(Reading time: 2 - 4 minutes)

கவிதை - இறுதி புலம்பல் - ரம்யா

drunkard

அழாதே என்னுயிரே அழாதே!

மரணப்படுக்கையில் கிடக்கிறேன்

மணித்துளிகள் எண்ணுகிறேன் என் வாழ்வின்

மணித்துளிகள் எண்ணுகிறேன்

காதலால் உனை விரட்டி கல்யாணம் முடித்தேன்

கல்யாண பந்தலிலேயே உன் உறவுகளையும் முறித்தேன்

காதல் வேகமோ காமத்தாகமோ

இடைவெளி இல்லாமல் இரண்டு பிஞ்சு கொடுத்துவிட்டேன்

மூன்றாவதையும் மூச்சுவிடும் முன் முடித்துவிட்டேன்

 

அளவான வீடு அன்பான துணைவி

அழகான குழந்தைகள் அதற்கேற்ற வரவு

நிம்மதியாய் தான்வாழ்ந்திருக்கலாம்

புல்லுருவியாய் இந்த புதுப்பழக்கம் புகாது இருந்திருந்தால்

வேளை சுமை மறக்க வாயில் சிலதுளி ஊற்றிவிட்டேன்

ஆனால் அது வயிற்றில் வளர்ந்து என் வாழ்வை குடித்தது

சில துளி பல துளி ஆனது

அதன் போதையில் சுகித்திருந்தேன்

உன் மீது காதல் மறந்து வன் காமம் வளர்த்தது

அப்போதும் போதை சுகித்தேன்

சமுதாயத்தில் பேரை சூறையாடியது

அப்போதும் போதை சுகித்தேன்

வேலை தொலைத்து முழுநேரம்

என்னை புசித்தது

அப்போதும் போதை சுகித்தேன்

உலகமறியா மலர் உன்னை பணம் ஈட்டும் இயந்திரமாக்கியது

அப்போதும் போதை சுகித்தேன்

இராணியாய் உனை வாழ வைப்பேன்

என் காதல் வார்த்தைகள் காற்றில் பறந்தது

சொந்த காலில் நிற்பேன் என் சவால்கள் செத்து என் கால்கள்

உன் தோள் சாய்வில் தள்ளாடி துவண்டது

உன் கண்ணீரும் கவலைகளும்

கெஞ்சலும் கொஞ்சலும்

சினிமா படமாய் பார்த்து விட்டு

இனி இல்லை எனக்கூறிச்சென்று

நடுநிசியில் வீதியில் வீழ்ந்து கிடந்தேன்

சுகமாய் நினைத்த அந்த போதை சுமையாய் போனது

 வயிற்றில் உளை ஏற்றி உணவு குழாய் வேக

குறுதியாய் வெளிவந்த என் வலி உணர்ந்த அன்று

வலி எனது தவிப்பு உனது

காலன் வந்து காத்திருப்பது தெரிந்தும்

காதல் பூ நீ போராட்டம் நடத்தினாய்

புற்றுநோயாய் புல்லரித்த என்னை எத்தனை தூரம் சுமந்துவிட்டாய்

இனியாவது ஒய்வு கொள் கண்மணியே

செய்தவினைப்பயன் என சுற்றத்தார் கூறிநிற்க

உன்னவன் ஆயள் நீள ஆண்டவனிடம் மடிபிச்சை கேட்கிறாய்

என்னை திண்ணும் நோயினும் சுடுகிறதடி உன் ஏக்கம்

இறைவா!

மறுபிறவி எனக்கு கொடு

இவள் மலர்பாதம் வருடும் செருப்பாய் பிறவி கொடு

இதோ போகிறேன்

உன் மெல்லிய கைகள் என் கண்ணீர் துடைக்க

உன் இதழ் என் உச்சி வருட

என் கண்ணில் உன் உருவம்  ஏந்தி நான் போ……..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.