(Reading time: 6 - 11 minutes)

தீபாவளி சிறப்பு கருத்துக் கதை – 49. வெள்ளைத் தாளில் கறுப்பு புள்ளி - சாந்தி

Black dot

அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்!

றுநாள் தீபாவளி.

ஆனால் அதை பற்றி சிந்திக்க முடியாத அளவில், சுசீலாவின் மனதில் ஒரே குழப்பம். கணவன் பார்த்திபனை பற்றி கேள்வி பட்டதை நம்புவதா வேண்டாமா என்று முடிவு எடுக்க முடியாமல் குழம்பிக் கொண்டிருந்தாள்.

துவைத்த துணிகளை மொட்டை மாடியில் காயப் போடும் போதும் அதே கேள்வி அவளை குடைந்துக் கொண்டிருந்தது.

அங்கே வற்றல் காயப் போட வந்த வீட்டு ஓனர் காயத்ரியின்,

“என்னம்மா சுசீலா தீபாவளிக்கு எல்லாம் ரெடியா? பலகாரம் எல்லாம் செய்தாச்சா?” என்ற கேள்விகள் அவள் காதில் விழவே இல்லை.

காயத்ரிக்கு ஒரே ஆச்சர்யமாகி போனது. சுசீலா நல்ல குணமும், பண்பும் கொண்டவள். இப்படி கேள்விக்கு பதில் சொல்லாமல் அலட்சியமாக நடப்பவள் இல்லை.

மேலே எதுவும் யோசிக்காமல், சுசீலாவின் அருகே சென்று தோளில் தட்டி,

“என்ன சுசீலா? கேள்வி கேட்டா பதில் சொல்லாமல் நிக்குற?” என்று நேரடியாக கேட்டே விட்டாள்.

திடுக்கிட்டு பார்த்த சுசீலாவிற்கு காயத்ரி சொன்னது விளங்கவே இல்லை. என்ன கேள்வி? எப்போது கேட்டார்கள்?

சுசீலாவின் முகமே தான் கேட்ட கேள்வி அவளின் கருத்தை எட்டவில்லை என்பதை சொல்லிவிட காயத்ரி அவளை ஊற்று கவனித்தாள்.

சுசீலாவிடம் சில வேறுபாடுகள் தெரிந்தது.

எப்போதும் ஸ்நேக புன்னகையுடன் இருப்பவளிடம் இன்று அது மைனஸ். எப்போதும் கண்களில் இருக்கும் தெளிவு இன்று இல்லை. முகமும் சரியில்லை!

எதுவோ சரியில்லை, ஏதோ விஷயம் இருக்கிறது என்பது புரிந்தது.

பார்த்திபனையும் சுசீலாவையும் தன்னுடைய சொந்த குழந்தைகள் போல நினைப்பவள் என்பதால் எனக்கென வந்தது என்று விட்டுவிட அவளுக்கு மனம் வரவில்லை.

“என்னம்மா சுசீலா என்ன ஆச்சு?”

காயத்ரியின் கேள்வியும் அதில் தெரிந்த அக்கறையும் அடக்கி வைத்திருந்த வருத்தத்தை அவிழ்த்து விட, கண் கலங்க,

“இவரை பத்தி தப்பு தப்பா கேள்வி படுறேம்மா” என்று தடுமாற்றத்துடன் சொன்னாள் சுசீலா.

“தப்பாவா? உன் புருஷனை பத்தியா? இது என்ன புதுசா இருக்கு? நீ வா என் கூட” என்று சுசீலாவை கை பிடித்து தன்னுடைய போர்ஷனுக்கு அழைத்து சென்ற காயத்ரி, உடனே எதுவும் கேட்கவில்லை.

சூடாக டீ போட்டு கொடுத்து அவளை ஆசுவாசப் படுத்தியவள், மெல்ல பேச்சை தொடங்கினாள்.

“இப்போ சொல்லு என்ன கேள்விப்பட்ட? யார் என்ன சொன்னது?”

காயத்ரியிடம் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருப்பவள் என்பதால் தயங்காமல் ஒப்பித்தாள் சுசீலா.

“அவரோட ஆபிஸ்ல வேலை செய்ற சாக்ஷி சொல்றா அவருக்கு ஆபிஸ்ல அவர் கீழே வேலை செய்ற பொண்ணுங்க கிட்ட தப்பான தொடர்பு இருக்காம்.”

“ஓஹோ, யார் இந்த சாக்ஷி? அவ சொன்னதை நீ நம்புறீயா?”

சுசீலா தயக்கத்துடன் நெளிந்தாள்.

“சொல்லு சுசீலா, அந்த பொண்ணு சொன்னதை நீ நம்புறீயா?”

“முதல்ல நம்பலைம்மா. அப்புறம் ஒன்னு இரண்டு விஷயத்தை யோசிச்சப்போ அப்படியும் இருக்குமோன்னு தோணிச்சு”

“நேரா உன் அவர் கிட்ட கேட்க வேண்டியது தானே?”

சுசீலா கையை பிசைந்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். காயத்ரிக்கு அவளின் தயக்கம் புரிந்தது.

“இரு உனக்கு புரியுற மாதிரி சொல்றேன்” என்று அருகே இருந்த வெள்ளைத் தாள் மற்றும் பென்சிலை எடுத்தவள், அந்த தாளில் சின்னதாக ஒரு புள்ளியை வைத்தாள். பின் அதை சுசீலா பக்கம் நீட்டி,

“இது என்னது ?” என்றுக் கேட்டாள்.

காயத்ரியின் செய்கையை கவனித்துக் கொண்டிருந்த சுசீலாவிற்கு அவளின் கேள்வி வித்தியாசமாகப் பட்டது. ஆனாலும் பதிலை சொன்னாள்.

“கறுப்பு புள்ளி”

“அது தான் பிரச்சனை. இது எவ்வளவு பெரிய பேப்பர்? முழுசா காலியா க்ளீனா இருக்கு. ஏன் அது எதுவும் உன் கண்ணுக்கு படலை? ஏன் அந்த சின்ன புள்ளி மட்டும் தெரியுது?”

காயத்ரியின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் விழித்தாள் சுசீலா.

“நம்ம மனசு அப்படி தான் சுசீலா. ரொம்ப சின்னத்தனமானது. எப்போவும் நல்லதை எல்லாம் ஈசியா மறந்துட்டு சின்னதா இருக்க கெட்டதையே பார்க்கும். அதை அப்படியே விடாம நாம தான் சரி செய்யனும். பார்த்திபன் தம்பியை பத்தி நீயே எத்தனை தடவை வாயார புகழ்ந்திருக்க? இப்போ எவளோ ஒருத்தி சொன்னா அவர் கெட்டவராகிடுவாரா? உனக்கு அந்த பொண்ணு சொன்னதை வச்சு கேள்வி இருந்தாலும் அதை நேரா விசாரிச்சு தெரிஞ்சிருக்கனும்ல?”

சுசீலா அமைதியாக இருந்தாள்.

“என்ன கேட்டு தெரிஞ்சுக்குறீயா?”

“சரிம்மா” என்று ஏற்றுக் கொண்டாள் சுசீலா.

“நல்லதோ கெட்டதோ நேராவே கேட்டு மனசை தெளிவாக்கிக்கோ”

மேலும் சிறிது நேரம் காயத்ரியிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு, சுசீலா விடை பெற்று கிளம்பி சென்றபோது கொஞ்சமாய் அவளுள் தெளிவு வந்திருந்தது.

ன்று மாலை, தான் இரவு உணவிற்கு என்று செய்திருந்த காரக்குழம்பு சுசீலாவிற்கு பிடிக்குமே என்று ஒரு கிண்ணத்தில் குழம்பை ஊற்றி எடுத்துக் கொண்டு அவர்களின் வீட்டு போர்ஷன் பக்கம் சென்றாள் காயத்ரி.

அங்கே திறந்திருந்த ஜன்னல் வழி பார்த்திபனின் சிரிப்பு சத்தம் கேட்டது. கூடவே பேச்சு சத்தமும்.

“அவ தான் சொன்னா நீ எப்படி நம்பின?”

“நம்பலை ஆனாலும் என்னமோன்னு தோணிச்சு”

சுசீலாவின் குரலில் இப்போது வருத்தம் துளியும் இல்லை.

அவர்களை தொல்லை செய்ய வேண்டாமென்று வந்த வழியே திரும்பி சென்றாள் காயத்ரி.

தீபாவளி காலை!

வாயெல்லாம் பல்லாக, முகம் முழுவதும் சந்தோஷம் கொப்பளிக்க, காயத்ரி வீட்டிற்கு வந்த சுசீலா,

“தீபாவளி வாழ்த்துக்கள்ம்மா. கோவிலுக்கு போயிட்டு இருக்கோம்... இந்தாங்க பலகாரம்” என்று ஒரு பெரிய டப்பாவை நீட்டினாள்.

“இவ்வளவு பெரிய டப்பாவா?”

“ஆமாம்மா கறுப்பு புள்ளியை பத்தி மட்டும் யோசிக்காமல் வெள்ளை பக்கத்தையும் பார்க்கனும்னு எனக்கு சொல்லி தந்தீங்கள அதுக்கான ஸ்பெஷல் பலகாரம். அவரை பொறுத்த வரைக்கும் அந்த கறுப்பு புள்ளியை நான் கண்டுக்காமல் இருக்க வேண்டாம், அழிக்கவே செய்துட்டேன்”

காயத்ரி என்ன, எது என்றெல்லாம் அதிகமாக கேட்கவில்லை, அவர்களுக்குள் குழப்பம் சரியானால் சரி தான் என்று சுசீலா – பார்த்திபன் தம்பதியை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தாள்.

 

நாம் எல்லோருமே இப்படி தான்! நம் மனசு முழுக்க பல பல கறுப்பு புள்ளிகளை (பிழைகளை) வைத்துக் கொண்டு, மற்றவர்களிடம் இருக்கும் சின்னதான கறுப்பு புள்ளிகளை தேடி தேடி கண்டு பிடிக்கிறோம். பெரும்பாலான நேரம் அது அங்கே இல்லாத நம் கற்பனை புள்ளிகளாகவும் (பிழைகளாகவும்) இருக்கிறது.

இதை மாற்றி மற்றவரிடம் இருக்கும் வெள்ளை பக்கத்தை அதாவது நல்லவற்றை பார்ப்போமேயானால், எதிலும் இனிமை தான்.

இந்த இனிய தீப திருநாளில் இந்த கருத்தையும் நம் மனதில் பதிய வைப்போம்.

நன்றி.

Story # 48. Vazhkkaiku azhagana tharkkam - Vinni

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.