(Reading time: 3 - 5 minutes)

அழகு குறிப்புகள் # 61 - இயற்கையாக அழகான நகங்களை வளர்ப்பது எப்படி?

நீண்ட, நன்கு அழகுபடுத்தப்பட்ட நகங்கள் நம் கைகளை அழகாகக் காட்டுகின்றன என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்கிறோம். பெரும்பாலான இளம் பெண்கள் நீண்ட, வலுவான நகங்களைக் கொண்டிருக்க விரும்புகிறார்கள். ஆனால் குறுகிய, உடையக் கூடிய நகங்களைக் கொண்டவர்களுக்கு, அழகான நகங்களை வளர்ப்பதும், அவற்றைக் கவனித்துக்கொள்வதும் எப்போதுமே போராட்டம் தான்.

நகங்களை வேகமாக வளர்க்க பல இயற்கை வழிகள் உள்ளன. இவை அனைத்துமே எளிமையானவை, மலிவானவை மற்றும் நம் அனைவருமே செய்யக்கூடியவை. உங்கள் நகங்களை நீளமாக வளர்த்து, ஆரோக்கியமாக பராமரிக்க நீங்கள் செய்ய வேண்டியவற்றை இங்கே பார்க்கலாம்.

 

நீரேற்றம் (Hydration)

நிறைய தண்ணீர் குடித்து உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது உங்கள் சருமத்திற்கும் கூந்தலுக்கும் மட்டுமல்ல, நக வளர்ச்சிக்கும் உதவுகிறது.

தண்ணீர் மட்டுமல்லாமல் இளநீர், பழச்சாறுகள் போன்ற இயற்கையான ஹைட்ரேட்டிங் பானங்களையும் குடிக்கலாம்.

 

புரதம் (Protein)

உங்கள் நகங்கள் சுலபமாக உடையக் கூடியவையாக இருந்தால், அதிகமான புரத உணவை நீங்க உண்ண வேண்டியது அவசியம்.

நீண்ட மற்றும் வலுவான நகங்கள் கிடைக்க, பரிந்துரைக்கப்பட்ட அளவு புரதத்தை நீங்கள் சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். காலை உணவில் முட்டை மற்றும் பால் பொருட்கள் கலப்பது நல்ல சாய்ஸ்!

 

வட்ட வடிவம்

மற்ற வடிவங்களுடன் ஒப்பிடுகையில், வட்ட வடிவான நகங்கள், எதிர்பாராமல் ஏற்படும் மோதல்களால் உடைவதற்கான வாய்ப்பு குறைவு.

நகங்களை அவ்வப்போது ட்ரிம் செய்வது திடீரென உடைவதைத் தவிர்க்க உதவும்.

 

அசிட்டோன் அடிப்படையிலான நெயில் பாலிஷ் ரீமூவரை தவிர்க்கவும்

நீங்கள் அணிந்துள்ள நெயில் பாலிஷை அடிக்கடி மாற்ற விரும்பினால், இயற்கையான நெயில் பாலிஷ் ரீமூவரை பயன்படுத்துங்கள்.

அசிட்டோன் உள்ள நெயில் பாலிஷ் ரீமூவர் நக ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் அதன் வளர்ச்சியைத் தடுக்கும். நெயில் பாலிஷ் ரிமூவரில் பொதுவாகக் காணப்படும் அசிட்டோன், நகம் ஆரோக்கியமாக இருக்க அவசியமான இயற்கை நக எண்ணெய்களை அகற்றி விடும்.

 

க்யூடிகுள் நலம்

விரல்களில் நகம் ஒட்டி இருக்கும் பகுதி க்யூடிகுள் என்றழைக்கப் படுகிறது. அந்த பகுதியை தேவை இல்லாமல் சுரண்டுவது, பிய்த்து எடுப்பது போன்றவை நக வளர்ச்சிக்கு நல்லது இல்லை.

ஆரோக்கியமான க்யூடிகுள், ஆரோக்கியமான நீண்ட நகங்கள் வளர உதவும்.

  

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.