(Reading time: 2 - 3 minutes)

அவள்… - விசயநரசிம்மன்

aval

[சமநிலைச் சிந்து]

அந்தி வானென அவள்முகமே – அதில்

......அழகிய மேகக் கோலமெனச்

சிந்திக் கிடந்தென் உயிர்வாங்கும் – இருள்

......திரளெனக் கருத்த நறுங்கூந்தல்!

 

நீலக் கடலென இருவிழிகள் – அதில்

......நீந்தி எழுசெஞ் சுடரெனவே

கோலத் திருநுதல் நடுவினிலே – இடும்

......குங்குமத் திலகம் திகழ்கிறதே!

 

காலன் கைச்சிலை ஒருபுறமும் – அந்தக்

......காமனின் கருப்புவில் மறுபுறமும்

நீல விழிஎனும் அம்புகளைக் – குறி

......நீட்டி என்னுயிர் கொளநிற்கும்!

 

[சிலை – வில்; புருவங்களுக்கு உவமை]

 

தைய்ய தகதிமி தைய்யவென – இமை

......தாளம் போட்டிடத் தானாடும்

மையது உண்ட கருவிழிகள் – என்

......மனமே களமாய்ப் போராடும்!

 

மாமுன் நிரையோ இலக்கணமே* – அதை

......மாற்றுகி றோம்காண் இக்கணமே – எனத்

தாமுன் நிறையும் என்பாவில் – எனைத்

......தளைகெட வைக்கும் வெண்பாவில்!

 

ஒளியே உள்ளே வீழ்ந்தாலும் – மீண்டு

......ஓடிட இயலா கருங்குழியாய் – அவள்

விழிகள் இரண்டும் முகவெளியில் – அடர்

......விசையொடு என்னை விழுங்கினவே!

 

[கருங்குழி – Black Hole, முகவெளி – (உருவகம்) முகமாகிய வெளி (Space), விசை – Force (Here, Gravity)]

 

கவியென நானும் கிறுக்குவதை – அவள்

......கண்கள் எள்ளி நகையாடும் – கடை

விழிகள் மொழியும் கவியோடு – என்

......விலையில் வார்த்தை பகையாடும்!

 

- அவள்

விழிகள் மொழியும் கவியோடு – என்

......விலையில் வார்த்தை பகையாடும்!

 

[விலையில் – விலை இல்லாத]

 

*’மாமுன் நிரை’ என்பது இயற்சீர் வெண்டளை என்னும் தளை. வெண்பாவில் அமையும் ஒரு இலக்கணம். மற்றது ‘விளமுன் நேர்’.

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.