(Reading time: 2 - 4 minutes)

காதல் வைராக்கியம் - அனு.ஆர்

நீல மலைகள்

நிலவொளி

நின்று பெய்யும் சாரல்

வந்து போகும் பறவை

மலையில் சூரியன்

மஞ்சள் வெயில்

அனைத்தும் அழகென்று

அறிய வைத்தது

காதல்.

 

நீண்டு விரிந்த நிலபரப்பும்

காயாத கடலும்

காதாலர்களை பிரித்திருந்த காலத்தில்

 

நீ பார்வையால் தொட்ட நிலவை

என் பார்வை தொடும் பொழுது

நின்னருகில் வந்துவிட்டதாய்

எழும் நினைவிற்காய்

நாள் தோறும் நானிருந்த

தவத்தை

நன்கறியும்

என்வீட்டு நடைபாதை படிகட்டு.

 

நீ வாழும் காலத்தில்

நான் வாழாமல் போயிருந்தால்

உன்னை அறியாதே

பிறந்து இறந்திருப்பேனே!

ஆண்டுகள்

இருநூறோ முன்நூறோ

முன் பின் பிறவாமல்

இன்று

இப்பொழுது

பிறந்திருப்பதற்காக

பெருமகிழ்ச்சியும்

அப்பா பிழைத்தேன் என்ற

பெரு நிம்மதியும்

தினம் தோறும்

அடைந்ததை

அறியும்

எந்தன் நாள்காட்டிகள்.

 

உந்தன் மூச்சு காற்றும்

நீ பேசிய பேச்சும்

கலந்திருப்பதால்

வளிமண்டலத்தை

நான் நேசித்த கதையை

நன்கறியும்

என் நாசி தாங்கும்

மூக்குத்தி.

 

உன் பாதம் பட்ட

கல்லும்,

நீ பிறந்த ஊர்

மண்ணும்

பத்திரபடுத்தபட்டிருப்பதின்

காரணத்தை நன்கறியும்

என் அலமாரியின் கண்ணாடி.

 

இங்கே இரவு

அங்கே பகல்

அவன் என்ன செய்து கொண்டிருப்பான்

என இரவுதோறும்

இடையில் எழுந்தமர்ந்ததை

நன்கறியும்

எனது கல்லூரி மேஜை.

 

இவ்வுலகிற்கும்

எனக்கும்

இருந்த எல்லா தொடர்பும்

நீ என்றானதால்

சுற்றம்

உற்றம்

நட்பு

துறந்து

தனிமையில் நான்

சரணடைந்த காரணத்தை

சரியாக அறியும்

படைத்த தெய்வம்.

 

இப்படியாய்

எட்டு வருடம் நான் காத்திருக்க

இனி இந்தியா வர வழியில்லை

என்ற தகவல் தந்தாய்

நன்றி.

 

இரண்டு தலைமுறைகள்

கண்டிருப்பாய்

நீ

 

நீல மலைகள்

நிலவொளி

அழகென்று

கற்பித்தவனை

காப்பாயாக

என்றபடி

தனிமரமாய்

கடைசி மூச்சில்

நானிருப்பதை

அறிவாயா நீ?

 

இளம் காதலி

இதயம் மாறவென்று

இறக்கும் தருவாயில்

வரமாட்டேன் இந்தியா

என வரைந்த மடல்

வந்து சேரும் முன்

மறைந்துவிட்டான்

மன்னனவன்

அரைநூற்றாண்டு

ஆகுது இன்று

அறிந்திடுவாய்

பெண்ணே

மூச்சு நின்றவுடன்.

 

காதல் வைராக்கியம்

மரணத்தை போன்று

வலிமையானது.

அதன் ஒவ்வொரு வீச்சும்

வலிக்கும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.