(Reading time: 2 - 4 minutes)
India Independence

பொங்கல் 2020 ஸ்பெஷல் கவிதை - யாரிவன்? யாரிவன்?.. வணக்கத்திற்குரியவன்.. - தங்கமணி சுவாமினாதன்

வருடத்தில் ஓர் நாளும்..

விடுப்பெடுக்காதிருப்பவன்..

வானத்தில் கீழ்த்திசையில்..

வழக்கமாய் வருபவன்..

அனைத்து வளங்களையும்..

அள்ளித்தான் தருபவன்..

இவனின்றி வாழுமோ?..

அவனியில் உயிரினம்..

காடும் மலையும் நதியும் கழனியும்

இவன் பார்வைப் பட்டால்தான்..

பயன்பாட்டைப் பெற்றிடும்..

பூமியில் நிகழும்..

அசைவுகள் அனைத்துமே..

இவனுக்குத் தெரியாமல்..

நடப்பது எங்கனம்?

மனிதனின் வாழ்க்கையைச்..

சொல்லுமே ஜாதகம்..

ஜாதக கட்டத்தில்..

பனிரெண்டு ராசிகள்..

ராசிகள் பனிரெண்டில்..

சிம்மராசி இவன்ராசி..

தனிமனித ஜாதகத்தில்--இவன்..

உச்சத்தில் இருந்திட்டால்..

பேருந்து நடத்துனரும்..

உச்சமாய் ஜொலிக்கலாம்..

டீக்கடைக்காரரும்..

பக்கோடா விற்பவரும்..

மண்வெட்டி பிடிப்பவரும்..

செங்கல்லை சுமப்பவரும்..

வெள்ளாவி வைப்பவரும்..

காலணி தைப்பவரும்..ஏன்..

பிச்சை எடுப்பவரும்..

எத்தொழில் செய்பவரும்..

நாட்டின் PM மாய் CM மாய்..

முதல் குடிமகனாய்..ஆவதெலாம்

எளிதான காரியமே..

உச்சமோ நீசமோ..

வாழ்க்கை..இவன் காட்டும்..

                           பாதையிலே..

இவனுக்கில்லை..

என்றைக்கும் முடிவு..

யாரிவன்?..யாரிவன்?..

இவனேதான் ஆதவன்..

வையத்தில் நமையெல்லாம்..

வாழவைக்கும் பகலவன்..

வையோன் இவன் பாதம்..

பணிதல் நம் கடமை..

தைத்திங்கள் முதலாம் நாள்..

செங்கதிரோன் இவனுக்கு..

நன்றி சொல்லல் நம் மரபு..

மரபு திரியாமல்..

முன்னோர் சொன்னது போல்..

இன்று தைத்திங்கள்..

முதல்நாளாம் ' திருநாளில்'..

இனிக்கும் பொங்கலோடு..

செங்கரும்பும் பழவகையும்..

மஞ்சளும் இஞ்சியும்..

மங்கலப் பொருளனைத்தும்..

மகிழ்வோடு நாம் படைத்து..

இவன்.. நாமங்கள் பலசொல்லி..

'பொங்கலோ பொங்கலென்று'

கூவிக்கொண்டாடி..

கும்பிட்டு மகிழ்ந்திடுவோம்..

**வாருங்கள் அன்பர்களே**

உரக்கச் சொல்லிடுவோம்..

'பொங்கலோ பொங்கல்..

        பொங்கலோ..பொங்கலென்று'.

அன்பார்ந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.