(Reading time: 12 - 24 minutes)

20. உன் நேசமதே.. என் சுவாசமாய்..!! - சித்ரா. வெ

love

சிறிது நாட்களாகவே இந்த திருமண ஏற்பாடு குறித்து தூக்கம் தொலைத்திருந்த துஷ்யந்த், அதுவும் நேற்று முன்தினம் கோயம்புத்தூரில் இருந்து இரவே ஓய்வெடுக்காமல் கிளம்பியதால், நேற்று முழுவதுமே ஒய்வெடுத்தவன், இன்று எஸ்டேட்டை மேற்பார்வையிட சென்றான்… ஆறு வருடமாக இந்த எஸ்டேட் பக்கம் இவன் தலை காட்டவில்லை.. மூன்று வருடத்திற்கு முன்பு வரை இவன் மாமா தான் இங்கு வந்து அடிக்கடி இங்கு மேற்பார்வையிடுவார்… ஆனால் அவர் இறந்த பின், இவனாலும் வரமுடியவில்லை… செல்வாவாலும் வர முடியவில்லை… எல்லா வேலைகளையும் எஸ்டேட் மேனேஜர் தான் கவனித்துக் கொண்டார்… அதனால் வந்த மறுநாளே எஸ்டேட்டை மேற்பார்வையிட தொடங்கிவிட்டான்.

எஸ்டேட் முழுக்க வலம் வந்தவன், அங்கு வேலை செய்யும் ஊழியர்களின் நிறை குறைகளை ஆராய்ந்தவன், அவர்களுக்கு கட்டிக் கொடுத்திருந்த வீடுகளை சென்று பார்த்தவன், பின் மாலை நேரத்தில் இவர்கள் எஸ்டேட் பங்களாவிற்கு பின்புறம், இவர்கள் தேயிலை தோட்டத்தின் முடிவிலும், பக்கத்து எஸ்டேட்டின் ஆரம்பத்திலும் அமைந்திருந்த அந்த சிறிய கோயிலுக்குச் சென்றான்.

இவனுடைய தந்தை இந்த தோட்டத்தை வாங்கிய புதிதில் யாரோ ஒருப் பெண் சாமி ஆடி, இந்த எல்லைப் பகுதியில் அம்மனுக்கு கோவில் கட்ட வேண்டும் என்று சொல்லவே, இரண்டு எஸ்டேட் உரிமையாளர்களும் சேர்ந்து சிறியதாக இந்த கோவிலை கட்டினர்… அம்மனுக்கு சிறிய கோபுரத்தோடு சேர்ந்த கருவறையும், வெளியே சின்னதாய் வழிபட ஒரு மண்டபமும் கட்டினர்… அந்த சாமியாடிய பெண்ணே காலையும் மாலையும் வந்து பூஜை செய்தார்… இப்போது வயதாகியும் அதே பெண்மணியே இன்னும் அந்த கோவிலுக்கு பூஜை செய்கிறார்…  இந்த இரண்டு எஸ்டேட்டில் வேலை பார்க்கும் ஊழியர்களே இந்த கோவிலுக்கு தேவையானதை செய்துக் கொள்வர்…

பொதுவாக துஷ்யந்திற்கு கடவுள் நம்பிக்கை உண்டு… ஆனால் விழுந்து விழுந்து வழிபடமாட்டான்… கோவிலுக்கு செல்வதெல்லாம் எப்போதோ தான், அதுவும் கூட்டம் இல்லாமல் அமைதியாக கடவுளை வழிபடுவது தான் அவனுக்கு பிடிக்கும்… ஆனால் கங்காவிற்கு அடிக்கடி கோவிலுக்கு செல்வது பிடிக்கும்… இந்த எஸ்டேட்டிற்கு வந்ததிலிருந்து அவள் அதிகம் வெளியே செல்ல வாய்ப்பில்லாததால், இந்த கோவிலுக்கு வந்து அடிக்கடி வழிபடுவாள்… எப்போதாவது துஷ்யந்தையும் அந்த கோவிலுக்கு அழைத்துச் செல்வாள்.. அந்த அமைதியான சூழ்நிலை அவனுக்கும் பிடிக்கும் என்பதால் அவளோடு சென்று வருவான்…

இந்த சம்பவம் நடந்தது முதன்முதலாக அவளுடன் கோவில் சென்ற போது தான், போனதும் அம்மனை கையெடுத்துக் கும்பிட்டு விட்டு, அந்த மண்டபத்தின் ஒரு ஓரம் வெளியே காலைத் தொங்கப்போட்டப்படி இவன் உட்கார்ந்து விட்டான்… அவள் கையில் அம்மனுக்கு அர்ச்சனை செய்யும் உபகாரங்களோடு வந்திருந்தாள்… அந்த கோவிலின் பூசாரியாய் இருக்கும் பெண்மணி எப்போதும் அந்த கோவிலில் இருக்கமாட்டார்… காலையும், மாலையும் அம்மனுக்கு அலங்காரம் செய்ததும் சென்றுவிடுவார்… மற்ற சமயங்களில் கோவிலுக்கு வருபவர்கள் அவர்களே பூஜை செய்துக் கொள்வர், கங்காவும் அப்படித்தான் அர்ச்சனை பொருட்களை கொண்டு அம்மனுக்கு பூஜை செய்தவள், தீப ஆராதனை காட்டும் நேரம் அவனை அழைத்தாள்… அவளோடு சேர்ந்து அவனும் அம்மனை திரும்ப ஒரு முறை வழிபட்டான்….

வழிபாடு முடிந்ததும் அங்கே வைக்கப்பட்டிருந்த திருநீர் மற்றும் குங்குமத்தை எடுத்து தான் வைத்துக் கொண்டவள், அவனுக்கும் இட்டு விட்டாள்… அவளே இட்டு விடுவாள் என்று எதிர்பார்க்காதவன்,

“ஹே என்ன பண்ற..?? நான் திருநீர் குங்குமமெல்லாம் நெத்தியில வச்சுக்க மாட்டேன்.. எனக்கு இதெல்லாம் அலர்ஜி.. சின்ன வயசுலேயே வச்சுக்க மாட்டேன்…” என்று அதை அழிக்கப் போனான்..

“ப்ளீஸ் அதை அழிக்காதீங்க…” பாவமாக முகத்தை வைத்தப்படி கூறினாள்.

“சாரி… நான் குழந்தையா இருக்கும்போது அப்பாக்கு நான்தான் திருநீர் வைப்பேன்னு அடம்பிடிப்பேனாம்…அப்பாவும் அதுல இருந்து வீட்ல சாமி கும்பிட்டாலும், கோவிலுக்கு போனாலும் என்னையே திருநீர் வச்சுவிட சொல்லுவாரு… சின்னவங்க பெரியவங்களுக்கு இதுமாதிரி வச்சுவிடக் கூடாதுன்னு அம்மா சொன்னாலும் அப்பா கேக்க மாட்டாரு… அதுல இருந்து அப்பாக்கும் சரி, என்னோட தங்கைக்கும் சரி நான் தான் திருநீர் வச்சுவிடுவேன்.. அதே பழக்கத்துல உங்களுக்கும் வச்சுட்டேன்…

இந்த அம்மன் ரொம்ப சக்தி உள்ளவங்களாம்… எது வேண்டிக்கிட்டாலும் நடக்குமாம்… நான் முதல் முறை இந்த கோவிலுக்கு வந்தப்போ என் தங்கைக்கு சீக்கிரம் குணமாகனும்னு வேண்டிக்கிட்டேன்.. அதேபோல இப்போ அவ நல்லா இருக்கா.. இப்போ உங்களுக்காக தான் வேண்டிக்கிட்டேன்… அதனால வச்ச திருநீரை அழிக்காதீங்க… எப்பவோ சின்ன வயசுல தானே அலர்ஜி ஆச்சு… இப்போ அது சரியாகியிருக்கலாமே..” கெஞ்சலாக கூறினாள்.

என்னவோ அவள் சொன்னதற்காகவே அவன் அதை அழிக்கவில்லை… அந்த நாளுக்குப் பிறகு அவளோடு கோவிலுக்கு வரும்போதெல்லாம் மறுபடியும் அதுபோல் அவள் செய்ததில்லை… இவனுக்கும் அது பெரிதாக தெரிந்ததில்லை…

ஆனால் இவனை விட்டு அவள் விலகிச் சென்றப்பின் அவளின் அப்போதைய ஒவ்வொரு செயல்களும் இவனுக்கு பொக்கிஷமாக தெரிந்தது.. அதன்பின் தான் இவனும் நெற்றியில் தினம் திருநீர் இட்டுக் கொள்ள பழகிக் கொண்டான்… எப்போதாவது இளங்கோவிற்கோ இல்லை ரம்யாவிற்கோ அவள் கையால் திருநீர் இடும்போது இவன் அந்த சமயம் அங்கே இருந்தால், மறந்துப் போயாவது இவன் நெற்றியிலும் அவள் திருநீரு இடமாட்டாளா?? என்று எத்தனை முறை ஏங்கியிருக்கிறான்… அவள் திருநீரு இட்டு விடும் அந்த சந்தோஷத்தை இழந்துவிட்டோமே என்று எத்தனை முறை வருத்தப்பட்டிருக்கிறான்… திரும்ப அவளோடு இந்த கோவிலுக்கு வந்து வழிபடும் ஆனந்தம் கிடக்குமா..?? யோசித்தப்படியே அந்த கோவில் மண்டபத்தில் அவன் அமர்ந்திருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.