(Reading time: 1 - 2 minutes)

என்றென்றும் இளவரசிகள்!!! - மது

யாருக்கும் தலைவணங்காத கம்பீரமானவர்

என் முன் மண்டியிட்டு தலைகுனிந்து நிற்பார்

என்னிடம் இருந்து ஒரு முத்தத்தைப் பெற்றிட...

dad 

தாரத்தைத்  தாயாக நேசித்துப் போற்றுபவர்

தன் மனைவி மேல் கடும் சினம் கொள்வார்

என்னை அம்மா கண்டித்து விட்ட காரணத்திற்காக…

 

மற்றவர் பாராட்டுக்கும் புகழுக்கும் மயங்காதவர்

தேன் உண்ட வண்டாய் சொக்கிப் போவார்

நான் வரைந்த சித்திரத்தில் ராஜகிரீடம் அவர் சிரசில்...

 

இளம் வயதில் குறும்புக் கண்ணனாய் இருந்தவர்

சிம்ம சொப்பனமாய் நரசிம்ம அவதாரம் எடுப்பார்

என்னை விளையாட்டாய்  கூட எவரேனும் சீண்டினால்...

 

எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்

கண்கள் அருவியாய் உடைந்து போவார்  

சாதாரண காய்ச்சலில் நான் சற்றே துவண்ட போது..

 

கடவுளிடம் எதையும் யாசித்துப் பெறாதவர்

கை கூப்பி அனுதினமும் வேண்டுவார்  

என்னை இமைபோல் காத்து நேசிக்கும் ஒரு இளவரசனுக்காக...

 

மகள் தந்தைக்கு இறைவன் அளித்த வரமா...

தந்தைக்கு மகளானது பெண் செய்த தவமா...

 

ஆண்டியானாலும் அரசன் ஆனாலும்

அப்பாவின்  செல்ல மகள்கள்

என்றென்றும் இளவரசிகள்!!!

 

இந்தக் கவிதையை என் டாடிக்கும் எல்லா மகள்களின் தந்தைகளுக்கும் சமர்ப்பிக்கிறேன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.