(Reading time: 1 - 2 minutes)

எமன் பேசுகிறேன் - விசயநரசிம்மன்

bike

என்ன அவசரமோ?

      என்னை அடைவதற்கு?

மின்னல் வேகத்தில் – உயிரை

      விட்டு மாய்வதற்கு?

 

பெற்றவள் கண்ணீரைப்

      பெருக்கி அழுவதையும்

உற்றவள் உடைவதையும் – காண

      உனக்கிந்த அவசரமோ?

 

சாலைகள் உனக்குமட்டும்

      சமைக்கப் பட்டனவாய்

மூளை இல்லாமல் – மகனே

      முடிவே செய்தாயோ!

 

மேதினி பொதுவென்றார்

      மேல்கீழ் இலையென்றார்

வீதிக்கும் அதுபொருந்தும் – மகனே

      விட்டுக்கொடுத்து வாழ்!

 

விதிகள் மீறுவதே

      வீரம் என்பாயோ?

அதில்தான் ஆனந்தம் – என்றே

      அவசரம் கொண்டாயோ?

 

வண்டியில் உட்கார்ந்தால்

      வானத்தில் பறப்பதுபோல்

எண்ணம் கொள்வாயோ? – எமன்நான்

      இருப்பதை மறப்பாயோ?

 

உன்னுயிர் ஒருபொருட்டாய்

      உனக்கு இல்லையெனில்

இன்னோர் உயிரையும்நீ – விபத்தில்

      இறந்திடச் செய்வாயோ?

 

உந்தன் மடமையினால்

      ஊறிய சுயநலத்தால்

எந்தன் வேலையைநீ – மடையா

      ஏற்றுக் கொள்வாயோ?

 

விதியொடு விளையாட

      வீதியில் முயலாதே!

அதைவிட உன்திறனை – காட்ட

      ஆயிரம் இடமிருக்கு!

 

சாலை விதிகளைநீ

      தவறியும் மீறாதே!

நாளையை நலமாக்கு – உலகை

      நந்த வனமாக்கு!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.