(Reading time: 2 - 3 minutes)

பேசித் தொ(ல்)லை! - விசயநரசிம்மன்

[பாரதியாரின் “தீராத விளையாட்டுப் பிள்ளை...” பாடலின் மெட்டு]

[பல்லவி] 

சீரான விஞ்ஞான பிள்ளை - செல்போன்

Cell phoneதெருவிலே மக்களுக்(கு) ஓயாத தொல்லை...

 

[சரணங்கள்]

கண்களை அதன்மீதே வைப்பான் - தெருவில்

கவனமே வைக்காமல் கண்டபடி நடப்பான்

முன்னவும் பின்னவும் போகும் - மக்கள்

முகஞ்சு ளிப்பதனைத் தான் அறியாதே போவான்...

 

இல்லத்திற்(கு) ஓர்விருந்து வந்தால் - அவரை

இன்முகங் காட்டிவர வேற்றலும் இன்றி

செல்போனைக் கட்டிக்கொண்(டு) அழுவான் - அதனை

செல்லக் கடவுளென்(று) எண்ணியே தொழுவான்...

(சீரான...)

 

நல்லச் செவிகளிலே தோட்டைச் - சில

நங்கையர்க்(கு) அணிந்திடும் வழக்கமே போச்சே

செல்லக் கைப்பேசி அதுவே - அவர்

செவிகளில் தோடெனத் தங்கிடலும் ஆச்சே...

 

அந்தோ அதில்மணிக் கணக்காய் - நிதம்

அலுக்காமல் பேசிடும் அன்பரே கேளும்

வெந்தே அவிந்திடுமாம் மூளை - அது

வெளியேற்றும் நுண்ணலைக் கதிர்வீச்சினாலே...

(சீரான...)

 

பாய்ந்திடும் இரயில் தண்டவாளம் - அதனைப்

பார்த்துக் கடக்காமல் செல்பேசிக் கொண்டு

மாய்ந்திடும் மக்கள் பலர் இன்று - எமனின்

மாற்றென்று வந்ததோ கைப்பேசி? நன்று!

 

அன்றாடும் பயணிக்கும் சாலை - அதிலே

அடிக்கடி கைப்பேசி பலி வாங்கு(து) ஆளை

இன்னமும் பலநூறு தொல்லை - செல்லின்

இன்னலைச் சொல்லிடின் அதற்குண்டோ எல்லை?

(சீரான...)

 

அன்றோர் ஆதாமின் வீழ்ச்சி - அங்கு

அரவென வந்தவச் சாத்தானின் சதியாம்

இன்று பலகோடி ஆதாம் - தமக்(கு)

இந்தக் கைப்பேசியே வீழ்ச்சிக்குக் கதியாம்

 

மலரினும் மெலிதான காதல் - அதை

மலிவான பொருளாக்கி மாணவர்க்(கு) அளிக்கும்

விலைமிக்க கைப்பேசித் தூதன் - அதன்

விலையாக பருவத்தைத் தருகிறான் மூடன்...

(சீரான...)

 

அறிவியல் அழிவிற்காய் இல்லை - அந்த

அறிவியல் செடியிலே பூத்தநல் முல்லை

செறிவான செல்பேசி அதனைப் - பல

சிறப்புற பயன்கொளல் நமக்கெல்லாம் நன்று...

 

[முடிப்பு]

சீரான விஞ்ஞான பிள்ளை – செல்லைத்

      திறமறிந்(து) ஆட்கொளின் தொல்லையே இல்லை!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.