(Reading time: 2 - 3 minutes)

சின்ன சின்ன ஆசைகள் - புவனேஸ்வரி

பூக்கள் எல்லாம் பேச வேண்டும் !

காற்றெல்லாம் பாட வேண்டும் !

அருவிகள் எல்லாம்  ஆட வேண்டும் !

குருவிகள் நம் வீட்டில் வாழ வேண்டும் !

 

கட்டி அணைக்கும் மழை வேண்டும் !

படமெடுக்கும் மின்னல் வேண்டும் !

பயம் போக்கும் இடி வேண்டும் !

நான் நனைவதை தடுக்காத சூழல் வேண்டும் !

 

வீசும் காற்றுக்குள் இசை வேண்டும் !

பேசுவதெல்லாம் தமிழாக வேண்டும் !

கேட்பது எல்லாம் மெய்யாயிருத்தல்  வேண்டும் !

சந்தேகம் காணாத சுற்றம் வேண்டும் !

 

பிரிவு இல்லா நட்பு வேண்டும் !

துறவு இல்லா உறவுகள் வேண்டும் !

அடிமை படுத்தாத ஆண் வேண்டும் !

அவனை போற்றி பாடிடும் பெண்ணாக வேண்டும் !

 

பசுமையை தாங்கிய நிலம் வேண்டும் !

பசுக்கள் மீதும் கருணை வேண்டும் !

இயற்கையோடு ஒன்றிட வேண்டும் !

செயற்கைக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் !

 

தினம் தினம் புதிதொரு நட்பு வேண்டும் !

புன்னகை தேசத்தில் உலவிட வேண்டும் !

சுயநலமில்லாத உள்ளம் வேண்டும் !

சுரப்பது அன்பாய் இருத்தல் வேண்டும் !

 

ஜாதிகள் ஜ்வாலையால் எரித்திட வேண்டும் !

இனம் மறந்து இணையும் இதயம் வேண்டும் !

மதங்களை சமப்படுத்தும் பார்வை வேண்டும் !

உயிரை உயிராய் மதிக்க வேண்டும் !

 

எழுதுகோளை  துறக்காத விரல்கள் வேண்டும் !

எண்ணங்களுக்கு உயிர் தர வேண்டும் !

தமிழ் பேசுவதில் திமிர் வேண்டும் !

உயிர்பிரியும் வேளையிலும் தமிழ்ப்பற்று வேண்டும் !

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.