கியபடி அவனின் முழங்கையின் மேல் பகுதியில் குத்தினாள்.

அவளின் சிணுங்கல் அவனை ஏதோ செய்ய, ஏமாற்றத்தை மனதினோரத்திற்கு தள்ளியவன் புன்னகையோடு, “ஆஆ… வலிக்குது..என்ன குத்துடா!” வலியே தராத அவளின் குத்திற்கு வலித்தவனாக நடித்தான் ஜெய்.

ஜெய், சரயூவிடம் பேசாமால் தவித்த தவிப்பை நன்கு உணர்ந்திருந்தாள் மைத்ரீ.  தன்னிடம் காரணத்தை நண்பன் சொல்லாத போதும் அவர்களுக்கிடையே இருக்கும் இடைவெளியை குறைக்க எத்தனையோ வகையில் முயன்றாள்.  அதெதுவும் பலிக்காமல் போனது அவளுக்கு வருத்தத்தை அளித்திருந்தது.  இன்றோ ஜெய் சரயூவிடம் பேசிவிட்டான் என்ற நிம்மதியில்,

“இன்னும் நல்லா நாலு போடு சரயூ.  அடி பயமிருந்தாதா, இனிமே உங்கிட்ட பேசாம இருக்கனும்னு கனவுல கூட நினைக்கமாட்டா”

அவளை ஆமோதித்து சரயூ அவனை மேலும் குத்தினாள்.  புன்னகைத்தபடி அவைகளை ஏற்றவன்

“போதும்..போதும் சரூ! நிறுத்து”

“எங்கிட்ட பேசாமயிருப்பியா? எவ்வளவு கஷ்டமாயிருந்தது தெரியுமா?” குரல் தழுதழுக்க கேட்டவளின் கை தன் செயலை நிறுத்தியது.

அவளின் கை கொடுக்காத வலியை, தழுதழுத்த அவளின் வார்த்தைகள் கொடுத்தன.  ஜெய் தவித்து போனான்.  விழிகளில் திரண்டிருந்த நீரை தாங்கி, தன்னைப் பார்த்திருந்தவளின் பார்வையில் இவன் மனதின் கனம் அதிகரித்தது.  அவளை அள்ளி அணைத்து ஆறுதல் சொல்ல துடித்த கையையும் மனதையும் அடக்கினான்.  அவனின் புறக்கணிப்பு சரயூவை பாதித்திருக்கும் ஆழத்தை உணர்ந்தவனாய் கைகளால் கொடுக்க முடியாத அணைப்பை வார்த்தைகளால் கொடுத்தான்.

“ரொம்ப கஷ்டமாயிருந்ததா சரூ?”

அவனைக் காணாது, பேசாது தான் கொண்டிருந்த தவிப்பனைத்தையும் அந்த நொடி உணர்ந்தவளாய், விழிகளில் எட்டிப்பார்த்த நீர்த்துளிகளோடு, ஆமோதிப்பாக சரயூ, தன் தலையை மேலும் கீழும் ஆட்டினாள்.

“ஸாரி சரூ! இன்னைக்கு சொல்ற.. நீயே எங்கிட்ட பேசாமயிருந்தாலும் நான் உங்கிட்ட பேசுவேன்.  எப்பவும் பேசிகிட்டே இருப்பேன்” உயிரை உருக்கி வார்த்தைகளாக்கியிருந்தான் ஜெய்.

மயிலிறகாய் மனதை வருடிய அவன் வார்த்தைகள் தன்னுள் பரப்பிய இதத்தை அனுபவித்தவளின் முகம் பிரகாசித்தது. 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.