(Reading time: 3 - 5 minutes)

ஒரு பாட்டியின் தாலாட்டு... - தங்கமணி சுவாமினாதன்

Baby sleep

மகன் பிறந்த நிமிடம்--மனம்..

காணும் மகிழ்வை விட..

பேரன் பிறந்த செய்தி கேட்டு..

அலையடிக்கும் மகிழ்ச்சி..

அளவில் மிகப் பெரியது..

ஆம் உணர்ந்து பார்த்தால்..

உண்மை புரியும்..

அனுபவித்தால்..

அருமை தெரியும்..

பேரனோ,பேத்தியோ..

குடும்ப வாரிசது..

வாழையடி வாழையது..

குட்டிப் பாப்பாவைத்..

தொட்டுப்பார்த்து..

தொட்டகையால்..

பட்ட மரத்தைத்.. 

தட்டிக் கொடுக்க..

பட்ட மரமும்...

பட்டெனப் பூக்குமே..

காய்க்குமே..பழுக்குமே..

காலம் காலமாய் வாழுமே...

கண்ணே கண்மணியே..

கண்ணன் தந்த சீதனமே..

உனை..அம்மா அடித்தாளோ..

அல்லிப்பூச் செண்டாலே..

மாமா அடித்தாரோ..

மல்லிப்பூ சரத்தாலே..

அத்தை அடித்தாரோ..

அரைஞாண் கயிற்றாலே..

கண்ணே என் கண்மணியே..

யாரடிச்சு நீ அழற..?

அடிச்சார சொல்லியழு..

அழ நீ வாய் திறந்தால்..

அகிலம் தெரியுதடா..

மெலிதாய் உன் இதழ் சிரிக்க..

சிந்தை மகிழுதடா..

உன் இதழோர பால் முத்து..

தாய்மையைப் போற்றுதடா..

கண்ணே கண்மணியே..

கண்ணுறங்கு..கண்ணுறங்கு..

நான் பாடும் தாலாட்டை..

உன் தந்தைக்கும்..அத்தைக்கும்..

தினம் பாடிய தமிழ்ப் பாட்டை..

இன்றைக்கும் பாடிடுவேன்..

இதைக் கேட்டுக் கண்மூடி..

இனிதாக நீ தூங்கு..

"துவாரகாபுரி பட்டணமாம்..",

சதுரங்கத்தால் மேடையாம்..

ஸ்வாமி வாசம் பண்ணுகிற..

சப்ரகூட மஞ்சமாம்..

ரத்னம் இழைத்த மேடைகளாம்..

லஷ்மியுடன் சேர்வையாம்..

நித்திய மங்கலம் முழங்கும்..

நீலவண்ணன் சோலையாம்..

யானைப் பந்தி குதிரைப் பந்தி..

அணி அணியாகச் செல்லுமாம்..

எங்கும் உள்ளத் தேவர் கூட்டம்..

அரும்பு மலர்ச் சொரியுமாம்..

கிஷ்ணா..கிஷ்ணா என்றே மயில்கள்..

நர்த்தனங்கள் ஆடுமாம்..

நாராயணா என்றே கிளிகள்..

நாலா திக்கிலும் பறக்குமாம்..(துவாரகாபுரி)...

தாலாட்டை முடிப்பதற்குள்..

பேரா நீ தூங்கி விட்டாய்..

பாட்டியின் குரல் கேட்டு..

பயந்து நீ தூங்கினாயோ..?

தமிழ் பாட்டு நீ கேட்டு..

மகிழ்ந்து நீ உறங்கினாயோ..?

கண்ணே என் கண்மணியே..

கண்ணுறங்கு..கண்ணுறங்கு...

 

அன்புப் பிள்ளைகள் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.என் பேரனுக்குத் தாலாட்டுப் பாட சில்ஸீயை சுயனலத்தோடு பயன் படுத்துவதாக எண்ண வேண்டாம்.அப்படியெல்லாம் இல்லை. நான் எனக்கு பேரன் பிறந்துள்ளதாக அன்புக்குரிய சில்ஸீக்கு மெயிலில் தெரிவித்தவுடன் உடனடியாக சில்ஸீ தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு.. வாருங்கள் வாழ்த்துவோம்..என்ற அழைப்பினையும் அறிவிக்க என் அன்புப் பிள்ளைகள்..தேன்மொழி,சுபஸ்ரீ,சித்ரா பொண்ணு, ஜான்ஸி,சித்ரா வி.,அன்னா ஸ்வீட்டி,தேவி,ஸ்ரீஜெயந்தி,கிருத்திகா,உஷா,வத்சலா...அனைவரும் மிகுந்த அன்புள்ளத்தோடு,மனம் திறந்து என் பேரனையும்,என்னையும்,என் குடும்பத்தையும் வாழ்த்தியிருக்கிறார்கள்.பிள்ளைகளே உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை பல கோடி முறை தெரிவித்துக்கொள்கிறேன்.நன்றி..நன்றி..நன்றி..சில்ஸீக்கும் என் அன்பு+நன்றி. இப் பாட்டியின் தாலாட்டைப் படித்த அனைவருக்கும் நன்றி...  

நீலவண்ணப் பாடல் வரிகளுக்கு ஒரு ராகம் உண்டு.அதைத் தெரியப்படுத்த முடியவில்லை

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.