(Reading time: 2 - 3 minutes)

கவிதை - என் மனதில் - ஜெப மலர்

உள்ளம் என்ற ரகசிய அறையின்

தாழ்ப்பாள் உடைத்து நுழைந்து விட்டாய்...

என் பொக்கிஷமாய் நான் காத்த

கபடற்ற அன்பை திருடி

எங்கேயோ சென்று விட்டாய் நீ...

கள்வனே உன் காலடி தொடர்ந்து வந்து

களவு சென்ற என் பொருளை மீட்டிட

கடினமாய் போரிட்டேன் வார்த்தை என்னும் வாள் வீசி...

உன் கூர்விழி பார்வையாலே

என் வாளை உடைத்தெறிந்து

உன் கருவிழிகளுக்குள் சிறை செய்தாய் என்னை...

திடமான என் எதிர் விழி பார்வையில்

திடுக்கிட்டு போன நீ

அன்பென்னும் வேல் எறிந்து

ஆழ்மனதை துளைத்து விட்டாய்...

சிம்ம சொப்பனாய் இருந்த என் மனதில்

சிங்காசனமிட்டு அமர்ந்திட்டாய் நீ...

வீர பெண்ணாய் வலம் வந்தவள்

காதல் கனவுகள் பல மலர

பேதையாய் மாறிப்போனேனோ? 

வேல் நுனியில் விஷம் இருந்ததை அறியா

மடந்தையாய் மாறிப்போனேனோ? 

நேசத்தோடு அன்பை ஊற்றி

நட்டு வளர்த்த காதல் செடியை

விஷம் தடவிய வார்த்தையென்னும்

கூர் வாள் கொண்டு வெட்டுகிறாயே நீ...

எதிர்த்து நிற்த துணிவில்லாமல்

துவண்டு போய் கிடக்கிறேனே நான்...

கை ஊன்றி எழுந்து நிற்க வலுவுமில்லை...

கண் திறந்து உன்னை நோக்க திடமுமில்லை...

உன் பிரிவை தாங்க சக்தியுமில்லை...

வாழ்க்கை கேட்டு யாசிக்க விருப்பமுமில்லை....

பைத்தியமாய் புலம்புகிறேனே

பாவி என் மேல் இரக்கமில்லையோ...

உள்ளம் நொறுங்கிய வலியால் 

கன்னம் தழுவுகிறது விழிநீர்...

மனக்கோட்டை தகர்ந்து நொறுங்கி

மண்மேடாய் மாறிப்போனதே...

விழுந்த கோட்டையினுள் நானும்

தொலைந்து போனால் நலமாகுமே...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.