(Reading time: 16 - 32 minutes)

13. தவமின்றி கிடைத்த வரமே - லேகா

Thavamindri kidaitha varame

ன் அறையை தியாகித்து கீழே வந்த அருளை வரவேற்றது நிசப்தமான ஹால்.  இரவு முழுவதும் கூத்துகட்டிவிட்டு பகலில் இளைப்பாறும் கலைஞனைப் போல, பின்னிரவு வரை அங்கே நடந்தவற்றால் வரவேற்பறையும் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தது.

எப்போதும்போல் தன் வேலைகளை கவனிக்க அதிகாலையிலேயே சென்றான் அருள்.  அவர்கள் தோட்டத்தில் விடியற்காலையிலே பூக்களை ஏற்றுமதி செய்ய ஆட்கள் வருவார்களாதலால், அதனை மேற்பார்வை பார்க்க  அவன் கிளம்பி விடுவது வழமை.

அன்றும் அதேபோல வயலை நோக்கி நடந்தவனுடன் சேர்ந்தே நடை பயின்றன நேற்றைய ஞாபகங்களும்.  நேற்றிலிருந்து நகமும் சதையுமாய் இருந்த அண்ணன்-தம்பி இருவரும் எதிர் துருவங்களாகினர்.  தன் அண்ணன் இருக்கும் இடத்தில் கூட இருக்கப் பிடிக்கவில்லை விஷ்வநாதனுக்கு.  ஆனால், அங்கே இருக்க வேண்டியதாய்ப் போயிற்று அவருக்கு.  இன்னும் இரண்டு மாதத்தில் அவர்கள் ஊரில் திருவிழா நடக்கவிருப்பதால் அதன் வேலைகளுக்காக ஊரில் தங்க வேண்டியதாயிற்று.  முதலிலேயே பணியிடத்தில் V.R.S. கொடுத்திருப்பதால் அதில் எந்த சிக்கலும் இல்லை.

என்ன, அண்ணனுடன் இருக்கலாம் என நினைத்திருந்தார்.  இனி, அவர்களுடன் இருக்க ஒத்துக்கொள்ளமாட்டார்.  ஒன்று, பண்ணை வீட்டில் தங்கலாம், இல்லையேல், கோவையில் இருந்து வந்து செல்லலாம்.  கோவையில் இருக்கும் வீட்டை வாடகைக்கு ஒருவருக்கு அளித்திருப்பதாலும், பயண தூரத்தை கணக்கிட்டும் அவர் அருள் முதலாவதாய் நினைத்ததையே செயல்படுத்த வாய்ப்புகள் அதிகம்.

அருள் தோட்டத்திற்கு வந்து சேர, அங்கே அவனுக்காய் காத்திருந்தாள் அவன் அத்தை பெற்றெடுத்த முத்தாரம்.

“என்ன இங்கே உக்காந்திருக்கே?  அதுவும் விடியற்காலையிலே?”

“எப்படியும் நீங்க வருவீங்க… உங்களை பார்த்துட்டு அப்படியே உதவி இருந்தா பண்ணலாமுன்னு தான் மாமோய்…” என ராகம் இழுத்தாள் வானதி.

அவளைப் பார்த்தவன் கண்ணை உறுத்தியது வானதி தன் மடியோடு சேர்த்தவாறு கட்டியிருந்த அவள் தாவணியில் இருந்தது.

“என்ன அது?” என அருள் கேட்க, “உங்கள பார்க்க வெள்ளன (சீக்கிரமே) வந்தேனா… போரடிச்சிது… அதான், நான் வைக்க கொஞ்சமே கொஞ்சம் பூ பறிச்சேன்” என்று வானதி கூறி அவள் பறித்ததைக் காட்ட, அதனைக் கண்ட அருளுக்கு மயக்கம் போடாத குறை தான்… கிட்டத்தட்ட ஒரு கிலோ பூவை எடுத்து வைத்திருந்தாள் வானதி.

“இது உனக்கு கொஞ்சமா… உன்ன…” என்றவாறு அருள் அவளை அடிக்க கையை ஓங்க, “என்ற மாமன் தோட்டத்துல நான் பறிக்கிறேன்.. நீ என்ன கேக்குறது..” என்றவாறு வானதி எஸ்கேப்பானாள் அங்கிருந்து.

ன்பே அன்பே கொல்லாதே!!

கண்ணே கண்ணை கிள்ளாதே!!”

என ஹரிஹரன் குரலுக்கு கனவில் லிப்சிங்க் கொடுத்தபடி நடனமாடி மகிழ்ந்துகொண்டிருந்தான் யாதவ்.  திடீரென்று ஒரு சத்தம், “இப்போ எந்திரிக்கப் போறீங்களா இல்லையா?”

‘இது என் தேவதையின் குரல் அல்லவா?’ என எண்ணி கண் திறந்தான் அவன்.  எதிரே நின்றிருந்தாள் அவன் காதலி.

“என்ன அம்மு நீ… இப்போ எல்லாம் கனவு கூட நிஜத்தில் நடப்பது மாதிரியே இருக்கு. இப்போகூட பாரு… நீ நிற்பது போலவே தெரியுது” என்று கூறிவிட்டு மீண்டும் தன் தூக்கத்தை நீட்டிக்க முயன்றவனை திடுக்கிட்டு எழச் செய்தது அவன் மீது வந்து விழுந்த பொருள் ஒன்று.

“என்னதென்னது… நான் உங்க கனவுல… நல்லா நடிங்க… அதான் சாம் சாம்னு நீங்க சமந்தாவை நினைத்து உருகுனதுல உங்க ஏரியாவே மிதக்குதே…” என்று பல்லைக் கடித்தாள் வர்ஷினி.

‘ஹீஹீஹீ… தெரிஞ்சிடுச்சே… சரி சமாளிப்போம்’ என நினைத்து, “இல்லையே அம்மு… நீ தான் வந்தே! சத்தியமா…” என்றான் யாதவ்.  என்ன செய்வது? அவனுக்கு சமந்தா என்றால் மிகவும் பிடிக்கும்.  அந்த ஒரு காரணமே போதும் சமந்தாவை வர்ஷினிக்கு பிடிக்காமல் போக!  அதன்பின், நாகா சைதன்யாவைப் பற்றிப் பேசி யாதவை வர்ஷினி கடுப்பேற்றுவதைப் பற்றி தற்போது பேசுவதற்கில்லை…

“ரொம்ப வழியுது…” என்றவள், “இந்தாங்க… துடைக்க” என அருகிலிருந்த அவன் பூத்துவாலையை நீட்டினாள்.

“இது எதுக்குடா… அதான் உன் துப்பட்டா இருக்கே” என வேண்டுமென்றே அவள் துப்பட்டாவை நோக்கி கை நீட்டினான்.  யாதவ் அவ்வாறு செய்ததும் பயந்து ஓரடி பின்னால் வைத்தவள், “துப்பட்டா அழுக்காகிடும்” என உடனே அதனை அவன் கையில் கிட்டாதபடி இன்னும் தள்ளி நின்றாள், தன் OCD-ஐ (Obsessive Compulsive Disorder) நிரூபித்தபடி.

‘எப்படியோ அவ கோபத்தை டைவேர்ட் செய்தாச்சு’ என்று எண்ணியவாறு, “இவ்வளவு நேரத்தில் வீட்டுக்கு வந்துருக்கியே…. ஏதாவது பிரச்சனையாமா?” எனக் கேட்டான் யாதவ்.

அவனை நோக்கி ஒரு கனல் பார்வையை வீசிக்கொண்டே, “இன்னைக்கு 12:30 மணி ஷோவுக்கு படத்துக்கு போகலாம்னு சொன்னீங்க. இப்போவே மணி 9.  இன்னும் தூங்கிட்டு இருக்கீங்க… ம்ம்ம்… சீக்கிரம் கிளம்புங்க… நான் கீழே அம்மாகூட பேசிகிட்டு இருக்கேன்” என்று கூறினாள் வர்ஷினி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.