(Reading time: 3 - 6 minutes)

மனைவிக்குப் பிறந்தநாள் பரிசு - விசயநரசிம்மன்

அன்பு மனையாளே ஆருயிரே காதலியே

இன்பம் நிறைக்கும் இனியவளே - உன்பாலென்

 

gift

நெஞ்சுறும் காதலை நேயத்தை நல்லதமிழ்

கொஞ்சிடும் வெண்பாவில் கூட்டியே, - வஞ்சமெலாம்

 

செய்யும் கரியவிரு சேல்விழியால் என்மனத்தை

உய்யும் வழியற்(று) உறுத்துவதும், - ஐயம்

 

சிறிதளவும் இல்லாச் சிநேகத்தால் உள்ளம்

பறிகொண்டு நீபடுத்தும் பாடும், - குறிகொண்டு

 

வம்பிற் கிழுக்கும் விளையாட்டும், மனத்தினையும்

கம்பிக்க வைக்கும் கலகமும், - அம்பிட்டு …………………5

 

வீழ்த்தற்போ லுஞ்சொல்லை வீசி மனக்கதவின்

தாழ்த்திற வாதநீள் சண்டையும், - வாழ்த்திடும்

 

வள்ளுவர் சொன்ன நுணுக்கத்தை வன்மையால்

எள்ளிடும் ஊடலின் இம்சையும், - உள்ளியே

 

பொய்யின் புகழும், புரிந்திடும் வாழ்வதன்

மெய்யும் கலந்து மிகையின்றி - செய்திடும்

 

பாவிது கண்மணியே பாரில்நீ வந்துதித்த

நாளினில் நல்லப் பரிசாக - ஆய

 

இருபத்தி யொன்பதுநல் ஆண்டிற்கும் ஒன்றாய்

இருபத்தி யொன்பதுநல் கண்ணி – இருத்தி …………………10

 

நலிவில்லாக் காதல் நலத்தை இனிய

கலிவெண்பா வாகக் கடிதம் - பொலிவுறவே

 

வாழும் தமிழாலே வாழ்த்தும் மரபோடே

சூழும் நலமெல்லாம் சூழ்கென - ஏழேழ்

 

பிறப்பிலும் என்னைப் பிரியாளா யாகி

இறப்பிலும் நீங்குதல் இல்லா - உறவில்

 

நிறைகவே நின்னை உணர்ந்திடும் உணர்வே

உறைகவென் உள்ளத்தின் உள்ளே - மறைகநம்

 

ஊடலும் ஊடலால் உள்சுடும் சொற்களைத்

தேடிடும் நம்கோவத் தீத்தீயும் - வாடுக …………………15

 

வாட்டமும் வாட்டும் வருத்தமும் கூடுகநம்

நாட்டமும் நட்பும் நலமனைத்தும் - ஈட்டியென

 

பாயும் பெருவிழிப் பார்வையும் பார்வையிலே

தோயும் மதுவுமென் தோளின்மேல் - சாயும்

 

நலமும் நலமுண் பவழ இதழும்

மலரும் முகத்தா மரையும் - கலக்கும்

 

விரல்தா மரையும் விரலால் அளைக்கும்

அறலின்மென் கூந்தல் அலையும் - நிரநிரலாய்

 

முத்துக்கள் வைத்த முறுவலும் அம்முறுவல்

பத்திக்கும் பச்சை மனமுமென - நித்தமுநான் …………………20

 

கண்டுகேட்(டு) உண்டுயிர்த்(து) உற்றும் அறியவும்

பண்டுபுதி(து) என்ற பகுப்புகள் - என்றும்

 

தெரியாத அன்பில் திளைக்கவும் கொஞ்சம்

நெரிக்காத ஊடலிடை நிற்க - முரியாத

 

இல்லற இன்பம் இயங்கவும் முன்னோர்கள்

சொல்லற மெல்லாமும் சூழவும் - நல்லாய்,

 

கல்வெட்டில் வாழ்ந்து கவிவாழ்ந்து ஓலைகளின்

சொல்வெட்டில் வாழ்ந்து சுடர்விட்டுப் - பல்வெட்டுக்

 

காகிதமும் வாழ்ந்து கணினிவரை வாழ்ந்திருக்கும்

மாகதிநல் செந்தமிழ்போல் வாழ்கவே, – பாகெனவே …………………25

 

வாழ்க்கை இனித்திட வாழ்க,பகல் வானமென

வாழ்க்கை பொலிந்திட வாழ்க,நிதம் - கூழ்க்கொடை

 

ஆற்றும் பொழுதின் அகமூர் அமைதியை

ஏற்ற மனத்தோடே என்றென்றும் - மாற்றமுறும்

 

வாழ்வினில் நன்மையே மாறாது வாய்த்துநீ

தாழ்விலா தென்றென்றும் தழைத்தே - ஆழ்வுறும்

 

என்காதல் நெஞ்சாம் இனியதவி(சு) ஏறியே

என்றென்றும் ஆள்க இனிது! …………………29

 

[வெண்பா]

 

உள்ளம் நிறைந்தாட்(கு) ஒருபரிசாய் யாத்தேன்நான்

கள்ளை நிகர்க்கும் கலிவெண்பா - உள்ளம்

நிறைந்தவளும் வாழ்க நிகரில்லா தென்றும்

நிறைந்ததமிழ் போலே நிலத்து!

 

அருஞ்சொற்பொருள்

3: உய்யும் - தப்பிக்கும் (உய்வு - விடுபடுதல், மோட்சம்!), ஐயம் - சந்தேகம்,

5: கம்பிக்க வைத்தல் - நடுங்க வைத்தல்,

7: வள்ளுவர் சொன்ன நுணுக்கம் - புலவிநுணுக்கம் அதிகாரம் (ஊடல் செய்யும் நுட்பம்), உள்ளியே - மனசில் நினைத்தே,

9: பார் - உலகம், பாரில் வந்து உதித்த நாள் - பிறந்தநாள்,

10: கண்ணி - இப்பாடலில் இரண்டிரண்டாக வரும் அடிகளுக்குப் பெயர் (கலிவெண்பா இப்படித்தான் அமைக்கப்படும்! 12 அடிக்கு மேல் நீளும் வெண்பாக்கள் ‘கலிவெண்பா’ எனப்படும்!),

18, 19: இவற்றில் என் மனைவியின் பெயர் வரத்தொடுத்துள்ளேன் (தாமரை),

21: பண்டு - பழையது,

24: தமிழின் சிறப்பு - எனக்கு மிக பிடித்த கண்ணி இது, :-)

25: பாகு - வெல்லப் பாகு (இனிமையைக் குறித்தது,)

26, 27: கூழ்க்கொடை - அன்னதானம்,

29: தவிசு - சிம்மாசனம் (நெஞ்சம் தவிசானது உருவகம்)

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.