(Reading time: 13 - 25 minutes)

48. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்

Maruva kathal konden

வேகமாக தனதறைக்கு வந்த சதியைப் பின் தொடர்ந்து வந்தாள் மாதங்கியும்…

“நீ இசைத்த ராகமும், பாடிய பாடலும் யாருக்குரியது என்பதனை நான் அறிவேன்… எனினும் நான் அறியாத ஒன்று, பிரஜாபதியின் மகள் சதி, அந்த இசையை எவ்விதம் கற்றாள் என்பதே…. கூறு சதி…”

மாதங்கி சதியின் கரத்தினைப் பிடித்து கேட்க,

“என்னிடம் எந்த விளக்கமும் கேட்காதீர்கள்… நான் எதையும் சொல்லும் நிலையில் இல்லை…” என்றாள் சதி அமைதியாக…

“நடந்த அனைத்தும் கனவென்று கூறு சதி… நான் என் மனதில் நினைப்பது உண்மை இல்லை என கூறு… நீ தவறுதலாக அந்த இசையை இசைத்துவிட்டதாக கூறு… கூறு சதி… மகாதேவரை நோக்கி நீ ஈர்க்கப்படுவதாய் நான் எண்ணுவது தவறென்று கூறு சதி…”

மாதங்கி பதைபதைப்புடன் கேட்க, சதி அசையவே இல்லை…

“நீ மகாதேவரின் மீது பிரியம் கொண்டிருப்பதற்கு வாய்ப்பில்லை… அது சாத்தியமே இல்லை… அது நடவாத ஒன்று… அப்படித்தானே சதி…”

“……………”

“நியதிகள் எதுவும் எனக்கு கிடையாது… ஆனால் நீயோ அதன்படி வாழ்பவள்… இன்று அந்த நியதிகளைக் கடந்து நீ செல்வதற்கு முயன்றால், நடப்பது என்ன என்று சற்றே சிந்தித்து பார்த்தாயா சதி?... நிகழவிருக்கும் பெரும் பிரளயத்தை தடுத்து நிறுத்து சதி… உன் மனதிலிருந்து மகாதேவரை அகற்றி விடு… அது ஒன்றே உனக்கு இப்போது வழி…”

“யார் மீதும் எனக்கு பிரியம் இல்லை… என் தந்தைக்கு எதிரியானவர் மீது எனக்கு எப்படி பிரியம் உண்டாகும்?... தந்தை என்னிடத்தில் கூறியிருக்கிறார், மகாதேவர் என்னை ஆயுதமாக்கி தந்தையை அழிக்க எண்ணமிடுகிறார் என்று….”

“என்னை நீ எவ்வாறு எண்ணுகிறாய் சதி?... இங்கே இந்த விழாவிற்கு வருகை தந்து பொன்னையும் பொருளையும் பரிசாய் பெற வந்தேன் என நினைக்கிறாயா?.. இல்லை சதி… உன் மீது நான் கொண்ட பிரியமே என்னை இங்கு அழைத்து வந்தது… உலகிலுள்ள அத்தனை பந்தங்களையும் துறந்த நான், உன் மீது மட்டும் அதீத பிரியம் வைத்திருக்கிறேன் மகளே… நான் இங்கே வந்தவுடன் உன்னைக் கண்டதில் பெருமகிழ்ச்சி அடைந்தேன்… அப்பொழுது தான் உன் கண்களில் காதலைக் கண்டேன்.. அது எவருக்கோ என்று எண்ணியிருந்தேன்… ஆனால் அது மகாதேவருக்கானது என்பதனை நான் அறிந்திருக்கவில்லை மகளே… நீ மறுத்தாலும் சத்தியம் இதுவே… ஆம் நீ மகாதேவரை காதலிக்கிறாய்….”

“இல்லை… நான் பிரஜாபதி தட்சரின் மகள்… சம்பிரதாயம், நீதி, நியாயம், கலாச்சாரம் அனைத்தும் உருவெடுப்பது அவரது இம்மாளிகையிலே… நான் செய்வதனைத்தும் என் சுயநினைவு உணர்ந்து செய்பவையே… எனக்கு யார் மீதும் காதல் இல்லை… அதனால் என்னைப் பற்றிய கவலை கொள்ளாதீர்கள்…”

சதி, கலங்கி போயிருந்த மாதங்கியினை சமாதானம் செய்து கொண்டிருக்கையில், அங்கே வருகை தந்தனர், பிரசுதி, கியாத்தி, அதிதி மற்றும் சந்திரன்…

“என்ன சதி?... என்ன கவலை?... யாருக்கு?...”

பிரசுதி கேள்வியினைத் தொடுக்க, சதி அதனை சமாளித்தாள்..

விழா குறித்து மாதங்கி கவலை கொள்வதாகவும், அது குறித்தே உரையாடிக்கொண்டிருந்தோம் என்றும் சதி கூற, பிரசுதியோ, அனைத்தும் திறம்பட நடந்துக்கொண்டிருக்கின்றது, அதனால் அந்த கவலை உனக்கு வேண்டாம் என்றார் மாதங்கியைப் பார்த்து…

சங்கீதப்போட்டியின் தீர்ப்பு வரும் முன்னே இங்கே ஏன் வந்தாய் சதி என சந்திரன் வினவ, சதியோ அமைதியாக இருந்தாள்…

மாதங்கியிடம் யார் வென்றிருப்பார்கள் என நினைக்கின்றீர்கள் என அத்தி வினவ, “அனைவருமே திறமைசாலிகள், அவரவர் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்..” என மாதங்கி கூற, “இதில் வெற்றி பெற்றவள் என் தங்கை சதியே…” என்றாள் கியாத்தி புன்னகையுடன்… மேலும் அவள், சதியிடத்தில், “நீ இசைத்த ராகமும், பாடிய பாடலும் இதற்கு முன்பு நான் கேட்டிராதது… எனினும் இனிமையாக இருந்தது…” என்றாள் உவகையுடன்…

“மாதங்கி கூறியது போல் அனைவருமே திறமைசாலிகள் தான்… எனினும் சதி உனக்கு இணை எவரும் இல்லை…” என பிரசுதி புகழ்ந்து கூற, அனைவரும் அதனை ஆமோதித்தனர்…

“வண்ணப் பொறுப்பாளர் இல்லம் சென்று காதல் வண்ணத்தை வாங்கி வரவேண்டும் என்று கூறினீர்களே மாதங்கி… என்னாயிற்று அது?...” கியாத்தி கேள்வியுடன் நிறுத்த,

“மறந்தே போனேன்…. அதிதி, கியாத்தி, உங்கள் இருவரில் ஒருவர் என்னுடன் வாருங்கள்… நாம் சென்று அவ்வண்ணத்தைப் பெற்று வரலாம்…” என்றாள் மாதங்கி…

“சதியினை அழைத்துச் செல்லுங்கள்… அவளே பொருத்தமானவள் அதற்கு…” கியாத்தி முறுவலுடன் கூற, பிரசுதியும் ஆம் என்றார்…

சற்று நேரத்திற்குப் பின், சந்திரன் ரோகிணியுடன் அனைவரின் முன்னிலையிலும் ஆடிப்பாடி மகிழ்ந்த்தை நினைவு கூர்ந்தவள், கணவனுக்கு தன் மீது பிரியமே வராதா என எண்ணி கவலையில் மூழ்க, பிரசுதி வந்து மகளின் அருகில் வந்து சமாதானம் செய்தார் அவளை…

பிரஜாபதியிடத்தில் இது குறித்து உரையாடு மகளே என்றும் உபாயம் ஒன்று அவர் அளிக்க, அது அபாயம் என்றாள் அவள்… அவர் கேள்வியோடு பார்த்திட்ட போது, தகப்பனிடம் இது குறித்து கூறினால் நிச்சயம் அவர் சந்திரனை சபித்துவிடுவார் என்றும் அவர் மீது தீராத கோபம் கொள்வார் எனவும் கூற, பிரசுதியோ மகளினை எண்ணி கலங்கினார்…

எந்த இன்பமும் கணவனால் அவளுக்கு கிடைக்கப்பெறவில்லையெனினும், கணவனுக்கு யாதொரு துன்பமும் நேருவதை அவளால் சகித்துக்கொள்ளமுடியாததை எண்ணி, சந்திரன் ஏன் இப்படி செய்கிறார் என மனம் நொந்தார்… பின், ரேவதி பிரஜாபதியான தன் தந்தையிடம் தனது பிரச்சனை குறித்து எதுவும் கூறக்கூடாது என்றும் தாயிடத்தில் சத்தியம் வாங்கிக்கொண்டாள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.