(Reading time: 2 - 3 minutes)

கவிதை - உங்களுக்கான கடிதம் - ஜெப மலர்

மதிப்பிற்குரிய பெரு மக்களே,

 அகழ்வாரை தாங்கும் நிலம் என்று

வள்ளுவனால் வர்ணிக்கப்பட்டு

வாக்கு தவறும் மாந்தரால் சுரண்டப்பட்டு

அழகை இழந்து பொழிவை மறந்து

வளத்தை தொலைத்து உயிரை துறந்து

நிர்கதியாய் வீசியெறியப்படுகிறேன்

பலாத்காரம் செய்யப்பட்ட பச்சிளம் குழந்தை போல..

என்னை மீட்க யார் வருவார்?

விஞ்ஞானியாய் டாக்டராய் இஞ்சினியராய் குழந்தைகளை

ஆக்கத்துடிக்கும் பெற்றோரே

நீங்களும் உங்கள் சந்ததியும்

உண்டு உயிரோடு வாழ

நான் வேண்டும் என்பதை மறந்து விட்டீரோ?

சுகபோகமாய் குடியிருக்க கட்டும் வீட்டிற்கு 

ஆணிவேரான அஸ்திபாரத்தை

என் இதயத்திற்குள் அல்லவா நுழைக்க வேண்டும்

தொண்டை வரளும் போது குடிக்கும் நீரை

என் இரத்தத்திலிருந்து அல்லவா உறிஞ்சி எடுக்க வேண்டும்

மறந்து போனீரா?.. அல்லது... திமிர்ந்து விட்டீரா?

வரிசையாக பிள்ளைகளைப் பெற்று

வலுவற்று நிற்கும் தாயைப்போல

வளங்களை பறிகொடுத்து

நூலிழையில் ஊசலாடுகிறேன்...

என் நிலை கண்டு பூமித்தாய்

தன் வாயைத்திறந்து கொள்ளும் முன்னே

விழித்துக் கொள்ளுங்கள் மானிடரே...

தலைமை ஏற்று நடத்த நல்ல

தலைவர்களை துளிர்க்க விடுங்கள்

வரும் சந்ததி வளமோடு வாழ

என்னையும் வாழ விடுங்கள்...

என் மடியில் தாங்கி சீராட்டி வளர்ப்பேன்

உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளையும்

வாக்கு மறக்க நான் வாக்கு கேட்கவில்லை

வழிகாட்டுகிறேன் நீங்கள் வாழ....

                                      இப்படிக்கு,

                               உங்கள் பாரதம்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.