(Reading time: 2 - 3 minutes)

கவிதை - நீதி தேவதையே நீதி தேவையே - குணா

angelJustice

சதை தின்ற சாத்தானை 
சகதியில் தள்ளு ... 

தீபம் ஏற்ற இருப்பவளை 
தீயாய் எரியவிட்ட 
தீயவனை தீர்த்து விடு ... 

கும்பிட வேண்டியவளை 
நம்பிட வைத்து 
சிதைத்த 
அக்கொடியவர்களை கொளுத்தி விடு ... 

பாசம் நேசம் வலை பிண்ணி 
பாசாங்கு செய்து 
பலியிட்ட இவர்களை 
எல்லோர் முன்னிலையிலும் 
பலியிடு... 

இரக்கமற்ற இவர்களின் 
இதயத்தை இடம் மாற்று ... 

கண்ணீர் விட்டு கதறியும் 
கண்டுகொள்வதே இவர்களை 
காணாமல் செய்து விடு ... 

சுய இன்பம் காண 
சுதந்திரம் திருடிய இவர்களை 
சுயநினைவின்றி சுற்றவிடு ... 
கொஞ்சமும் யோசிக்காமல் சுட்டுவிட்டு ... 

 

வக்கிரத்தின் உச்சி 
சென்ற இவர்களை 
வதம் செய்து 
புனிதம் கொள்... 

அரபு தேசங்களின் 
தண்டனை பட்டியலை 
இறக்குமதி செய்து 
இக்கயவர்களை ஏற்றுமதி செய்து விடு ... 

ஆடை கழற்றி 
அழகு பார்த்தவனை 
ஆழியில் தள்ளி 
நீ அழகு பார் ... 

கட்டாயப்படுத்தி 
கலங்கப்படுத்தியவனை 
கட்டுப்பாடின்றி 
தண்டித்து தீர் ... 

படம் பிடித்து 
பரிமாறியவனை 
பாடையில் ஏற்றி 
சுடு காடு சேர் ... 

இனி ஒரு 
பூ எரிக்க 
எவரும் புறப்படாதவாறு 
இவர்களை 
புதைத்து 
அறிவிப்பு பலகையில் 
"அறுத்து விடுவோம் " 
என்று பொறித்து விடு ... 

நீதி தேவதையே 
இவர்கள் 
பின்புலம் எதுவாயினும் 
அதை பின்தள்ளி 
நீதியை வென்றெடுத்து 
நிர்வாணமாக்கப்பட்ட 
உன் பிள்ளைகளுக்கு 
புது ஆடை தைத்துக் கொடு ... 

இம்முறை 
சிறிதேனும் 
தவறு நடந்தால் 
மறைக்கப்பட்டால் 
மறுக்கப்பட்டால் 
காப்பாற்றப்பட்டால் 
மனதில் வைத்துக் கொள் 
நீதி தேவதையே 
உன்னையும் ஒரு நாள் 
நிர்வாணப்படுத்தி 
நிழற்படம் எடுத்து விடுவார்கள் .....

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.