(Reading time: 3 - 6 minutes)

மனைவியே மகளாகிடு - புவனேஸ்வரி

என்னை கரம் பிடித்து

அன்பால் சிறைப்பிடித்த என் கணவனே,

 

Manaiviye Magalagiduஒரே வீட்டில் இருந்தப்படியே

உன் மனைவி எழுதும் காதல் கடிதம் !

 

உயிரே , நீயும் நானும் சேர்ந்துதான் முடிவெடுத்தோம்

நமது மகள் ஓரிரு வருடங்களுக்கு பிறகு பிறக்கட்டும் என்று !

 

திருமண வாழ்க்கையை இருவரும் மட்டும்

தனித்து ரசித்து வாழ்ந்து இன்புற்றிருப்போம் என்று !

 

ஆனால் இன்று நான் மனம் மாறினேன் அன்பே

காரணம் என் உடன்பிறப்பின் மரணம்!

 

உன்னை மணந்தப்பின்  உலகையே மறந்திருந்தேன் நான்

பாவங்களை பார்க்காத சித்தார்த்தன் போல !

 

உன்னை மணந்தப்பின்  நான் கண்ணீரையே மறந்துவிட்டேன்

உலகத்தில் துன்பமும் இருக்கிறது என்பதை மறந்தே போயிருந்தேன் !

 

இனிய கனவில் மிதந்தவளை  உலுக்கி எழுப்பியது

என் உடன்பிறப்பின் மரணம் !

 

என்னைவிட இளையவன் இன்று

பூமாலை சூடிய புகைப்படமாய் மாறிவிட்டான் !

 

வாழ்வின் நிதர்சனமும்  பிரிவின் துயரும்

 என்னை அதிகம் சிந்திக்க வைக்கிறது !

 

மரணம் என்பது மாற்ற முடியாத ஒன்றல்லவா ?

இன்று அவன் , நாளை நாம் !

 

என்றால் , நானும் ஒரு நாள் உன்னை பிரிந்துவிடுவேனா ?

உயிரை உலுக்குகிறது மரண பயம் !

 

உலகை நீங்கிவிடுவேன் என்று அஞ்சவில்லை

நானின்றி நீ என் செய்வாய் என்ற பதற்றம் தான் !

 

இன்பமோ துன்பமோ

அதை வார்த்தையால் சொல்ல தெரியாதவன் நீ !

 

பசித்தாலும் கூட , நானாய்

அழைக்கும்வரை அமைதியாய் இருப்பவன் நீ !

 

காய்ச்சல் என்றாலும் கூட கடமை தவற மாட்டாய் – ஆனால்

 அலுவகத்திற்கு தேவையான பொருட்களை அடிக்கடி மறந்துவிடுவாய் !

 

கையில் கடிகாரம் இருந்தும்

நேரம் பார்க்க செல்போனை தேடுவாய் !

 

கோபமாய் ஓரிரு வார்த்தைகள் உதிர்த்து விட்டு

மருண்ட விழிகளுடன் மன்னிப்பும் கேட்பாய் !

 

திடீர் மௌனமும் திடீர் குதூகலமும்

உனது அடையாளங்கள் !

 

அனுதினமும் நீ கண்விழிப்பதில் தொடங்கி

இரவு  நிலவோடு என்னையும் ரசித்து அணைக்கும்வரை,

 

நான் உன்னை சார்ந்திருப்பது போலதானே

நீயும் என்னை சார்ந்திருக்கிறாய்!

 

நானின்றி நீ என்செய்வாய் ?

என்னை தவிர உன்னை அதிகம் புரிந்தவர் யார் ?

 

உன் கதகதப்பில் விழி மூடிட

உன் உளறல்களை சேகரிக்க ,

 

உன் மௌனத்தில் மொழி பெயர்க்க

உன் கண்ணீரை துடைத்திட ,

 

உன் தேடல்களை மீட்டு கொடுக்க

உன் தோளில்  தட்டி கொடுக்க ,

 

உன் மடியில் உறக்கம் தொலைக்க

உன் மார்பில் முகம் புதைக்க ,

 

உன் கரம் பற்றி நடந்திட

உன் கால்விரல் நகங்களை சீர்திருத்த ,

 

உன் குறும்புத்தனத்தை தூண்டிவிட

உன் கோபத்தையும் ரசித்திட ,

 

உன் ஆறுதல்களை வாங்கிக்கொள்ள

உன் ஆதங்கத்தை தாங்கிக்கொள்ள  ,

 

என்னைத்தவிர யார் இருக்கிறார்கள் ?

என்னைவிட யாரால் உன்னை உணர்ந்து கொள்ள முடியும் ?

 

அதனால்தான் கேட்கிறேன்

என்னைபோலவே உன்னை உயிராய் நேசிக்கும் ஒரு மகள் வேண்டும் !

 

தாயுமானவன் உன்னை

தாயை போல தாங்கிடுவாள் நம்மகள் !

 

என் கருவறையில் அவள் அவதரிக்கும்

தருணங்களிலே அவளது கடமைகளை எடுத்துரைப்பேன் !

 

உன் மௌனபாஷைகளை அவளுக்கும் கற்றுத் தருவேன்

உன் கோபங்களை புன்னகையை மாறிடும் என் குரும்புத்தனத்தை அவளுக்கு சீதனமாக்குவேன் !

 

இதற்காகவே கேட்கிறேன்

இமைபோல் உன்னை காக்க  போகும் நமது இனியவளை !

வரம் கிட்டுமா ?

 

(கடிதம் படித்த கணவனின் பதில் )

 

அவசியமில்லை இத்தனை வேதனை !

உன்னை உயிராய் தரித்து விட்ட எனது உடலுக்கு தெரியும் !

நீயில்லா உலகில் எனக்கும் இடமில்லை என்று !

கவலையை விட்டுவிட்டு நீயே எனது மகளாகவும் மாறிடு கண்ணே !

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.