(Reading time: 10 - 20 minutes)

13. தொடர்கதை - சக்ர வியூகம் - சகி

Chakra Vyoogam

கேந்திரகிரி....

மீண்டும் ஒரு நெடும் பயணம்...!

அன்று கட்டாயத்தால் அங்கு வந்தவன்,இன்று மனமுவந்து வந்தான்!!வெறும் ஒரு காணொளிக் காட்சியில் இதயத்திற்கு பிரியமாகி போன மறுதந்தையின் போக்கு,அவனது வாக்கினை தன்னை நோக்கி ஈர்த்தது!!

மகேந்திரனின் சமாதி உருவாக்கப்பட்ட பூமியை அடைந்தவன்,ஒலிப்பானில் இசை எழுப்பியதும்,நுழைவுவாயிலை திறந்தான் காவலாளி!!

"சார்!மாயா மேடமுக்கு!"

"தெரிந்தாலும் எதுவும் பண்ண மாட்டா!பயப்படாதே!"

"இல்லை சார்..போனமுறையே!"

"இங்கே பார்!அவளாவது சொல்லுவா!நான் செய்துட்டு போயிட்டே இருப்பேன்.பயப்படாமல் இரு!நானிருக்கேன்!"-அவன் பாணியில் ஆறுதல் கூறுவதாய் பயமுறுத்திவிட்டு முன்னேறினான் ருத்ரா.

காரை சில அடிகளுக்கு முன்பே நிறுத்தியவன்,அதிலிருந்து இறங்கி,தனது காலணிகளை கழற்றி முன்னேறினான்.கல்லறையின் அருகே வந்தவன்,எதைக்குறித்தும் கவலைக் கொள்ளாமல்,சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான்.என்ன செய்கிறான் இவன்?என்று நாம் சிந்திப்பதற்குள் எழுந்து மண்டியிட்டவன்,இருக்கரம் கூப்பி கல்லறையை வணங்கினான்.

"நான் யாருன்னு உங்களுக்கு தெரியாம இருக்காது!எதுக்காக வந்தேன்னும் தெரியாம இருக்காது!வெளிப்படையா சொல்றேன் சார்..ருத்ரா தோற்றுவிட்டான்!நீங்க உயிரோட இருந்திருந்தா,இப்படி வந்து கேட்டிருக்க அவசியம் வந்திருக்காது!எனக்கு உங்கப் பொண்ணு வேணும்!நான் அவளை கல்யாணம் பண்ணிக்க விரும்புறேன்.அதற்காக தான் இங்கே வந்தேன்.நீங்க வேற அந்த வீடியோவுல உங்க அனுமதி இல்லாம மாயா வாழ்க்கையில எதுவும் நடக்காதுன்னு வேற சொல்லிட்டீங்க!அதான்,அனுமதி வாங்கிட்டு போகலாம்னு கிளம்பி வந்துட்டேன்!"

"எனக்கு உங்கப் பொண்ணுக்கிட்ட பிடித்ததே அந்தப் பிடிவாதம்,திமிர் தான்!நினைத்துக் கூட பார்க்கலை,நானெல்லாம் காதலைப் பற்றி பேசுவேன்னு!உண்மையை சொல்றேன் சார்!மாயாவை பார்க்கிற முன்னாடி எனக்கு கல்யாண ஆசையே இல்லை.காரணம்......"சில நொடிகள் இடைவெளிவிட்டு தொடர்ந்தான் அவன்.

"நான் என் இஷ்டத்துக்கு வாழுற வாழ்க்கையை தான் விரும்பினேன்.அவளைப் பார்த்த முதல் சந்திப்பிலே,அந்தத் திமிர் என்னை அசைத்து பார்த்துடுச்சு!நீங்க பேசினதை கேட்டப்பிறகு,காதலிக்கணும்னு ஆசை வந்துடுச்சு!மாயாவைப் பற்றி உங்களுக்கே தெரியும்!அவ மனசுல இடம் பிடிக்கிறது சாதாரண விஷயமே இல்லை.எதுவும் வேணாம் சார்!அவ என்னை காதலிக்கணும்னு அவசியமில்லை!நான் காதலிக்கிறேன்!அவ என் கூடவே இருக்கணும்.அது போதும் எனக்கு!"

"அவ எப்படி வாழணும்னு விரும்புறாளோ,அந்த வாழ்க்கை எந்தப் பாதகமும் இல்லாம அவளுக்கு கிடைக்கும்!அவ என்னை கஷ்டப்படுத்தினாலும் பரவாயில்லை.எனக்கு மாயா வேணும்!ஒருவேளை அவ வாழ்க்கையில வேற எவனாவது வர முயற்சி பண்ணா,நிச்சயமா நான் சும்மா இருக்க மாட்டேன்.எனக்கு அந்த அளவு பெரிய மனசு இல்லை!அவளுக்கு காதல் எதுவும் இருக்காதுன்னு தோணுது!ஒருவேளை,வேற யாரையாவது மாயா விரும்பினா,நான் அவளை தொந்தரவு பண்ண மாட்டேன்.உங்கப் பொண்ணை எனக்கு கொடுப்பீங்களா?"-மனம் தாங்கிய யாவற்றையும் தடங்கலின்றி எடுத்துரைத்தான் ருத்ரா.இதுபோன்ற வெளிப்படை வேண்டுதல்கள் யாரை தான் ஈர்க்காமல் சென்றுவிடும்??யுத்தத்தில் துவங்க இருந்த பந்தத்தின் போக்கினை இயன்றவரை திசை திருப்ப முயற்சித்தான்.யார் ஏற்றாலும்..அவள் ஏற்பாளா??பிடிவாதத்தை தன் உற்றத்துணையாக ஏற்று அவதரித்தவள் அல்லவா அவள்!காதல் அவளை கட்டிப்போடுமா?அவள் வைராக்கியத்தை தகர்க்கும் ஆற்றல் இந்த ஆண்மகனின் அன்பிற்கு உண்டா?அனைத்தும் கேள்விக்குறியே..!!!

னம் முழுதும் பல்வேறு தயக்கங்களை ஏற்றிருந்தவள்,அதனை தகர்க்க இறைவனின் திருவடிகளை சரணடைய பாரம்பரியமிக்க ஆலயத்திற்கு சென்றாள்.

"சீக்கிரம் வரன் உன்னைத் தேடி வரணும்னு வேண்டிக்கோ மித்ரா!"-வேண்டும் வேண்டுதலை பரிந்துரைத்தார் லட்சுமி.

எவ்வாறு விளக்குவாள் அவளது மன எண்ணத்தை??யாவற்றையும் தெரிந்தும்,யாதும் அறியததாய் தியானிக்கும் தன் இறைவனின் மௌனமும் அவளை கவலைக் கொள்ளவே தூண்டியது.மனதில் பதிந்த பந்தம் கரம் கூடும் வாய்ப்புகள் உண்டா என்ற தயக்கம் இதயத்தை முழுதும் வியாபித்தது.

"மித்ரா!"

"ஆ..பாட்டி!"

"என்னாச்சு?ஆரத்தி எடுத்துக்கோ!"-எதிரில் நீண்ட நேரமாய் நின்றிருந்த குருக்களை அப்போது தான் கவனித்தவள்,இறைவனின் ஆசிக்காக அந்த அக்னியை கண்களில் ஒற்றிக் கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.