(Reading time: 2 - 4 minutes)

கவிதை - தென்னிந்திய அறுசுவை விருந்து - இரா.இராம்கி

பாசிப்பருப்பும் , கடலைப்பருப்பும் பாங்குறவே பாலுடன் கலந்து,

முந்திரி ஏலம் சேர்த்து, முத்தாய்ப்பாய் முதலில் இலையில் ஈடப்பட்ட திவ்யமான பாயாசம்;

 

இன்று உறைந்த தயிரில், சுவையாக தயாரான அழகு வெள்ளரிப் பச்சடி;

 

 பருப்புப் போட்டு, தனியாவும் தேங்காயும் 

மிளகாயும் மிடுக்காய் அரைத்து அற்புதமாய் உருவான, ஒரு முருங்கை  சாம்பார்;

 

வாயில் எச்சில் ஊற வைக்கும் ஒரு வசந்தமான வத்தல்குழம்பு;

 

புளிக்காத மோரில் புதிதாய் காய்த்த வெண்டையில் ஒரு மோகமோர்க்குழம்பு;

 

ரசனையோடு உண்ணும் அறுசுவை விருந்து,  ரசமாய் உடலில் சேர, செரிமானம் சேர்க்கும்,  மல்லி மணம் கமழும், மாண்புடை ரசம்;

 

நினைத்தாலே இனிக்கும் ,முதியோர் இதழ்களையும் ஈர்க்கும்,முந்திரி திராட்சை முன்னே நெளியவும், பின்னே ஒளியவும், நெய்யொழுகும் இனியதொரு சர்க்கரைப்பொங்கல்;

 

லேசாக எண்ணெய் விட்டு, நன்றாக வேக வைத்து,  நாவிற்கு நல்லதொரு அவரைப் பொறியல்;

 

தாராளமாய் எண்ணெய் விட்டு,நன்கு பொறித்தாற் போல் வதக்கி எடுத்த ஒரு உருளை பொறியல்;

 

விதையெல்லாம் நீக்கி, வித்தியாசமாய் செய்யப்பட்டு, நம் இலையில் ஈடப்பட்ட பூசணிக்காய் கூட்டு;

 

லேசான கசப்புடன், நம்மைக் கவரும் பாகற்காய் வருவல்;

 

அப்பொழுது பொறித்து அப்பொழுதே இலையில் விழுந்த

" மொறு மொறு" அப்பளம்;

 

மாதுளங்கனி முத்துகளை தூவி,

திராட்சை கனிகளையும்

சேர்த்து, கெட்டித் தயிரில் தயாரான ஒரு தனிச்சுவை தயிர்சாதம்; தொட்டுக்கொள்ள, மாஇஞ்சியும் மாங்காய் ஊறுகாயும்;

 

வகை வகையாய் சுவைத்த வாய்க்கு,  கொழுந்து வெற்றிலையும், பாக்கும்;

 

சற்றே  நா சிவக்க,

திண்ணையில்  சில நிமிடம்  வெட்டிக் கதைகள் பேச,

பல நிமிடம் வெறுந்தரையில் ஒய்யாரமாய் ஓய்வெடுக்க, வேறென்ன வேண்டும் வாழ்வில்!!!!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.