(Reading time: 3 - 6 minutes)

பொது - கோபத்தைக் குறைப்பவனே...! - சுமதி

Krishna

ரு சமயம் ஸ்ரீகிருஷ்ணர், அவரது சகோதரர் பலராமர், அர்ஜுனன் இம்மூவரும் ஒரு அடர்ந்த வனத்தின் வழியாகச் சென்றனர். இரவாகி விட்டது. மூவரும் ஒரிடத்தில் தங்கிவிட்டு விடிந்ததும் செல்லலாம் என்று எண்ணினர். 

வனத்தில் துஷ்ட மிருகங்கள் இருக்கும் என்பதால் மூவரும் ஒரு சேரத் தூங்கக்கூடாது என்றும், ஜாமத்திற்கு ஒருவராகத் காவல் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர்.

அதன்படி ஸ்ரீகிருஷ்ணரும், பலராமரும் தூங்கச்செல்ல, அர்ஜுனன் காவல் இருந்தான்.அப்போது திடீரென புகை மண்டலம் சூழ்ந்தது.

அதிலிருந்து ஒரு பயங்கர உருவம் வெளிப்பட்டது. அகன்ற நாசியும், தூக்கிய பற்களும், முட்டைக் கண்களுமாக இருந்தது அவ்வுருவம்.

மரத்தடியில் இருவர் தூங்குவதையும், ஒருவன் காவல் இருப்பதையும் கண்ட அவ்வுருவம் தூங்கும் இருவரின் அருகில் சென்றது. அதைக்கண்ட அர்ஜுனன் கோபத்துடன் அதைத் தடுத்தான். 

அப்போது அவ்வுருவம் அவ்விருவரையும் தான் கொல்லப் போவதாகவும் அதற்கு அர்ஜுனன் துணை செய்ய வேண்டும் என்றும் கேட்டது.

 அதைக்கேட்டு கோபம் மிகக்கொண்டு அவ்வுருவத்தைத் தாக்கினான்.

அர்ஜுனனின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தில் பலமும் அதன் வடிவமும் பெருகியது.

அர்ஜுனன் ஆக்ரோஷத்தோடு அதனுடன் போரிட அது பூதாகாரமாய் விளங்கியது. அர்ஜுனனை பலமாகத் தாக்கிவிட்டு மறைந்தது.

ரண்டாம் ஜாமம் தொடங்கவும் பலராமரை எழுப்பிவிட்டு அர்ஜூனன் தூங்கச் சென்றான்.பலராமர் காவல் இருந்தார்.

அப்போது மீண்டும் அவ்வுருவம் அங்கு தோன்றி அர்ஜுனனிடம் கூறியதுபோல பலராமரிடமும் கூறியது. அதைக்கேட்டு கோபம் கொண்ட பலராமர் அதனுடன் சண்டையிட்டார்.

அவ்வுருவம் அடிபணிவதாய் இல்லை. 

பலராமரின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் பெரிதானது.பின் பலராமரையும் பலமாகத் தாக்கிவிட்டு அவ்வுருவம் மறைந்துவிட்டது.

மூன்றாம் ஜாமம் தொடங்கவும் பலராமர் கிருஷ்ணரை காவலுக்கு எழுப்பிவிட்டு படுக்கச் சென்றார். அப்போதும் அப்பொல்லாத உருவம் தோன்றியது.

அதைப்பார்த்த கிருஷ்ணர் கடகடவெனச் சிரித்தார்.

ஏன் சிரிக்கிறாய்? என்றது அவ்வுருவம். 

உனது தூக்கிய பற்களும், அழகான முட்டைக் கண்களையும் கண்டுதான், என்றார் சிரிப்பை அடக்க முடியாமல். அவர் தன்னைக் கேலி செய்வதைக் கண்டு ஆக்ரோஷத்துடன் அது சண்டை போட்டது.

கிருஷ்ணரோ புன்னகையை மாற்றாமலே, சண்டை போட்டார். 

கிருஷ்ணர் சிரிக்கச் சிரிக்க அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் குறைந்துகொண்டே வந்தது.

கடைசியில் அவ்வுருவம் சின்னஞ்சிறு புழுவாக மாறி தரையில் நெளிந்தது.

ஸ்ரீகிருஷ்ணர் அப்புழுவை எடுத்து ஒரு துணியில் முடிந்து வைத்தார்.

பொழுது விடிந்தது. பலராமரும், அர்ஜுனனும் எழுந்தனர். 

இருவரும் இரவில் ஒரு பயங்கர உருவம் வந்ததும், அவர்களைத் தாக்கியதும் அவ்வுருவம் வளர்ந்து வளர்ந்து பெரிதாகியது பற்றியும் பேசினர்.

அப்போது கிருஷ்ணர் துணியில் முடிந்திருந்த புழுவைக் காட்டி,

நீங்கள் இருவரும் சண்டை போட்ட உருவம் இதுதான். 

நீங்கள் அதனுடன் சண்டை போடும் போது கடுமையாகக் கோபப்பட்டீர்கள். உங்கள் கோபம் அதிகரிக்க அதிகரிக்க அதன் பலமும் வடிவமும் அதிகரித்தது. 

நான் சிரித்துக்கொண்டே சண்டை போட்டதால் இதன் பலமும் வடிவமும் குறைந்து கொண்டே வந்து புழுவாக மாறிவிட்டது. 

வம்பு சண்டைக்கு வருபவனை விட்டு புன்னகையோடு வெளியேறி விட்டால், அவன் புழுவுக்கு சமமாகி விடுவான்.

கோபத்தைக் குறைப்பவனே பக்தன்   என்றார்..!!

"அந்த பூதத்தை மன அழுத்தமாக எண்ணிக் கொள்ளுங்கள்.. இந்த காலத்திற்கு அந்த கதை மிக  அழகாக பொருந்தும்.."

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.