(Reading time: 2 - 3 minutes)

உறவுக்கு பெயரிடாதே - புவனேஸ்வரி

கலங்கும் உன் விழிகளை பார்த்தால்

தூள் தூளாய் நொறுங்கும் என் இதயம்

இந்த உறவுக்கு பெயரிடாதே !

 

உன் வரவை எதிர்பார்த்தே

என் நாட்களின் விடியல் காத்திருக்கும்

இந்த உறவுக்கு பெயரிடாதே!

 

நீ பிறரிடம் காட்டும் கோபத்திற்கு காரணம் சொல்லும்  -மனம்

 என் மீது கோபப்படும்போது மட்டும்  வெள்ளை கோடி காட்டி கெஞ்சும்

இந்த உறவுக்கு பெயரிடாதே !

 

உன் மகிழ்ச்சியின் தாக்கமே

என் புன்னகையின் காரணமாகும்

இந்த உறவுக்கு பெயரிடாதே !

 

உன் புன்னகையின் உறைவிடத்திலேதான்

என் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்

இந்த உறவுக்கு பெயரிடாதே!

 

நீ விலகி போகும்போது நரகமாகும் உலகம்

நீ அருகில் வந்ததும் சுவர்க்கமாய் மாறிவிடும்

இந்த உறவுக்கு பெயரிடாதே!

 

நீ  போ என்று சொன்னதுமே அதை  கேட்கபோவதில்லை

வா என்று அழைப்பதற்கு நான் உன்னை விட்டு தூரம் நிற்கவும் இல்லை

இந்த உறவுக்கு பெயரிடாதே !

 

உன்னை திட்டுவதற்கு தினம் நூறு வார்த்தைகள் கோர்ப்பேன்

உன்னை யாரும் திட்டுவதற்கு இடம் தர மாட்டேன்

இந்த உறவுக்கு பெயரிடாதே !

 

உன்னை பற்றி நான் நினைப்பதும் இல்லை

உன்னை ஒரு கணமேனும் மறப்பதும் இல்லை

இந்த உறவுக்கு பெயரிடாதே !

 

உன்னிடம் தோற்க எண்ணமில்லை

உன் தோல்வியை காண ஆசையுமில்லை

இந்த உறவுக்கு பெயரிடாதே !

 

உன்னிடம் வாய் பேச வார்த்தையும் இல்லை

மௌனமாய் உரையாட பொறுமையும் இல்லை

இந்த உறவுக்கு பெயரிடாதே !

 

ஏழேழு பிறவியும் நீ வேண்டும்

உன் துயரங்கள் தாங்க நான் வேண்டும்

இந்த உறவுக்கு பெயரிடாதே ...!

 

மனித வாழ்வில் உறவுகள் மிக நுணுக்கமானவை. மனதை வருடும் சக்தியும், அதை கூறு போடும் சக்தியும் உறவுகளுக்கு  உண்டு .. மனம் உடைக்க உறவு உண்டு என்றால், மடி தாங்கவும் ஒரு உறவு இருக்கிறது .. இந்த கவிதை தாய்- மகன், தந்தை - மகள், கணவன்- மனைவி, காதலன் - காதலி, அண்ணன்- தங்கை, தோழன்- தோழி இப்படி யாருக்கு வேண்டுமானாலும் பொருந்தும் என்பது என் கருத்து .. :) சில்சீ யில் கவிதை எழுத தூண்டிய என் தோழனுக்கு இந்த கவிதையை சமர்பிக்கிறேன் 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.