(Reading time: 2 - 3 minutes)

வரம் - ஜான்சி

woman

முன்னுரை: சோனி டிவியின் 'தஸ்தக்' தொடரில் மறு ஒளிப்பரப்பாகிய பங்களாதேஷில் குடிகார தந்தையால் விற்கப்பட்ட16 வயது பெண் குறித்த எபிசோட் பார்த்ததன் விளைவு இக்கவிதை. 

அவள் பேசுகிறாள்.

 

உள்ளம் வலி,
உணர்வுகள் வலி,
நெஞ்சம் வலி,
ஊனுடலும் வலி,

 

என்னுடல் எனதாகி நில்லாமல்,
பிறர் வளம் சேர்க்க, வழியாகி போனதன் வலி.

 

உயிர் தந்த தந்தை ஒரு மிடறு போதைக்கு 
எனை விற்ற அவலத்தின் வலி.

 

இனி என் தாய் தங்கையை கண்கொண்டு பார்த்திடவும்
இயலாதெனும் ஏக்கம் தந்த வலி,

 

பொங்கி எழும் அழுகையை அழுதிடவும் முடியாமல் ,
அடக்கியே நித்தம் நெஞ்சம் வெடித்து விடுமோவென தோன்றும் வலி.

 

படித்து பட்டங்கள் பல பெற்றிட வேண்டும் என்கின்ற 
எந்தன் கனவுகள் சிதைந்த வலி.

 

அண்ணா என்றே நான் அழைத்திருந்தோர்,
எனக்கு கொடுத்த கொடும் வலி.

 

எந்தன் பிணைகளை களைந்திடவும் இயலாமல், 
எனைச் சிறகொடித்து கூண்டடைத்த நிலைக் கண்டு எழும் வலி.

 

ஊர் முன் உத்தமராய் இருப்போர் 
எனக்கு வக்கிரமாய் காட்டிய வலி.

 

என் உடலோடு கருவறையும் 
அசுத்தமாக்கிய வலி.

 

ஊர் திரும்பி ஒருவேளை என் தாய் முகம் நான் கண்டாலும்,
வாழ்நாள் வரை எனை வாழவும் விடுமோ?  தேளெனக் கொட்டும் இவ்வலி.

 

ஆதித்தொழிலழிய, 
தன் இணைத் தவிர்த்து பிற பெண்ணை நாடும் ஆண்கள் நிலை மாற,
இழி நிலையில் பெண்கள் புதையும் தீங்கொழிய,
இறையே நீ ஓர் வரம் தருவாய்.

உரிமையில்லா பெண்ணை இச்சிக்கும் மாந்தர் ,
அக்கணமே உயிரிழக்கும் நிலைத் தருவாய்.

 

இவ்வரம் தருவாய்- அதை
இக்கணம் தருவாய்.

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.