(Reading time: 2 - 4 minutes)

பார்வை... - தங்கமணி சுவாமினாதன்

தாயின் கருவறையில்-சேயாய்

இருந்த போது....

அவ்விடம் இருட்டா? வெளிச்சமா?

சேய்க்குத் தெரியாது..

கருவறை நீங்கி பூமிக்கு வந்த பின்னே..

இருட்டெது,ஒளியெது..

சிசுயேதும் அறியாது..

மாதம் மூன்றானால் மழலை..

தாய் முகம் பார்க்குமாம்..

நான் தாயைப் பார்த்தேனா-தாயின்

முகத்தைப் பார்த்தேனா..

அது எனெக்குத் தெரியாது..

ஒரு வயது ஆகையில்-ஓரடி வைத்திட

ஆசையாய்த் தாயுமே வாவென அழைத்திட

திசையெது தெரியாமல் தடுக்கி நான்

விழுந்திட..ஒளியில்லாக் கண்களென..

மருத்துவர் சொல்லிட..

அழுகையின் ஆட்சியங்கே ஆரம்பமானது

பால் வெண்மை யென்பர்..

சோறும் வெண்மையென்பர்..

பாலைக் குடித்தாலும் சோற்றை உண்டாலும்

ருசி மட்டும் புரிகிறது..நிறம் புரியவில்லை..

வானமும் கடலும் நீலமென்பர்..

குருதியும் கதிரவனும் சிகப்பு என்பர்..

புல்லும்,இலையும் பச்சை என்பர்..

வானவில்லில் ஏழு நிறங்களென்பர்..

எதனையும் என்போன்றோர் கண்டதில்லை

எந்த நிறத்தையும் நாங்கள் அறிந்ததில்லை..

தாயோ தந்தையோ அண்ணனோ,அக்காவோ

தம்பியோ,தங்கையோ,உற்றாரோ,மற்றவரோ..

எவர் முகமும் நாங்கள் பார்த்ததில்லை..

எங்கள் முகத்தையே நாங்கள் கண்டதில்லை..

தாயும் தந்தையும் நல்லவர்தாம்-நாங்கள்

படிக்க உறு துணை தந்தவர்தாம்..

படித்துப் பட்டம் பெற்றோம்...

பார்வையற்ற பட்டதாரிகளெனப்

பெயரும் பெற்றோம்..

ஐயா..பார்வையுள்ள மனிதர்களே..

நீங்கள் நல்லவர்தாம்..இதயம் உள்ளவர்தாம்..

உங்களில் சிலபேர் இதயம் அற்றவறோ?

ஐயா பெரியோரே..நீங்கள் எமைக் கண்டு

பாபப் பட வேண்டாம்..

பண்பாடாய்ப் பேசுங்கள்..

இரக்கப் பட வேண்டாம்..

இதமாய் னடவுங்கள்..

உபகாரம் செய்ய வேண்டாம்..

உதாசீனம் செய்யாதீர்..

எங்களுக்கும் கண்களுண்டு-ஆனால்

பார்வைதான் அவற்றிலில்லை..

எங்களுக்கும் மனது உண்டு-அதில்

பாசமுண்டு,ஆசையுண்டு-எங்கள்

உழைப்பால் நாங்கள் வாழ..

தீராத வேட்கை உண்டு..

ஆதலால் னாங்கள் அரசிடம் கேட்பதெல்லாம்

நாங்கள் யார் நிழலிலும் ஒண்டி வாழா..

வாழ்க்கை வாழ..ஓர் அரசுப் பணியும் ஊதியமும்..

நாங்கள் பிச்சையாய்க் கேட்கவில்லை..

உரிமையைக் கேட்கின்றோம்..

மனிதம் உள்ள மனிதர்களே..

பார்வையுள்ள உறவுகளே..

பணிக்காகப் போராடும் எங்களை

வாழ்த்துங்களேன்..நாங்கள் வெற்றிபெற..

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.