(Reading time: 2 - 3 minutes)

கவிதை - தை பொறந்தால் வழி பிறக்கும்..தங்கமே..தங்கம்... - தங்கமணி சுவாமினாதன்

Pongal

 

ஆதி மனிதன் ஆலயம் அறிந்ததில்லை..

உருவ வழிபாடும் அறிந்தானில்லை..

மரம், மலை,நதி,வானத்துச் சூரியனை..

காணும் தெய்வங்களாய் கையெடுத்து

வணங்கியவன்..

மின்னணு ஆளுகைக்குள் அகப்பட்ட நாமும்தான்..

அவற்றை... வணங்கும் வழக்கத்தை..

இன்றும் மறக்கவில்லை..

நீரின்றி அமையாது உலகு..

உதிக்கும் சூரியன் இல்லாது.. வாழுமோ உயிரு?..

கதிரவன் கரங்கள் படாதுபோனால்..

கழனியில்.. செழித்து வளருமோ நட்டுவைத்த...பயிரு?..

சூரிய குடுபத்தில் ஓர் அங்கம்.. பூமி..

நமைக் காக்கின்ற அதுவன்றி வேறேது சாமி?

நம் கண்ணுக்குத் தெரிகின்ற துணைவன்..

அவன் இன,மொழி, மதமென ஏதுமில்லா.. இறைவன்..

வருடத்தில் ஓர் நாளில்... அவனை..

நன்றி சொல்லி வணங்குதல்.. அனைவர்க்கும் கடமை..

இன்று "தை"மாதம் பிறக்கின்ற வேளை..

கதிரவனைக் கும்பிட்டு..பச்சரிசி-வெல்லத்தோடு..

பாங்காய் பொங்கல் வைத்து..பால்,பழம்,பூக்களோடு..

கட்டிக் கரும்பும்,இஞ்சியும்,மஞ்சளும்.. இனிதே படைத்து..

பகலவன் புகழ் பாடி அவன் திருவடி தொழுது நின்று..

சக மனிதரோடு பகிர்ந்துண்டு மகிழ்ந்திட்டால்..

வாழ்வு சிறந்திடுமே..வளங்கள் பெருகிடுமே..

நாடு செழித்திடுமே..நன்மை விளைந்திடுமே..

வாருங்கள் தோழியரே..வானத்துச் சூரியனை..

வணங்கி மகிழ்ந்திடுவோம்.."பொங்கலோ பொங்கலென்று"

கூவிக் களித்திடுவோம்..குலவையிட்டு வாழ்த்திடுவோம்..

 

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.