(Reading time: 3 - 5 minutes)

கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 49 - மௌனமே இதயத்தின் விடையா….!!!! - மீரா ராம்

Ilam poovai nenjil

நீல நிற வானில் ஆங்காங்கே

கருந்திரள்கள் பெருகி கோட்டையை

சுற்றி வளைத்திடும் போராட்டம் அதன் நகர்வில்…

தாகம் தீர்த்துவைப்பதற்கே மழைமேகமாய்

உருவெடுத்திருக்கிறேன் என முழங்குகிறது இடியாய்…

ஏதேதோ எண்ணங்களில் மூழ்கி இருந்தவளை

அந்த பெரும் சத்தம் நனவுலகுக்கு இழுத்து வந்தது…

திண்ணையின் ஓரத்தில் சற்று தள்ளி அமர்ந்து கொண்டபடி

வானத்தை பார்க்கையில், ஆங்காங்கே மின்னலின் ரேகைகளும்

வாத்தியங்களாய் இடி முழக்கங்களும் அறியமுடிந்தது…

மழை பெய்திடுமோ?... கேள்வியை எனக்குள்

கேட்டு முடிப்பதற்குள் என் நெற்றியில் வந்து வீழ்ந்தது

மழைக்காதலின் முதல் துளி சட்டென…

மண் வாசம் நாசியை வருட ஆரம்பிக்க,

அழகான மழைத் தூரல் நிலமகளைத் தீண்டி சிதற

கண்கள் இரண்டும் அந்த ரம்யமான சூழலில் மயங்கிட

கைகள் இரண்டும் முழங்கால்களை மடித்து பிடித்துக்கொள்ள

கன்னம் அதில் வைத்து நான் சாய்ந்திட்ட வேளை

என் உள்ளத்தில் உன் நினைவுச் சிதறல் இனிதே ஆரம்பித்தது…

அதில் நான் நனைந்து நீந்தி வெளிவரவே விரும்பா

மோன நிலையில் நான் மூழ்கி மூழ்கி திளைத்திட

சட்டென என் செவி உணர்ந்த சத்தத்தில்

திடுக்கிட்டு விழிதிறந்தேன் நான் அந்நொடியே…

தடதடவென உன் இருசக்கரவாகன சத்தம் தெருவிற்குள் கேட்டிட

அடுத்த கணமே விழிகளில் ஒர் உற்சாகம் குடிகொண்டது வேகமாய்…

இன்னும் சில விநாடிகளே என மனமுரைக்க,

இதயமோ படபடத்து அடித்துக்கொண்டது எனக்குள்…

மின்னல் வேகத்தில் கடந்திடுவாயோ… நினைத்த மாத்திரத்தில்

மெல்ல என் வீட்டை கடந்து சென்றாய் நீ நிதானமாய்…

உதட்டில் ஒட்டிக்கொண்ட என் புன்னகை நீள,

விழிகளோ உன்னை அளவெடுத்தது அவசரமே இல்லாது…

நெஞ்சுக்குள் காதல் ஊற்றுப்போல் பெருக,

அதில் சலசலப்பின்றி காணாமல் போனேன் நான் மிச்சமே இல்லாது…

என் கண் பார்வையிலிருந்து விலகும் வரை ரசித்தேன்

என்னைக் கடந்து போகும் உன்னையே…

புள்ளியாய் நீ மறைந்து போன பின்பும்

இதழில் உனக்கான குறுநகையும்

மனதில் உனக்கான காதலும் பெருக

வெட்கச்சிரிப்புடன் அகன்றேன் நான் வாசலிலிருந்து…

இன்னும் எத்தனை நாள் இத்தவிப்பு……

இதற்கெல்லாம் என்று விமோக்ஷனம் கிட்டும்?...

அழுந்த வெளிவந்த சுவாசமும்

என்னைக் கொல்லாமல் கொன்று கேட்டிட,

இதழ்திறவா நிலையில் நானும்….

என்னையும் அறியா நிலையில் நீயும்… எனில்…

மௌனமே இதயத்தின் விடையா?...

பூ மலரும்

Ilam poovai nenjil 48

{kunena_discuss:1088}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.